பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 21
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
பேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தின் மறுகேள்வி:
ஒருங்குறியில் கிரந்தப் பிரச்சினையில், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, கிரந்தமே கூடாது. மற்றொன்று கிரந்தத்திற்கு இடம் அளிப்பதை எதிர்க்கவில்லை, மாறாக, சமசுகிருதத்தில் இல்லாத ஒலிகளுக்கு அல்லது ஒலியன்களுக்கு, கிரந்தத்தில் ஏன் இடம் அளிக்கவேண்டும்? அதுவும் தமிழில் உள்ள வரிவடிவங்களை ஏன் சேர்க்கவேண்டும் என்பதே கேள்வி.
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
இந்தக் கேள்விக்கு நான் ஏற்கெனவே எழுதிய பதில்களில் விடை இருக்கிறது. இருப்பினும் கொஞ்சம் விவரமாக இங்கே எழுதுகிறேன்.
ரோமன் எழுத்துகளோடு கூடுதல் குறியீடுகள் (diacritic marks) சேர்த்து புனல் க. முருகையனின் பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு என்னும் நூல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள், சைவப் பக்தி இலக்கியத்தைப் படிக்க உதவும் பொருட்டு இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதே போல், சோழர் காலத்தில் தமிழ் எழுத்தும் பேச்சும் தெரியாதவர்கள் தென்கிழக்காசியக் கோயில்களில் தமிழ்ப் பக்திப் பாடல்களை மனப்பாடம் செய்து பாட, தமிழ் கிரந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இன்று இந்திய அரசு தமிழை கிரந்தத்தில் எழுதும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்னும் உள்நோக்கத்தோடு ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளோடு தமிழ் எழுத்துகளைச் சேர்க்கப் பரிந்துரைத்திருக்கிறது என்பதே குற்றச்சாட்டு.
இந்த உள்நோக்கத்தை ஏகாதிபத்தியம் என்று சாடுபவர்கள் தங்கள் வாதத்தில் தகவல் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசின் கோரிக்கையில் ழ, ற, ன என்ற மூன்று எழுத்துகளும் எகர ஒகரத்தின் உயிர்க்குறிகளான ஒற்றைக் கொம்பும் இரட்டைக் கொம்பும் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து கிரந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஏழு எழுத்துகள் அல்ல. எகரமும் ஒகரமும் கிரந்த எழுத்துகளில் புள்ளியிட்டு எழுதப்படும்.
கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் இருப்பது புதிதாகத் துவங்கும் வழக்கம் இல்லை. கிரந்தத்தில் ஏற்கெனவே தமிழ் எழுத்துகளின் ஒரே அல்லது ஒத்த வடிவத்தைக் கொண்ட உ, ஊ, ய, வ, ண, (த, ந) என்ற எழுத்துகள் இருக்கின்றன. தமிழ் எழுத்தும் கிரந்த எழுத்தும் பிராமி எழுத்து என்ற ஒரே மூலத்திலிருந்து வளர்ந்த வரலாறு, இந்த ஒப்புமைக்குக் காரணமாக இருக்கலாம்; அல்லது கிரந்தம் தமிழிலிருந்து முன்காலத்தில் கடன் வாங்கியிருக்கலாம்.
தமிழ் எழுத்துகளின் மீது தமிழர்களுக்குக் காப்பரிமை இருக்கிறது என்று சொல்ல முடியாது. பகரத்தின் உரசொலியாக /f/ என்ற ரோமன் எழுத்தைத் தமிழ் எடுத்துக்கொண்டால் ஆங்கிலேயர்கள் வழக்குப் போட முடியாது. கிரந்தத்திற்கும் தமிழுக்கும் மட்டும் பங்காளிச் சண்டை!
மேலே காட்டிய உதாரணத்தில் தமிழை ரோமன் எழுத்துகளில் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக எழுதுவதைப் போல, தமிழைக் கிரந்த எழுத்துகளில் எழுத எந்தப் பயன்பாடும் இல்லை. தமிழ் பேசவும் ரோமன் எழுதவும் தெரிந்தவர்கள் இருப்பது போல், தமிழ் பேசவும் கிரந்தம் எழுதவும் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.
தமிழ் எழுத்துக்கு மாற்று எழுத்தாக கிரந்த எழுத்தைக் கொண்டுவருவது நடைமுறைச் சாத்தியமற்றது. இந்தியாவில் ஒரு சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்து, ஒரு பொது எழுத்து முறையைக் கத்திமுனையில் புகுத்தினால் அது தேவநாகரியாகவோ, ரோமனாகவோ இருக்குமே ஒழிய கிரந்தமாக இருக்காது. இந்திய அரசுக்கு தேவநாகரியைப் பரப்புவதில் உள்ள ஆர்வத்தில் ஒரு சிறு பகுதிகூட கிரந்தத்தைப் பரப்புவதில் இருக்க முடியாது.
பின் ஏன் இந்திய அரசு கிரந்தத்தில் சில தமிழ் எழுத்துகளைச் சேர்க்க ஒத்துக்கொள்கிறது? கிரந்த வல்லுநர்களில் இரண்டு பிரிவினர் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் கிரந்தத்தை ஒரு மரபு எழுத்து முறையாகவே (heritage script) பார்க்கிறார்கள். அவர்கள் உள்ள கிரந்தத்தில் ஒரு மாற்றமும் செய்ய விரும்புவதில்லை. மற்றொரு பிரிவினர் கிரந்தத்தை நவீன எழுத்து முறை ஆக்க விரும்புகிறார்கள். கிரந்தம் ஒரு மொழி அல்ல. சமஸ்கிருதத்தை எழுத – அதிகமாகத் தமிழ்நாட்டில் எழுத – பயன்படுத்தபட்ட, பயன்படுத்தப்படும் ஒரு எழுத்து முறை.
இன்று சமஸ்கிருதத்தை நாளிதழிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பயன்படும் நவீன மொழியாக்கச் சிலர் முயற்சி செய்கிறார்கள். சமஸ்கிருதம் உள்வாங்கும் நவீனச் சொற்களை எழுத, கிரந்தத்திற்குப் புதிய எழுத்துகள் தேவைப்படும். இந்தத் தேவையையே இந்திய அரசு, தமிழக அரசின் கேள்விக்கும் கவலைக்கும் பதிலாக எழுதியிருக்கிறது. இது கிரந்தத்தை இன்று பயன்படுத்துபவர்களின் ஒரு பிரிவினரின் தேவை. இந்திய அரசு இந்தத் தேவையை நிறைவுசெய்ய விரும்புகிறது.
தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தைக் கிரந்தத்தில் எழுதும்போது தொல்காப்பியம், தமிழ் போன்ற சில பெயர்களையும், சில நபர்களின், இடங்களின் பெயர்களையும் எழுதும் தேவை ஏற்படும். அந்தப் பெயர்களில் தமிழுக்கே உரிய ஒலிகள் இருக்கும்போது அவற்றுக்கு வரிவடிவம் கொடுக்க எழுத்துகள் தேவைப்படும். புதிதாகப் படைப்பதற்குப் பதில் தமிழிலிருந்து கடன் வாங்கிக்கொள்ளலாம் என்கிறார்கள்.
கிரந்தம் நவீன எழுத்து முறை ஆக வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை கிரந்தத்தை மரபு எழுத்து முறையாகப் போற்ற வேண்டும்; அதற்கு ஒருங்குறியில் இடம் தர வேண்டும் என்பதே முக்கியம். அதை எழுத்துக் கடன் வாங்கி, நவீன எழுத்து முறையாக்க விரும்பும் கிரந்தப் பயனாளிகளைத் தடுக்க, மற்றவர்களுக்கு உரிமை இல்லை; அரசுக்கு அதிகாரம் இல்லை.
படம்: அண்ணாகண்ணன்
=====================================
(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)
தமிழைக் கிரந்தத்தில் எழுதுவதற்கான தேவை எதிர்காலத்தில் ஏற்படலாம்; ஆதலால், தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்தில் இணைத்தல் வேண்டும் என்று சொல்வது அரசியல்.
அத்தகைய அரசியலில் தவறிருப்பதாகத் தெரியவில்லை என்று சொல்வதோ வேடிக்கை.