என் இனிய கணவர் எஸ். நாராயணன்

8

ஜெயலக்ஷ்மி நாராயணன்

[1999இல் தனது எழுபதாவது வயதில் ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி நாராயணன் எழுதிய நாட்குறிப்பு, எழுதிய வண்ணமே இங்கு வெளியாகியுள்ளது. ஜெயலட்சுமி நாராயணனின் மகள் வல்லி நரசிம்மன் இதனை வலையேற்றியுள்ளார். படத்தில் இருப்பவர், திரு. எஸ். நாராயணன்]

=========================================

appa+postmaster

ஜனவரி 19,

எஸ்.என்.னின் திருவத்யானம் (வருட நினைவு நாள்) நல்லபடியாக நடந்து முடிந்தது. அவர் மறைவு, திடீரென்று நிகழ்ந்துவிட்டது.

விஜு கல்யாணம் நிச்சயமாகி, பிப்ரவரி 15 தேதிக்கு முஹூர்த்தம் வைத்திருந்தது. ரொம்ப சந்தோஷமான மன நிலையில் எல்லோரும் இருந்தோம். பாங்கிலிருந்து பணமெல்லாம் எடுத்து வைத்திருந்தார். நகைகள்….. இடம் கொடுத்துச் சிவப்புக் கலர் செட் தயார் செய்தாச்சு. வெள்ளிப் பாத்திரங்கள் புதுப்பித்தாச்சு. பழைய பாத்திரங்களைக் கொடுத்து இரண்டு வெள்ளிக் குத்து விளக்குகளையும் செய்யச் சொல்லி இருந்தோம். சத்திரம் பார்த்துத் தன் கையால் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். முகூர்த்தப் பத்திரிகைத் தன் கையால் எழுதினார். மாப்பிள்ளை அகத்தில் பழம், பாக்கு, வெற்றிலை மாற்றப் போனோம். கார்த்தாலியே போய் சுஸ்வாதில் திரட்டிப் பால் வாங்கி வந்தார்.

விஜிக்குப் பார்த்திருக்கும் பையனை மிகவும் பிடித்துவிட்டது. பேத்தி அமெரிக்கா போவது பற்றி மாப்பிள்ளைப் பையனுடன் விவரமாகப் பேசினார். அதற்கு முன்பே ஜனவரி 26ஆம் தேதி விஜியைப் பெண் பார்க்க வந்திருந்தபோதே, எங்க மாப்பிள்ளை சிம்முவின் அக்கா, அவள் வீட்டுக்காரர் இருவர் கைகளையும் பிடித்துக்கொண்டு, நீங்கள் இருவரும் இந்தக் கல்யாணத்தைக் கூடவே இருந்து நன்றாக நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜனவரி 28, அம்பியை வரவழைத்து அவன் பெண் கலாவின் கல்யாணத்துக்குப் போட்டிருந்த லிஸ்ட்டை வாங்கிப் படியெடுத்துக்கொண்டார். என்ன எல்லாம் வாங்க வேண்டும் என்று எல்லோரும் ரொம்ப சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தோம். கண்ணனை அழைத்து, கேட்டரிங் ஏற்பாடு பற்றி முடிவு செய்தார். ஜனவரி 31 மாப்பிள்ளை வீட்டில் நிச்சயம் செய்தோம்.

ஃபெப்ரவரி 2 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பாங்கிற்குப் போய்ச் செக் புக் வாங்கிக்கொண்டு சர்க்கரையும் வாங்கி வருகிறேன் என்று கிளம்பினார். காலையில் கல்யாணப் பேச்சுதான். பெருமாள் படம் வாங்கி ஃப்ரேம் செய்யக் கொடுக்கணும்னு ஒரே பிளானிங். குளித்துவிட்டு, பெருமாளுக்கு ஆராதனம் செய்துவிட்டுத்தான் கிளம்பினார். தை வெள்ளிக்கிழமை நானும் விளக்குப் பூஜை செய்து, வணங்கி எழுந்தேன்.

இவர் கிளம்பி வெகு நேரம் ஆனது போலத் தோன்றியது. மனசில் ஏதோ சஞ்சலம். பக்கத்தில இருக்கிற பாங்கிற்கா இவ்வளவு நேரம்? படம் ஃப்ரேம் செய்யப் போயிருப்பாரோ? என்ன என்னவோ கலக்கம். 11.30 மணியும் ஆகிவிட்டது கீழே போய் ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். மேலே வந்த அடுத்த அரை மணி நேரத்தில் மிஸஸ் ஜயராமன், ‘மாமி  மாமாவுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கு’ என்று சொன்னாள்.

ஓடினேன் கீழே. ஆநந்த் அபார்ட்மெண்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்துவிட்டார். அஜய் அகத்துக் கம்பைப் பிடித்துக் கொண்டு கீழே உட்கார்ந்துவிட்டார். மேலே நடக்க முடியவில்லை. அப்புறம் எல்லோருமாக அஜய் வீட்டிற்குள் ஒருவாறு அழைத்து வந்தோம். அஜய் அம்மா ஜூஸ் செய்து கொடுத்தாள். டாக்டர் மோஹன் ராவுக்குப் போன் செய்து கேட்ட பொது, கங்கா நர்சிங் ஹோமில் சேர்க்கச் சொன்னார். தீபக் அம்மா (அவளும் ஒரு டாக்டர்) பார்த்துவிட்டு  ‘பல்ஸ்’ சரியா இருக்கு என்றார். பக்கத்து அபார்மெண்ட் சுந்தரம் மாமா காரில் அப்பாவை ஏற்றிக்கொண்டு நர்சிங் ஹோம் வந்தோம்.

ரேவதிக்குப் போன் செய்தோம். அவளும் சிம்முவும் காரில் நேரே நர்சிங் ஹோமுக்கு வந்துவிட்டார்கள். அங்கே வந்ததும் தெளிவாகப் பேசினார். “டி யு சி எஸ் இல் சர்க்கரை இல்லை. அதனால பொன்னப்பன் கடையில சர்க்கரை வாங்கப் போனேன். அங்க தான் தலை சுத்தற மாதிரி இருந்தது. ஜிஞ்சர் சோடா வாங்கிச் சாப்பிட்டேன். அப்படியே நடந்து வந்தேன்” என்றார்.

“ஒரு போன் செய்யக் கூடாதா? ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வரக் கூடாதா?” என்று கேட்ட போது, எல்லாம் ”வில்பவர் தான்” என்று சொன்னார். சந்தோஷமாகவே இருந்தார். ‘நாராயணா நாராயணா’ என்று காதில் குரல் கேட்டதாம். பேச முடியாத போது கையில் எழுதிக் காண்பித்தார், ‘ரேவதி கையில் புடவை வாங்கப் பணம் கொடுத்துவிடு’ என்று. நானும் கொடுத்தேன்.

ரத்தம் டெஸ்ட் செய்து, மலேரியா என்றார்கள். ட்ரிப்ஸ் கொடுத்தார்கள். அவர்கள் போன பிறகு என்னிடம் மெதுவாக “ஈசிஜி  எடுக்கவில்லையா” என்று கேட்டார். அப்போது கூட எனக்குத் தோன்றவில்லை. இரண்டு நாளில் வீட்டிற்குப் போய் விடலாம் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.

3ஆம் தேதி “உடம்பு ரொம்ப க்ஷீணமாக இருக்கிறது வெறும் மோர் கொடு போதும்” என்றார். மதியம் 3 மணி வாக்கில் காபியும் சாப்பிட்டார். நாலரை மணி வாக்கில் பேச முடியவில்லை. ரெஸ்ட்லெஸ்ஸாக ஆனார். நானும் முரளியும் அருகே இருந்தோம். ரேவதி அப்பா அவஸ்தைப்படுவதைப் பார்த்து, டாக்டரைக் கூப்பிட ஓடினாள்.

அவள் வருவதற்குள் எங்கள் இருவரையும் ஒரு தரம் பார்த்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டார். அருமையான கணவர். வெகு அருமையான தந்தையாகவும் இருந்தார் எஸ்.என். டிக்னிஃபைட் லைஃப். அதே போல டிக்னிஃபைட் ஆகப் பகவானிடம் சென்றுவிட்டார்.

‘டு  மை டியர் சில்ட்ரன்’ என்று ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார். தனக்கு ஏதாவது நேர்ந்தால் இருக்கட்டும் என்று எமர்ஜென்சி ஃபண்டும் வைத்திருந்தார். எனக்குத்தான் ஒன்றும் தெரியாமல் கண்ணை மறைத்துவிட்டது.

பேத்தி கல்யாணத்துக்கு ஒரு தடையும் இல்லை. தனக்காக ஒருத்தருக்கும் வருத்தம் வரக்கூடாது என்றே நினைத்துக் கல்யாணத்துக்குப் பதின்மூன்று நாட்களுக்கு முன் சென்றுவிட்டார். என்னையும் பதப்படுத்தி வைத்திருந்தார். எண்ட் ரொம்ப பீஸ்ஃபுலாகத்தான் இருந்தது.

எஸ்.என்.னுக்கு வருத்தம் ஏதும் கிடையாது. இந்த விஷயத்தில் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்வார். கீதை படித்ததன் பலன். ஒன்றும் பண்ணத்தான் முடியவில்லை.

We were literally orphans the day S.N passed away.

நானும் நான்கு வருடங்களாக நடமாடிக்கொண்டிருக்கிறேன்.

=========================================

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “என் இனிய கணவர் எஸ். நாராயணன்

  1. பிரமிக்க வைக்கும் நேர்த்தியான எழுத்து.

    நெகிழ வைக்கும் நேர்மையான குறிப்பு.

    ஒரு நல்ல மனிதர் தன் முடிவை எதிர்கொண்ட விதமும் வியக்க வைக்கிறது.

    குறிப்பை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கும் வல்லிம்மாவுக்கும், வெளியிட்டிருக்கும் ஆசிரியருக்கும் நன்றி.

  2. இயல்பான மனிதர்.. இயல்பான குடும்பம்… நிறைந்த அன்புடன் நிறைவான வாழ்வு…. இத்தகைய மனிதர்களுக்காக ஏங்கி நிற்கிறது உலகம்

  3. இயல்பான மனுஷி எங்கள் அம்மா. அவளைப் பற்றி எழுதவேண்டும் என்று அவள் எழுத்தையே என் வலைப்பூவில் பதிந்தேன்.
    இதை ராமலக்ஷ்மி இந்த இதழின் எல்லைக்குக் கொண்டுவந்துவிட்டார்.
    வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு.

    இதை ஏற்றுப் பதிப்பித்த ஆசிரியருக்கும், தன் நேரத்தைச் செலவழித்து இங்கே பதிந்த அன்புத் தோழி ராமலக்ஷ்மிக்கும் என் வணக்கங்களும் நன்றியும்.

  4. Mr. S.N might have led his life according to Geethai. That’s why he was a sthithapragyan till he reached vaikuntam. A wonderful portrayal of life of a true Hindu. Hats off to Mrs.Jayalakshmi. My deepest condolenseces for her loss.

  5. Thiru.S.Narayanan, sir, has understood the life fully and lived a great life. I will defiently pray for “his soul to rest in peace”

    I would request Thirumathi narayanan, to live a happy life(without worries) and that will make SN to be happy at Vaikundam.

  6. Dear Sri.Prasanna,
    Srimathi Jayalakshmi Narayanan also reached her heavenly aboard soon after wards .
    She will be happy when
    she feels all the goodwill
    generated here.

    She was a peaceful person. And she let others also in peace. thank you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *