நிலவொளியில் ஒரு குளியல் – 18

9

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija venkateshஇந்த வாரம் மற்றுமொரு பத்தியில் உங்கள் அனைவரோடும் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய உற்சாகமான பின்னூட்டங்களுக்கு நன்றி. நண்பர் பிரசன்னா அவர்கள் குறிப்பிட்டது போல், அழிந்து வரும் உயிரினங்கள் பற்றிக் கண்டிப்பாக எழுதுகிறேன். ஆனால் அதற்காக நிறையப் படிக்க வேண்டும். அதை தற்போது செய்து வருகிறேன். அதற்குள் அடுத்த வாரப் பத்திக்கான நேரம் வந்து விட்டதால் வேறொரு விஷயத்தைப் பற்றி எழுதி விட்டு, இனி பின் வரும் நாட்களில் அழிந்து வரும் உயிரினங்கள் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். சந்தோஷம் தானே பிரசன்னா சார்?

சென்னை வந்த இரண்டாவது மாதத்தில் குடும்பத்தோடு மிகப் பிரம்மாண்டமான ஒரு மாலுக்கு(mall)ச் சென்றிருந்தோம். எங்களுடைய கிராமமான ஆழ்வார்குறிச்சியையே அதனுள் அடக்கி விடலாம் போல அத்தனை பெருசு. நான் அது வரை மால் என்பதையே பார்த்ததில்லை. ஆழ்வார் குறிச்சியிலிருந்து நேரே ஒரிஸ்ஸா போயாகி விட்டது. புவனேஸ்வர் சென்னை அளவுக்கு வளர்ந்த நகரம் கிடையாது. ஏதோ ஒன்றிரண்டு பல்பொருள் அங்காடிகள் இருக்கும் அதையே பார்த்து நான் வாய் பிளந்துவிட்டேன்.

ஆழ்வார்குறிச்சியில் இருந்தது மொத்தம் இரண்டே கடைகள்தான். குருநாதன் கடை. அது மளிகைப் பொருட்களும் காய்கறியும் விற்கும் கடை. மற்றொன்று காசா கடை. அதுதான் எங்களுக்குப் பல்பொருள் அங்காடி. வேர்க்கடலையிலிருந்து, சிலேட்டுக் குச்சி, பொட்டு, ரப்பர் பேண்டுகள், ஹேர் பின்கள்… இவை தவிர பண்டிகை சமயங்களில் வாழ்த்து அட்டைகள் கூடக் கிடைக்கும். அவற்றையெல்லாம் தாண்டி வேறு தேவைகள் உண்டு என்பதே எங்களுக்குத் தெரியாது. ஒரிஸ்ஸாவிலும் நாங்கள் கிளம்பும் சமயம் தான் பிக் பஜார் திறக்கப்பட்டது. அதுவும் ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக கொஞ்சம் சின்னதாகத்தான் இருக்கும். அதற்கே நான் மிகவும் வியந்து போனேன். இந்தச் சூழலில் வளர்ந்த என்னைச் சென்னை நகர நாகரிகத்தின் பிறப்பிடமாக விளங்கும் கடைகளின் ஒன்றியம் (அப்படிச் சொல்லலாமா?) முன் சென்று நிறுத்தினால்? எனக்குத் தலை கால் புரியாமல் போனதில் வியப்பென்ன?

mall

முதல் சோதனை, தானியங்கிப் படி (escalator) உருவத்தில் வந்தது. எனக்கு அதைக் கண்டாலே குலை நடுக்கம். காலுக்குக் கீழே பூமி உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இப்படியிருக்க நகர்ந்துகொண்டே இருக்கும் ஒரு படியின்மேல் ஏறி நில் என்றால் அதன் கஷ்டம் என்னைப் போல அதை அனுபவித்தவர்களிக்கே புரியும். என் பயத்தைப் பார்த்து “ஒண்ணுமேயில்லை, என் கையைப் பிடிச்சுக்கோ, கண்ணை மூடிக்கிட்டு காலை வை அவ்வளவுதான்” என்றார் என் கணவர். என் மகளும் அதற்கு ஆமாம் சாமி போட்டாள். சுற்றுமுற்றும் பார்த்தேன் எல்லோரும் ‘இதெல்லாம் ஒரு விஷயமா‘ என்ற பாவத்துடன் சர்வ சாதாரணமாக போய்க்கொண்டிருந்தனர்.

என் மகள் ஒரு சிறு குழந்தையைக் காட்டி “பாரும்மா அந்தக் கோழந்தை போகுது… ஒன்னால முடியாதா?” என்றாள். எனக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது. வந்தது வரட்டும் என்று மேலே பார்த்தவாறு ஒரு காலை மட்டும் வைத்தேன். மற்றொரு காலை எங்கே வைக்க என்று தெரியாமல் முதலில் வைத்த காலை கீழிறக்க முயற்சி செய்து, மற்றொரு கால் எங்கேயோ போக.. மொத்தத்தில் கீழே தொபுக்கடீரென்று விழுந்துவிட்டேன்.

escalotor in mall

என் கணவரும் மகளும் தானியங்கிப் படிகளில் மேலே போய்விட்டார்கள். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கோ அங்கே நிற்கவே வெட்கம் பிடுங்கித் தின்றது. நான் பாட்டில் ஒன்றுமே நடக்காதது போல் லிஃப்டை நோக்கி நடையைக் கட்டினேன். இதற்கிடையில் என்னைத் தேடி மீண்டும் என் கணவரும் மகளும் நான் நின்றிருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அங்கே என்னைக் காணாமல் பதறி என் செல் ஃபோனுக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது நான் பூமியின் கீழ்த்தளப் பகுதிக்கு லிஃப்டில் வந்திருந்ததால் சிக்னல் கிடைக்கவேயில்லை அவர்களுக்கு.

நான் மீண்டும் லிஃப்டில் பயணித்து , முதல் தளத்தை அடைந்துவிட்டேன் அவர்களைக் காணவில்லை. எனக்கு ஒரே குழப்பம். என்ன செய்வதென்று தெரியவில்லை. என்ன ஆனாலும் சரி, இங்கேயே காத்திருப்பது என்ற முடிவுக்கு வந்த போது என் அலைபேசி ஒலித்தது. என் கணவர்தான். ஒரு வழியாக நான் அவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் அரை மணியாகி விட்டது. கணவரும் மகளும் கடுங்கோபத்தில் இருந்தனர். எனக்கும் கோபம்தான், அவர்கள் என்னோடு லிஃப்டில் வந்திருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லையே என்று. சற்று நேரச் சொல்லாடல்களுக்குப் பிறகு சமாதான உடன்படிக்கைக்கு வந்து சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம்.

அவ்வளவு நேரம் நான் என் பிரச்சனையிலேயே ஆழ்ந்துவிட்டதால் சுற்றுமுற்றும் உள்ளவர்களைக் கவனிக்கவில்லை. அப்போதுதான் பார்த்தேன். உண்மையிலேயே அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. அங்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலோர் இளம் வயதினர். அதிலும் குறிப்பாக பெண்கள். அவர்கள் அணிந்திருந்த உடைகள் தான், என்னை அப்படி வருத்தம் கொள்ள வைத்தது.

அவர்கள் ஜோடியாக வருவதோ, கூட்டமாக வருவதோ அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு. அது தனி நபர் சம்பத்தப்பட்ட விஷயம். ஆனால் உடைகள்? பலர் கூடும் ஒரு பொது இடத்திற்கு என்று சில மரியாதைகள் இருக்கின்றன இல்லையா? தொடை வரை மட்டுமே வரும் ஒரு ஸ்கர்ட். கையில்லாத சில சமயம் முதுகே இல்லாத ஒரு மேல் சட்டை. இது என்ன உடை? கேட்டால் பெண் உரிமை என்பார்கள். பெண் உரிமை என்பது அரைகுறை ஆடை அணிவதிலா இருக்கிறது? சரி நிகர் சமானம் என்று பாரதியார் சொன்னது உடை விஷயத்தில் இல்லை. அவர்கள் அப்படியே எடுத்துக்கொண்டாலும் காலைக் காட்டாத பேண்ட் அணிந்திருக்கலாமே? நல்ல சட்டைகள் போட்டிருக்கலாமே?

teen girls in mall

அவர்கள் எல்லோருமே என்ன கேள்வி கேட்பார் இல்லாதவர்களா? அவர்களுடைய தாய் தந்தையர் அவர்களைக் கண்டிக்க மாட்டார்களா? என்றெல்லாம் எனக்குத் தோன்றியது. பின்னர் யோசித்துப் பார்த்த போது இதற்கும் ஒரு வகையில் பெற்றொர்களே காரணம் என்று தோன்றுகிறது. என்ன? இவள் எல்லாவற்றிற்கும் பெற்றவர்கள் மீதே பழி போடுகிறாள் என்று தயவு செய்து நினைக்கதீர்கள். எந்த அம்மா , அப்பாவும் தன் மகள் அரைகுறையாக உடுத்துவதைக் கண்டிப்பாக விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி அவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இப்படி உடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

இவற்றுக்கு எப்படி பெற்றோர் காரணம் என்று சொல்கிறேன். தொலைக்காட்சிகளில் வரும் மூன்றாந்தர நடன நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு , தங்கள் பெண் சிறு குழந்தைதானே என்ற எண்ணத்தில் முதுகே இல்லாத மேலாடையும், இடுப்புக்குக் கீழே இரண்டு அங்குலமே நீளும் ஸ்கர்ட்டையும் அணிவித்து அழகு பார்ப்பது மட்டுமல்லாமல், அசிங்கமான திரைப்படப் பாடல்களுக்கு ஆடச் சொல்லி ரசிக்கிறார்கள். வீட்டுக்குள் மட்டுமல்லாமல் கல்யாணம் போன்ற மற்ற உறவினர்களும் நண்பர்களும் கூடும் நிகழ்ச்சிகளிலும் ஆடச் சொல்லி, பெருமை கொள்கிறார்கள். இந்த நிலை, குழந்தைகளின் பத்து பதினோரு வயது வரை தொடர்கிறது. அதுவரை இந்த வகையான உடைகள் அணிவதும் திரை இசைப் பாடல்களுக்கு உடலைக் குலுக்கி ஆடுவதும் நம் பெற்றோர்களுக்கு உவகை தரும் விஷயம் என்ற எண்ணத்திலேயே குழந்தைகள் வளர்கிறார்கள்.

இந்த நிலையில் ஆடக்கூடாது, குறைவாக உடையணியக் கூடாது என்று திடீரெனச் சொன்னால் அவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்? பெற்றொருக்குத் தெரியாமலாவது தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முயல்வார்கள். இது சில சமயங்களில் விபரீதத்தில் முடியக் கூடும். பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது, ஒவ்வொரு தாயின் கடமை. அது போல் பெண்களை மதிப்பவனாகத் தன் மகனை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு தந்தையின் கடமை.

நீங்கள் கேட்கலாம் அப்படியென்றால் எங்கள் குழந்தைகளுக்கு சிறு உடைகளையே அணிவிக்காமல் இருக்க வேண்டுமா? எப்போதும் பாவாடை சட்டையும், இல்லை, சுடிதாரும் தான் போட வேண்டுமா? என்று. அந்தந்த உடைகளுக்கு என்று ஒரு வயது இருக்கிறது. சிறிய உடைகளை சிறு வயதில் அதாவது ஒரு ஐந்து வயது வரை, அணிவித்துப் பார்க்கலாம். பிறகு மெல்ல மெல்ல உடை விஷயத்தில் மட்டுமல்ல, பழகும் விதத்திலும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.

ஏன் பெண் குழந்தைகளை மட்டும் இப்படிக் கட்டுப்பாட்டோடு வளர்க்க வேண்டும்? இது சரியான பிற்போக்கு வாதம் என்றும் பெண்ணடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டு என்றும் உங்களில் சிலர் யோசிக்கக் கூடும். ஆணும் பெண்ணும் சமம், அதனால் என் பெண்ணையும் கட்டுப்பாடின்றி வளர்ப்பேன் என்பதெல்லாம் வெறும் வீண் வாதம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் கட்டுப்பாடு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

பெண் உரிமை என்பது, பெண்கள் தங்கள் இயல்பிலிருந்து மாறாமல் தன்னுடைய அறிவால் ஆணுக்குச் சவால் விட வேண்டும். அறிவுத் திறமையில், நாட்டுப் பற்றில், கடமைகளில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்று தான் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். அதை விடுத்து ஆடைக் குறைப்பில் தான் நாகரிகத்தையும் பெண்ணுரிமையையும் நிலை நாட்ட வேண்டும் என்பதில்லை.

பெண்ணுரிமையின் முழுமையான அர்த்தத்தை உணர்ந்த பெண்களும் அதைக் கண்ணென மதிக்கும் ஆண்களும் இந்தச் சமூகத்தில் நிறைந்திருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்…

=====================================

படங்களுக்கு நன்றி: http://www.skyscrapercity.com, http://www.4tnz.com

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 18

  1. நல்ல கருத்து. உரிமை என்பது வெறும் உடுப்பில் இல்லை என்பதை அழகாக எடுத்து சொன்னதற்கு நன்றி.

  2. Good Show….you can actually elaborate this topic a little further in your next episode also..because, people who talk about “INDEPENDENCE FOR WOMEN” must know the difference between empowerment of women and exploitation of women….

  3. என் மனதில் உள்ளதை உலகிற்கு சொன்னதற்கு நன்றி

  4. Thank you very much madam for considering my suggestion and mention my name in the post 🙂

    Coming to the topic, in the name of westernisation and globalisation, all these dressing culture are spreading like virus. Its sad that parents themselves encourage improper dressing and repent later when something bad happens to the girl like eve-teasing, molestation etc.

  5. The things said in this column were very true. Everybody should know their limits be it a girl or a boy. Even boys should not wear ugly and dirty dresses like torn jeans pants etc, in the name of fashion. Very rare topic madam. Keep it up.

  6. Good Concept. Every parents has to realise this. Keep it up Mami. Liberty is not meant by this. That is something different.

    regards
    K.Ramesh

  7. A real concern for new younger generations. Well written in lucid style. Keep it up.

  8. Really good one. This will give good impression/suggestion to new generation particulary women. Best wishes .

  9. இது, பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் நல்லது.
    பெண் உரிமை என்பது உள்ளத்தில் மட்டும் இல்லாது, உடுத்தும் உடையிலும் இருக்க வேண்டும் என்பதற்குத் தங்கள் படைப்பு ஒரு எடுத்துக்காட்டு.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.