காலம் கடந்த ஞானம்
எல்.கார்த்திக்
வழக்கம்போல் அன்றும் நடந்த சண்டை, சுரேஷிற்கு எரிச்சலையே தந்தது. அவன் வயதுச் சிறுவர்கள், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பதையே சொர்க்கமாக நினைக்க, அவனோ வீட்டிற்கு வெளியில் இருப்பதையே வரமாக எண்ணினான்.
ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவன் வீடும் சொர்க்கமாகதான் இருந்தது. ஏதோ ஒரு சிறு பிரச்சனையில் தொடங்கிய அவன் பெற்றோரின் சண்டை நீடித்துக்கொண்டே செல்ல, பலியானது சுரேஷ்தான். அவனளவில் ஏதோ சண்டை என்று மட்டுமே புரிந்தது. அவனின் பதின்மூன்று வயதிற்கு அதற்கு மேல் எட்டவில்லை.
வீட்டிற்கு வந்தால், இருவரும் இவனிடம் பேசாமல் இருப்பதும், வெளியில் எங்கும் அவனை அவன் தந்தை அழைத்துச் செல்லாமல் இருப்பதும் அவனுக்குச் சோகத்தை உண்டுபண்ணியது.
அன்று அப்படிதான், அவன் அம்மாவிடம் “அம்மா! வெளில போலாமா? நாம எல்லாரும் சேர்ந்து வெளில போய் எவ்ளோ நாளாச்சு?” என்றுகேட்டவனுக்கு, கோபம் தெறிக்க ராணியிடமிருந்து பதில் வந்தது.
“அது ஒண்ணுதான் குறைச்சல். போடா போய்ப் படிக்கற வழியப் பாரு. படிச்சு முடிச்சா கம்ப்யூட்டர்ல கேம் விளையாடு. நேரம் காலம் தெரியாம வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டு”.
முகத்தை தொங்கப் போட்டுக்கிட்டு வெளியில் வந்த சுரேஷ், தினேஷிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க, அட்சரம் மாறாமல், ராணி சொன்ன அதே பதில் வந்தது.
வாடிய முகத்துடன் வந்தவன், தொலைக்காட்சியை இயக்கினான். கார்ட்டூன் சேனல்களை மாற்றிக்கொண்டு வந்தான். எதுவும் பிடிக்காமல் எதோ ஒரு அழுகை மெகாத் தொடரை பார்க்கத் தொடங்கினான். அதில் வந்தக் காட்சி, அவன் மனத்தில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டே இருந்தது. அன்று ஒரு முடிவுடன் படுக்கச் சென்றான்.
மறுநாள் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, பள்ளிக்குச் செல்லவில்லை. ராணி கொடுத்த மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்குபவன் போல் நடித்தான். இருவரும் அலுவலகம் செல்லும் வரை காத்திருந்தவன், பின் எழுந்தான். தன் பள்ளி பையில் இருந்து நோட்டை எடுத்தவன் எதையோ எழுதினான். அவன் மனத்தில் முதல்நாள் பார்த்த சீரியல் நினைவிற்கு வர, எழுதிய நோட்டை ஹாலில் வைத்துவிட்டு அடுக்ககத்தின் மாடியை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
ஒரு வாரம் கழித்து, புகைப்படமாய்க் காட்சி அளித்துக்கொண்டிருந்த சுரேஷின் முன், தினேஷும் ராணியும் ‘இனி சண்டைப் போட மாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
உண்மை ! தங்களையே நினைத்திருந்து குழந்தைகளின் மனநிலையை கவனிக்காவிட்டால் இப்படித்தான்
அன்புடன்
தமிழ்த்தேனீ
இன்று நெறைய வீடுகளில் இத்தகைய போக்கு உள்ளது வருந்தத் தக்கது . நன்றி அய்யா