மகாத்மா காந்தியடிகளின் புனித இரத்தம் காசாக்கப்படுவது….?

0

 

 

சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

நான்கு வாரங்கள் ஓடி விட்டவனவா ? ஆமாம் நான்காவது மடலை உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கும் போதுதான் நான்கு வாரங்கள் ஓடி விட்டது என்பது புரிகிறது.

காலத்தின் ஒட்டம் கனரத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. எமது வாழ்க்கையின் நீளமும் குறைந்து கொண்டே போகிறது.

இந்த வேக ஓட்டத்தின் கணிப்பிலே எமது கடந்தகாலங்கள் எத்தனை வேகத்தில் ஓடியிருக்கின்றன என்பதைக் கணிக்கக் கூடியதாக இருக்கிறது.

என்னடா இவன் எதற்கு இத்தனை பீடிகை போடுகிறான் என்று நீங்கள் உங்கள் புருவத்தைச் சுருக்கி வினாவெழுப்புவது புரிகிறது.

கடந்தகாலம் தான் சரித்திரமாகிறது இந்தச் சரித்திரத்தில் இடம்பெறுபவர்கள் கோடிகளாவார் ஆனால் மக்கள் மனங்களிலே நிலையாக நிற்பவர்கள் தன்னலமின்றி சேவையாற்றியவர்களே !

சரித்திரநாயகர்களில் முன்னனியில் நிற்பவர் இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் மகாத்மா காந்தியடிகளே !

தமது அன்னை நாட்டின் விலங்கினைத் தகர்த்தெறிய அகிம்சைவழியில் அந்நாளைய காலனித்துவ அரசான இங்கிலாந்து நாட்டின் பெரும்படையையே எதிர்த்தவர் காந்தியடிகள்.

எது நம்முடையதோ அதை மட்டும் நமக்குக் கொடுத்து விடுங்கள் என தமது நாட்டு மக்களின் தார்மீக உரிமைகளுக்காக போராடியவர் காந்தியடிகள்.

தனது தேவைகளைச் சுருக்கித் தமது மக்களின் இன்னல்களை மட்டும் தமது மனதில் இருத்தி அதற்காக நாளும் பொழுதும் தன்னுடைய வாழ்வைச் செலவழித்தவர் மகாத்மா காந்தி அவர்கள்.

முதலாளித்துவம், அதீத லாபம் ஏற்படுத்துதல் போன்ற சுயலாப நோக்கங்களை அறவே வெறுத்தவர் பாரத நாட்டின் தந்தை காந்தியடிகள்.

இயற்கையை உயிராய் மதித்து ஆடம்பர வாழ்க்கையை அறவே வெறுத்து எளிமையான ஆச்சிரம வாழ்க்கையில் அமைதி கண்டவர் காந்தியடிகள்.

ஏழைகளின் சிரிப்பில் இறைவன் இருப்பதை முழுமையாக உணர்த்தியவர் காந்தி. அத்தகைய உன்னதத் தலைவரின் ஆத்மாவே சிலிர்க்கும் வகையிலான நிகழ்வொன்று இங்கிலாந்திலே கடந்த வாரம் நிகழ்ந்தது.

ஆமாம் இந்தியாவின் தந்தை காந்தியடிகளுக்குச் சொந்தமாக எதுவுமே இருக்கவில்லை. அப்படி அவரது எளிமையான தேவைகளை நிறைவேற்றிய சில அத்தியாவசிய பொருட்கள் பகிரங்க ஏலத்தில் விடப்பட்ட நிகழ்வைத்தான் குறிப்பிடுகின்றேன்.

இவ்வேலம் நடந்தது இங்கிலாந்திலே என்பதும் சரித்திரத்திலே இடம்பெறப் போவது துரதிருஷ்டமே !

கடந்த 17ம் திகதி இங்கிலாந்திலுள்ள ஸ்ரொப்ஷையர் (Shropshire) என்னும் இடத்திலுள்ள லட்லோ (Ludlow) எனும் நகரில் முல்லக் ( Mullock’s) என்னும் ஏலக் கம்பெனி மூலம் இந்தியாவின் தேசப் பிதாவிற்குச் சொந்தமான சில பொருட்களும், அவரின் ஞாபகார்த்தமான சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன.

இவ்வேலம் நடப்பது பகிரங்கமாகத் தெரிய வந்ததும் இந்தியாவின் பலபாகங்களில் இருந்தும், புலம் பெயர்ந்து வாழும் பல இந்தியர்களிடமிருந்தும் பலமான எதிர்ப்புக் கிளம்பியது.

இந்திய நாட்டு அரசினாலும், இந்திய நாட்டு மக்களினாலும் பல் உலக மக்களினாலும் புனிதமான ஒரு தலைவராக, மனிதாபிமானம் மிக்க ஒரு புரட்சிவாதியாக, சுதந்திர வேட்கை கொழுந்து விட்டெரிந்த ஒரு வீரியமிக்க அஹிம்சாவாதியாக கருதப்பட்ட தலைவரின் பிரத்தியேக உடமைப் பொருட்கள் வியாபார ரீதியில் அணுகப்பட வேண்டுமா? என்னும் கேள்வி அனைவரையும் உலுப்பியது.

அவ்வாறு ஏலத்திற்கு வந்த பொருட்கள் தான் எவை?

மகாத்மா அவர்கள் உபயோகித்த மூக்குக் கண்ணாடி. அது அவர் லண்டனில் வசிக்கும் போது தன்னுடைய மாமிசம் உண்ணா நண்பர்களைச் சந்திக்கப் போகும் போது வாங்கினார் என்று குறிப்பிடப்படுகிறது.

காந்தியுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 27 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவற்றிலே காந்தியின் பொருட்களை ஏலத்தில் விடுவதை எதிர்ப்பவர்களுக்கு மன உளைச்சலை அதிகம் ஏற்படுத்துவது மகாத்மா அவர்கள் தீவிரவாதியொருவனால் சுடப்பட்ட சோகமான நிகழ்வு நிகழ்ந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து பெறப்பட்ட மகாத்மா அவர்களின் இரத்தத்துளி தோய்ந்த ப்ல் ஒன்றும், சில மண்துகள்களும் ஆகும்.

இது மகாத்மா அவர்களின் புனித இரத்தம் காசாக்கப்படுவது போன்ற மிகவும் துயரமான நிகழ்வாகப் பலரால் பார்க்கப்படுகிறது.

பேராசை, தன்னலம் ஆகியவற்றை முற்றாக எதிர்த்த தலைவரின் இரத்தத்திற்கு விலை நிர்ணயிக்கப்படுவது போன்ற உணர்வைப் பலருக்கு ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தி அவர்களுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் 1,8 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்ஸ் விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வேலத்தையிட்டு மகாத்மா காந்தி அவர்களின் பேரனும் மற்றும் அவரது உறவினர்களும் தமது மனவருத்தத்தைத் தெரிவித்திருந்தார்கள்.

“இயற்கை மனிதனின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தியாக்கப் பொருட்களை அளிக்கிறது. ஆனால் இயற்கை என்றுமே மனிதனின் பேராசையை நிறைவேற்ற உதவுவதில்லை ” என்றார் மகாத்மா காந்தி.

இப்படியான உன்னத இலட்சியங்களை , உத்தம சிந்தனைகளை உலகுக்கு அளித்த ஒரு மாமனிதரின் உடமைகளுக்கு பொருளாதார முத்திரை குத்தித் தமது சொந்த தேவைகளுக்காக இலாபம் சம்பாதிப்பது உள்ளத்தின் மத்தியை உறுத்துகிறது.

ஆனால் சாதரணமான மனிதர்களாகிய எம்மால் பணமுதலைகளுடன் போட்டியிட முடியுமா? பணத்தை மட்டுமே மூலாதாரமாக வைத்து இயங்கும் ஒரு காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது போல இன்னும் பல நிகழ்வுகளைக் கண்ணால் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாமிருக்கிறோம்.

“பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே ” எனும் கா.மூ.ஷெரீப் அவர்களின் பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் என் பெரியதாயாரின் இல்லத்தில் முன்கூடத்தில் ஆளுயரத்திற்கு வீற்றிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் புன்னகை ததும்பும் படம் இன்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது.

என் பெரியதாயார் இறந்ததும் அந்த வீட்டிலிருந்த என்ன பொருள் தேவையென்று கேட்டதும் அந்த காந்தி மகானின் படத்தையே என் தந்தை எடுத்து வந்து எம் வீட்டு கூடத்திலும் மாட்டினார் என்று நினைக்கையில் என் நெஞ்சம் பெருமிதத்தில் பூரிக்கிறது.

மாகாத்மா காந்தி அவர்களின் படத்திற்கே யாழ்ப்பாணத்தில் பிறந்த எனக்கு இத்தகைய உணர்வுப் பூர்வமான இணைப்பு இருக்குமானால் தமது நாட்டின் தந்தை எனப் போற்றி வழிபட்ட தலைவரின் இரத்தம் தோய்ந்த பல்லினை எத்தனை ஆழமாக இந்திய மக்கள் நேசிப்பார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

முல்லாக் என்ற ஏலக் கம்பெனியினதோ அன்றி இங்கிலாந்து அரசாங்கத்தினதோ அன்றி இங்கிலாந்து மக்களினதோ தவறாக இதைக் கொள்ளமுடியாது,

இன்றைய உலகம் ஒரு வியாபார உலகம் இங்கு பணம் தான் பேசுகிறது. உணர்வுகள் இரண்டாவது இடத்தையே எடுக்கிறது. இருப்பினும் இந்தப் பொருட்கள் அமேரிக்காவில் வாழும் ஒரு இந்தியரால் வாங்கப்பட்டு இந்தியாவிற்கே திரும்ப எடுத்துச் செல்லப்படுகிறது என்ற செய்தி மனிதத்துவம் இன்னும் உலகின் மூலைகளில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது எனும் நம்பிக்கையைத் தருகிறது.

அத்தோடு இப்பொருட்கள் இந்தியாவிற்கே திரும்பக் கொண்டு வரப்படுவதில் இந்திய அரசாங்கம் பங்கு வகித்திருக்கிறது என்பதும் மனதுக்கு நிம்மதியைத் தருகிறது.

இச்செய்தி இங்கிலாந்து தேசிய மற்றும் ஊடகத்துறைகளில் வெளிவந்தபோது இதைச் சாதாரணமாகப் படித்து விட்டுச் சென்ற பலரை நானறிவேன்.

ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழன் என்னும் வகையில் மகாத்மா காந்தி என்றுமே என் மனதில் பல தாக்கங்களை பலவகைகளில் ஏற்படுத்திய ஒரு உன்னத மாமனிதர்.

அவரைப்பற்றிய எதனை ஏலத்தில் விட்டாலும், என் நெஞ்சில் இருக்கும் அவரின் பெருமதிப்பினை யாராலும் ஏலத்தில் விட முடியாது.

மீண்டும் ஒரு மடலுடன்
சக்தி சக்திதாசன்


http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

படங்களுக்கு நன்றி :

http://www.topnews.in/law/people/mahatma-gandhi

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *