பேரா. ந.தெய்வசுந்தரத்தின் கேள்விகள்

1

deivasundaramசென்னைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுப் பிரிவின் இயக்குநராகவும் தமிழ் மொழித் துறையின் தலைவராகவும் பணியாற்றி, ஓய்வுபெற்றவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இவர், சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலையின் கருத்துகளை ஒட்டி, மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரின் மடல் இங்கே:

==============================================

அன்புள்ள ‘வல்லமை‘ ஆசிரியர் அவர்களுக்கு,

பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களின் மடல் கண்டேன். பேராசிரியர் அவர்கள் எனது கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். கிரந்தமே வேண்டாம் என நான் கூறவில்லை. அதற்கு எனக்கு உரிமையும் கிடையாது. மொழி ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும் என்று கூறுவது எவ்வாறு கிரந்தமே வேண்டாம் என்று பொருள்படும்?

மீண்டும் கூறுகிறேன், பேராசிரியர் அவர்களுக்கு இந்திய நடுவண் அரசிடமிருந்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநருக்கு வந்துள்ள மடலில் உள்ள செய்தி, இன்னும் சரிவரத் தெரிய வரவில்லை.

27-12-2010 தேதியிட்ட அந்த மடலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“The recommendation of the experts with regard to these characters was totally based on the fact that addition of these characters in the Granthaa script will help to represent all the sounds present in North Indian as well as South Indian scripts using Grantha script”.

ஒருங்குறியில் கிரந்தப் பிரச்சினையில், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, கிரந்தமே கூடாது. மற்றொன்று கிரந்தத்திற்கு இடம் அளிப்பதை எதிர்க்கவில்லை, மாறாக, சமசுகிருதத்தில் இல்லாத ஒலிகளுக்கு அல்லது ஒலியன்களுக்கு, கிரந்தத்தில் ஏன் இடம் அளிக்கவேண்டும்? அதுவும் தமிழில் உள்ள வரிவடிவங்களை ஏன் சேர்க்கவேண்டும் என்பதே கேள்வி.

கிரந்தத்தினால் தமிழுக்கு ஆபத்து என்று நினைக்கிற தமிழ் ஆர்வலர்கள், உணர்வு வேகத்தின் காரணமாக கிரந்தமே வேண்டாம் என்று கூறுகிறார்கள். அது அனைவரின் கருத்து அல்ல. பேராசிரியர் குறிப்பிடுகிற ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரைகளில், சமசுகிருதத்தை எழுதுவதற்குக் கிரந்தம் தேவை என்றே கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால், சமசுகிருதத்தில் இல்லாத ஒலிகளுக்கு, ஒலியன்களுக்குக் கிரந்தத்தில் ஏன் இடம் கேட்கவேண்டும்? பரிந்துரையில் முன்வைக்கப்பட்டுள்ளது ஒன்று. ஆனால் இந்திய அரசின் மடலில் கூறப்பட்டுள்ள கருத்து வேறு. இது பின்வாயில் வழியாகக் கிரந்த எழுத்து, சமசுகிருதம் ஆகியவற்றின் ஆதிக்கத்தை – மொழி ஏகாதிபத்தியத்தை – புகுத்தும் செயல் இல்லையா?

மேலும் பண்டைய தமிழ் அரசர்கள் ஆட்சியில் அரசியல், சமூகக் காரணங்களால்தான் வைதீக மத ஆதிக்கம் தமிழகத்தில் ஏற்பட்டது. அதன் விளைவே சமசுகிருதத்தின் ஆதிக்கம், தமிழில் சமசுகிருதச் சொற்களின் ஊடுருவல் என்பது உண்மை. அரசியல் நோக்கம், அதற்கு மதப் பின்னணியை உருவாக்குதல், அதற்குச் சில குறிப்பிட்ட மொழிகளை முதன்மைப்படுத்துல் ஆகியவை வரலாற்றில் நடைபெற்றுள்ள  உண்மை நிகழ்வுகளாகும். அதுபோல்தான், இன்றும் அரசியல், சமூக நோக்கத்திற்காகத்தான் தற்போதைய முயற்சி நடைபெறுகிறது என்பதே நான் கூற வருவதாகும்.

இன்றைய ஏகாதிபத்திய உலகில் இன ஒடுக்குமுறையும் மொழி ஒடுக்குமுறையும் நீடிக்கின்றன. அவை பல வகைகளில் வெளிப்படுகின்றன. ஆட்சி மொழிப் பிரச்சினை, பயிற்றுமொழிப் பிரச்சினை, கிரந்தப் பிரச்சினை போன்றவையாகும். இதைத்தான் மொழி ஏகாதிபத்தியம் என்று கூறுகிறேன். மொழியியல் மாணவன் என்பதால்தான் என் மொழி மீது பிற மொழி ஆதிக்கம் கூடாது, அது போன்று என் மொழியும் பிற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று கூறுகிறேன்.

தற்போதைய பிரச்சினை, சமசுகிருதத்தைக் கணினியில் பயன்படுத்த, கிரந்தத்திற்கு இடம் கேட்கும்போது, சமசுகிருதத்தில் இல்லாத ஒலியன்களுக்குக் கிரந்தத்தில் வரிவடிவம், அதுவும் தமிழ் வடிவங்களை இணைக்கக் கேட்பது சரியா, தவறா என்பதே ஆகும். அது தவறு என்று சொல்வது மொழி வெறியாகாது. அது மொழியியல் என்ற அறிவியலுக்கும் எதிரானது அல்ல. பேராசிரியர் அவர்களே தான், ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு எழுதியுள்ள மடலில், கிரந்தத்திற்கு இடம் கேட்கும்போது, அதில் தமிழின் ஏழு வரி வடிவங்களை இணைக்கவேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார். அதைத்தானே நானும் கூறுகிறேன்.

– ந.தெய்வசுந்தரம்

==============================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *