தமிழ்த்தேனீ

Tamil theneeவாழ்க்கையில் முதன் முதலாக, மனசாட்சிக்கு எதிராகச் செய்த ஒரு செயல். ஆமாம், மகத்தான தவறு. ஆனால் யாருக்குமே தெரியாது, அவன் செய்த தவறு. யாரும் அவனைக் குறை கூற முடியாது. அவ்வளவு நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செய்த குற்றம். அவனாக வாயைத் திறந்து  சொன்னாலொழிய ஒரு ஈ எறும்புக்குக் கூடத் தெரியாது. அப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டாலும் மாட்டிக்கொள்வோம் என்கிற பயமே இல்லை ரமேஷுக்கு. தைரியமாக இருந்தான் அவன்.

பார்வதி அம்மாள் குடும்பத்தில் மூன்று பிள்ளைகள், மூன்று மருமகள்கள், பேரன் – பேத்திகள் என்று ஒரு குறையுமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கணவனை  இழந்து அதன் பின்னரும் தன் தன்னம்பிக்கை தளராமல் தான் பெற்ற மூன்று பிள்ளைகளையும் வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி, தலை நிமிர்ந்து நடமாடிக்கொண்டிருக்கும் பார்வதி அம்மாள் ஓர் அதிசயம்தான். ரமேஷுக்கு அவர்கள் வீட்டில் அனைவரிடமும் நல்ல விதமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆமாம், அவனுடைய அப்பா காலத்திலிருந்து அவர்கள் குடும்ப நண்பர்களாக  அந்தக் குடும்பம், பல காலமாகப் பழகி வந்தது.

ஒருநாள் அந்தப் பார்வதி அம்மா, அவனைக் கூப்பிட்டு, “டேய் ரமேஷ், உன்னை நம்பி, உன்கிட்ட ஒரு வேலையைக் கொடுக்கப் போறேன், செய்வியா?” என்றாள்.

“அதுக்கென்னம்மா, செய்யறேன். சொல்லுங்க” என்றான் ரமேஷ்.

அந்தக் குடும்பத்தில் யாருக்குமே தெரியாமல் கொஞ்சம் பணம், கிட்டத்தட்ட  ஒரு லட்ச ரூபாய். அதை யாருக்கும் தெரியாமல் வங்கியில் அவள் பேரில் போடச் சொன்னாள் பார்வதி. பணத்தையும் அவனை நம்பி ஒப்படைத்தாள்.

அதுவரை யாரிடமும் கையேந்தாமல், தனித்து நின்று உழைத்து, முன்னுக்கு வந்து, கௌரவமாக வாழ்ந்தாயிற்று. தன் அந்திமக் காரியங்களுக்குக் கூட பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது. அப்போதும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்தில் பார்வதியம்மாள் அவருடைய கணவனுக்கு வந்த பென்ஷன் பணத்தில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணம். அடடா, அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் சேர்த்துவைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள். இவ்வளவு கடமைகளையும் முடித்தும் அவன் நீட்டிய வங்கிக் காகிதங்களில் நம்பிக் கையெழுத்திட்டாள் பார்வதி அம்மாள். அப்போது கூட ரமேஷ், மனிதனாகவே இருந்தான்.

ஆனால் எப்போது அவன் மூளைக்குள் சாத்தான் புகுந்ததோ தெரியவில்லை. அந்தப் பணத்தை வங்கியில் போடாமல் தன் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான் ரமேஷ். அது வரை மனிதனாக இருந்த ரமேஷின் மூளைக்குள் ஓர் எண்ணம். இந்தப் பணத்தை நம்மிடம் கொடுத்தது யாருக்குமே தெரியாது. இதை அப்படியே அமுக்கிவிட்டால் என்ன? எந்தக் காலத்தில் தன்னால் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்று சாத்தான் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தச் சாத்தானின் குரலுக்கு ரமேஷ் செவிசாய்த்தான். கெட்டதைச் செய்யும் போது, தீய சக்திகள் உதவும் என்பது எவ்வளவு உண்மை. அவன் மனத்துக்குள் ஒரு சாத்தான் புகுந்து, அவனை ஆட்டி வைத்துக்கொண்டிருந்தது.

அந்த அம்மாள் தன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள். அவள் வைத்திருந்த நம்பிக்கை இப்படி ஒரு கீழ்த்தரமான செயலுக்குத் தன்னை ஆளாக்கும் என்று ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் குடும்பத்தாரோடு பழகுவதைத் தவிர்த்திருக்கலாமே என்று இப்போது  தோன்றுகிறது. காலம் கடந்த ஞானோதயம். தன் மேலேயே ரமேஷுக்கு வெறுப்பாயிருந்தது. அவன் செயலுக்கு உதவுவது போல் திடீரென்று யாரிடமும் இதைப் பற்றி சொல்லாமலே இருதய வெடிப்பினால் அன்று இரவே இறந்து போனாள் பார்வதி அம்மாள். அப்பாடி அந்தப் பார்வதி அம்மாளும் இறந்து போயாச்சு. இனி தான் செய்த அந்தக் காரியம் யாருக்குமே தெரியாது. ரமேஷுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

செய்தி கேள்விப்பட்டு அவர்கள் வீட்டுக்கு ஓடினான் ரமேஷ். ஆயிற்று, செய்யவேண்டிய சாங்கியங்களையெல்லாம் முடித்து, பார்வதி அம்மாளின் பூத உடலைத் தூக்கும் நேரம் வந்தது. பார்வதி அம்மாளின்  மூத்த மகன், பார்வதி அம்மாளின் உடலைத் தூக்க, ரமேஷை அழைத்து, “முன் பக்கமாகத் தூக்குப்பா, நீதான் எங்களையெல்லாவிட ரொம்ப உற்ற துணையாய் மூத்த மகன் போல எங்க அம்மாவைக் கவனிச்சே” என்றார்.

பார்வதி அம்மாளின் மூத்த மகன், “இப்போ அம்மாவோட 16 நாள் காரியங்கள் நடத்தப் பணம் வேணும். பிள்ளைகள் மூவரும் பங்கு போட்டுக்கொண்டு செய்வோம்” என்று பேசிக்கொண்டிருந்தனர்.

“ரமேஷ், உன்னைப் பத்தி அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ‘ரமேஷ் என் வயித்திலே பொறக்காத இன்னொரு மகன்’னு”  என்று கூறிவிட்டு பெருமூச்சு விட்டார் மூத்த மகன். இந்தச் சொற்களைக் கேட்டதும் ரமேஷ் மனத்தில் இருந்த சாத்தான் இறந்து போனது. பார்வதியம்மாள் உயிரோடு உலவ ஆரம்பித்தாள்.

ரமேஷ் அவனையும் அறியாமல், “நீங்க யாரும் கடசீ வரை  கஷ்டப்படக் கூடாதுன்னு நேத்திக்கிதான் என்கிட்ட ஒரு லட்ச ரூபாயைக் குடுத்து அவங்களோட கடைசீ செலவுக்கு வெச்சிக்க சொன்னாங்க. அதுக்குள்ளே இப்பிடி நம்மையெல்லாம் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டாங்களே அம்மா” என்று அழுதபடி ரமேஷ், பார்வதி அம்மாளின் உடலைத் தூக்கி, அவர்கள் கால் தன் தலையில் படுமாறு வைத்துக்கொண்டு, “அம்மா.. அம்மா..” என்று குமுறி அழுதான் ரமேஷ்.

அவன் பாவங்கள் கரைந்து, அவன் கண்களில் வழியத் தொடங்கிற்று.

கலி வெட்கியது!

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “யாருக்கும் தெரியாது

  1. மனத்தைத் தொட்ட கதை! பார்வதியம்மாவின் நம்பிக்கை வெற்றி பெற்றுவிட்டது!

  2. அவன் பாவங்கள் கரைந்து விடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. என்ன தான் இருந்தாலும், ஒரு விதவையின் சேமிப்பைக் கையாண்ட கறை, விலகாத கறை.

  3. ‘யாருக்கும் தெரியாது’ என நினைக்காதே ‘எனக்குத் தெரியும்’ என பார்வதி அம்மாளே அவன் மனதை மாற்றி விட்டுள்ளார் போலும். மனிதரை ஆட்கொள்ளும் அற்ப சபலங்களில் மாட்டியவன் முடிவில் விடுதலை பெற்றான், நல்ல வேளையாக.

    நல்ல கதை சார்.

  4. மனதில் சாத்தான் புகுந்தால் எப்படியெல்லாம் ஆட்டிப் படைகிறது. இதற்குத்தான் மனசாட்சிக்குப் பயப்பட வேண்டும் என்கிறார்கள். தவறை உணர்ந்து கண்ணீர் விட்டதால் தவறை மறப்போம், மன்னிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.