விசாலம்

Kuththu_Vilakku

நமது ஹிந்து தர்மத்தில் எந்தப் பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் குத்து விளக்கு இடம் பெறும். குத்து விளக்கு இல்லாதவர் காமாட்சி விளக்காவது வைத்து, தீபம் ஏற்றுவது வழக்கம். திருமணத்தின் போது, தாய் வீட்டுச் சீதனமாக மணப்பெண்ணிற்கு குத்து விளக்கைக் கொடுப்பது வழக்கம்.

தை மாதம் வெள்ளிக்கிழமை மாதர்கள் எல்லோரும் கோயில்களில் நடக்கும் குத்து விளக்குப் பூஜையில் கலந்துகொள்வார்கள். குத்து விளக்கில் அம்பாளை ஆவாஹனம் செய்துகொண்டு, பின் தியானித்து, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் செய்தபடி 1008 நாமாக்கள் சொல்லியபடி, பூக்களால்
அர்ச்சனை செய்வார்கள். இதைச் செய்து வைக்கும் புரோகிதர், ஒலிபெருக்கியில் இந்தப் பூஜை செய்யும் கிரமத்தை ஒவ்வொன்றாக அழகாக எடுத்துச் சொல்ல, பெண்மணிகளும் அப்படியே செய்வார்கள். கோயில் மண்டபங்கள் பலவற்றில் இந்தப் பூஜையில் பங்குபெறும் சுமார் ஐந்நூற்றுக்கும் மேலானவர்களை நாம் காணலாம். அவர்கள் வீட்டிலிருந்து கொண்டுபோகும் பொருட்களில் குத்து விளக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த விளக்குப் பூஜையில் என்ன தத்துவம் இருக்கிறது? விளக்கு எரிந்து, அதனால் இருள் விலகி, அங்கு ஒளி பிரகாசிக்கிறது. விளக்கு தன்னையே அழித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு வெளிச்சம் தருகிறது. ஜோதியிலே அம்பாள் அருள் புரியும் ஒரு கோயில், தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் இருக்கிறது. 24 மணி நேரமும் விடாமல் தீபம் எரிந்தவண்ணம் இருக்க, அதை உன்னிப்பாகக் கவனிப்போமானால் அம்பாள் அங்கு அமர்ந்து அருள் புரிவது விளங்கும். காமாட்சி விளக்கு போல் இருக்க, அதன் கீழ்ப்பாகம் வட்ட வடிவமான பாத்திரம் போல் இருக்கிறது. பக்தர்கள் அதில் எண்ணெய் விட்ட வண்ணம் இருக்கிறார்கள். அங்கு ஸ்ரீராஜராஜேஸ்வரியும் சௌந்தர்யபூஷணியாக நின்றபடி அருள்புரிகிறாள். அங்கு ஜோதியிலேயே அன்னையைக் காண்கின்றோம்.

அக்னி புராணத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் விளக்கு ஏற்ற, பல பலன்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம்தான் ஏற்ற வேண்டும். விளக்கெண்ணெய் தீபம், குடும்பத்தில் ஒற்றுமை, தாம்பத்திய சுகம், புகழ் ஆகியவற்றை உண்டாக்கும். இலுப்ப எண்ணெயிலும் தீபம் ஏற்றலாம் .வீட்டிற்கு நலன் உண்டாகும். கடலெண்ணையில் தீபம் ஏற்றுவது உசிதமில்லை. இதனால் கடன், துக்கம், பயம், பீடை எல்லாம் வந்து ஆட்டிப் படைக்கும்.

விளக்கைத் தேய்த்துச் சுத்தப்படுத்தவும் சில நாட்கள் விதிக்கப்பட்டிருகின்றன. அவை ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகியன. செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் விளக்கினைத் துலக்கக் கூடாது.

மழலைச் செல்வம் வேண்டுபவர், வாழைத் தண்டு நூலைப் பக்குவப்படுத்தி, அதைத் திரியாக்கி, தீபம் ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். அதிக அளவில் செல்வம் வேண்டுமென்றால் வெள்ளெருக்கன் பட்டையைத் திரியாக்கி, தீபம் ஏற்ற வேண்டும். தாமரைத் தண்டுத் திரி, முன் வினைப் பாவத்தை நீக்கும். பஞ்சுத் திரி, எல்லாவற்றுக்குமே நல்லது. வீட்டில் மங்களம் உண்டாகும்

தினமும் காலையிலும் மாலையிலும் குத்து விளக்கேற்றி, மனம் ஒன்றியபடி தியானம் செய்ய, மனத்தில் இருக்கும் கொந்தளிப்புகள் அகன்று, அங்கு அமைதி நிலவும். மனச்சாந்தி கிடைக்கும்.

===================

படத்திற்கு நன்றி – பிரியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *