அம்பிகாவுக்கு ஆட்டோ வழங்கிய அன்பு உள்ளங்கள்

0

அம்பிகா என்ற ஆதரவற்ற பெண்ணுக்கு நாம் அறக்கட்டளையும் சென்னை டவர்ஸ் சுழற்சங்கமும் இணைந்து ஆட்டோ (தானி) ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளன. இதன் மூலம் அவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி, தன் வாழ்க்கையை நடத்துவதற்கு நல்வழி பிறந்துள்ளது.

Ambiga_auto

‘நாம்’ என்ற தொண்டு நிறுவனம், திருமதி சுஹாசினி மணிரத்னம் தலைமையில் இயங்கி வருகிறது. சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள, படித்த மற்றும், நலிந்த பெண்களுக்கு உதவி செய்வதே இதன் நோக்கம். இதே நோக்கம் கொண்ட, உதவும் மனப்பான்மை கூடிய ஏனைய பெண்களும் இதற்கு உதவி வருகின்றனர். இவர்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் நலிந்த பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, தன்னிறைவோடு வாழ உதவி செய்யும் வகையில் கடந்த ஒரு வருடமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, 2011 பிப்ரவரி 2ஆம் தேதி, நாம் அறக்கட்டளை, சென்னை டவர்ஸ் சுழற்சங்கத்துடன் (Rotary Club of Chennai Towers) இணைந்து, அம்பிகா என்ற பெண்மணிக்கு ஆட்டோ ரிக்சா வழங்கியது. இதற்கான விழாவில், சுழற் சங்கத்தின் தலைவி ராஜி விஜயசாரதி, ஆட்டோ ரிக்சாவின் சாவியை அம்பிகாவிடம் வழங்கினார்.

அம்பிகா யார்? பத்து வருடங்களுக்கு முன்னால், 21 வயதில், இரு இளம் பெண் குழந்தைகளுடன், கணவனால் கைவிடப்பட்ட ஏழைப் பெண், அம்பிகா. ஆணாதிக்கம் நிறைந்த உலகில், இரு குழந்தைகளை ஆளாக்க வேண்டிய நிலையில், தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் செயல்பட்டார் அம்பிகா. வீட்டு வேலைகள் செய்து வந்த அம்பிகா, மற்றவர்களுக்கு முன் வாழ்ந்து காட்டலாம் என்ற வகையில், ஆட்டோ ஓட்ட முடிவு செய்தார். அவரது முயற்சியின் பயனாகத்தான் 2011 பிப்ரவரி 2ஆம் தேதி அவருக்கு ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.

ராஜி விஜயசாரதி, “நாம்” நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பைத் தந்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, ரோட்டரி சங்கம், தங்களால் இயன்ற வரையில் பெண்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகக் கூறினார். இத்தகைய நல்ல நோக்கத்துடன் கூடிய விழாவை ஏற்பாடு செய்த திருமதி சுஹாசினி மணிரத்னத்திற்கும் தன் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார்.

திருமதி சுஹாசினி மணிரத்னம் பேசுகையில், ரோட்டரியுட்ன் ‘நாம்’ இணைந்து மேலும் பெண்கள் பலருக்கு உதவ முயற்சி செய்யும் என்று கூறினார். இதுவரை 100 பெண்களுக்கு உதவி புரிந்துள்ள ‘நாம்’, பண உதவி மட்டும் அல்லாமல், நலிந்த பெண்களுக்கு அறிவுரையும் ஊக்கமும் அளிக்கும் வகையில் செயல்படும் என்றார். மருந்துச் செலவு, பள்ளி, கல்லூரிக்கான செலவுகள், எதிர்பாராத செலவுகள் போன்றவற்றைச் சமாளிக்க உதவி புரிந்துள்ள ‘நாம்’ தனது சேவையை மேலும் பரவச் செய்யும் என்று கூறினார்.

ஈர உள்ளத்துடன் எளியோர்க்கு இரங்கிய அனைத்து அன்பு உள்ளங்களையும் வல்லமை வாழ்த்துகிறது.

தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

=================================

மேலும் தொடர்புக்கு: 044 24615810 / 11/12

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *