செரியாத கல்வியின் சுமை-18
அவ்வை மகள்
நீரும் மறந்த குழந்தைகள்
பள்ளிக்கூடங்களில் ஒரு முக்கியமான அங்கம் குடிநீர் மற்றும் உணவு. மனித உயிரிகள் வந்து, சில பல மணி நேரங்கள் தங்கி இருந்து கல்வி பயின்று செல்கின்ற பள்ளிக்கூடங்களில், கல்வி கற்கும் குழந்தைகளுக்குத் தாகம் எடுப்பதும் பசி எடுப்பதும் இயற்கை. இந்த இரு உணர்வுகளும் உயிர் வாழ்தலின் இன்றியமையா அடையாளங்கள் – இன்றியமையாத் தேவைகள்.
தாகத்திற்குத் தண்ணீரும் பசிக்கு உணவுமே தீர்வுகள்.
பசியைக்காட்டிலும் தாகம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நீரின்றி அமையாது உலகு என்பது போல நீரின்றி அமையாது நம் உயிர்.
வயது வந்த ஒரு சராசரி நபரின் உடம்பிலே(70 கிலோ உடல் எடை) நாற்பது லிட்டர் நீர் இருக்கிறது. அது போல ஐந்திலிருந்து பதினைந்து வயது வரை குழந்தையின் உடம்பில் நாற்பது லிட்டர் நீர் இருக்கிறது. (சிறு குழந்தைகளின் உடம்பிலே நிறையவே நீர் இருக்கிறது; அது பற்றிப் பின்னர் பேசுகிறேன்.) இந்த நாற்பது லிட்டர் நீரின் அளவில் குறைவு ஏற்படாதவாறு மிகத் தாராளமாக நீர் அருந்த வேண்டும். அன்றேல் பல விதமான உடல் மற்றும் மனப்பிரச்சனைகளும் கொடிய பல வியாதிகளும் உண்டாகும். இவற்றில் பல முதலில் மவுனமாக இருந்து பின்னர் ஆட்டிப் படைப்பவை!
ஆனால் குழந்தைகள் பள்ளிக்கூட நாட்களில் மிக மிகக் குறைவான அளவே நீர் அருந்துகின்றனர். இவ்வாறு அவர்கள் போதுமான அளவு நீர் அருந்தாமல் போகும் சூழல்களையும் அவ்வாறு போதுமான நீர் அருந்தாமல் போவதால் வரும் பிரச்சனைகளை அலசும் முன், நம் உடல் நீரின் பரிமாணங்களை அறிந்து கொள்ளுவது நல்லது.
உடலில் இருக்கும் நீரை நீர்ச் சத்து என்பர். நீர்ச் சத்து நமது இரத்தத்தில் ஒரு குறியீடு போலப் பொருந்தி உள்ளது, உடலில் நீர்ச்சத்து குறையும் எனில், அந்த அளவுக் குறைவு நமது இரத்தத்திலே ஒரு காலியிடத்தை ஒத்த பற்றாக்குறையை (deficit) உண்டு பண்ணும். இந்தப் பற்றாக்குறை ஏற்பட்ட உடன், தாகம் எனும் உணர்வு தோன்றுகிறது.
தாக உணர்வு என்பது ஒரு தன்னியக்க உணர்வு, இவ்வகையில் இது பசி எனப்படும் உணவு விருப்பத்திலிருந்து மாறுபட்டது. கண்ணில் பட்ட லட்டைப் பிட்டு வாயில் போட்டுக் கொள்ளச் செய்யும் உணவு முந்துணர்வு, தாகத்தில் இல்லை. குடத்தில் நீர் கண்ணெதிரே இருந்தாலும் தாகம் எடுக்கும்போது மட்டுமே நீரைப் பருகத் தோன்றும். காரணம் நீர்ச் சத்து என்பது – தாகம் என்பது ஹார்மோன்களின் ஆளுகையில் உண்டாக்கப்படுவது!
நமது உடலில் நீரின் அளவைக் கண்காணித்து ஒழுங்கு படுத்த பிரத்யேகமான மூன்று ஹார்மோன்கள் உள்ளன. அவையாவன:
1.ஆண்டி டையூரடிக் ஹார்மோன் (anti-diuretic hormone)
2.ஆல்டோஸ்டீரோன் (aldosterone)
3.ஆட்ரியல் நேட்ரியூரடிக் பெப்டைட் (atria natriuretic peptide)
எனவே தான் பசியைக்காட்டிலும் தாகம் அதிகக் காட்டமானது – அதிகத் தாக்கம் உண்டாக்குவது. ஒருவருக்குத் தாகம் ஏற்பட்டு விட்டதென்றால் நீர் அருந்தினால் மட்டுமே தாகம் அடங்கும்.
உலகில் மூன்றில் இரண்டு பங்கு நீர் இருப்பதைப் போல நமது உடம்பிலும் நீர் மூன்றில் இரண்டு பங்காக நிலை பெறுகிறது. ஆனால் ஆரம்ப வயது நிலைகளில் உடல் நீரின் அளவு அதிகமாகவே உள்ளது.
பிறந்த அன்று குழந்தையின் உடம்பில் ஏறக்குறைய 90 விழுக்காடு நீர் இருக்கும்- பத்து மாதக் குழந்தையின் உடம்பில் 85 விழுக்காடு நீர் இருக்கும். இரண்டிலிருந்து பத்து வயது வரை குழந்தையின் உடம்பில் 80 விழுக்காடு நீர் இருக்கும். பத்து வயதுக்கு மேலே பதினேழு வயது வரை 75 விழுக்காடு நீர் இருக்கும். பதினெட்டு வயது தொடங்கி முப்பத்தைந்து வரை 70 விழுக்காடு நீர் இருக்கும். ஐம்பத்தைந்து வயது வரை 67 விழுக்காடு நீர் இருக்கும். ஐம்பத்தைந்தைத் தாண்ட, உடலில் நீர்ச் சத்து படிப்படியாகக் குறைந்து படும்.
இந்த அளவீடுகளைப் பார்க்கும் போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. குழந்தைகள் உடலில் நீர் அதிகம் இருக்க வேண்டும் – வேறு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு நீர்த் தேவை கூடுதல் என்பதே. அதாவது குழந்தைகள் பெரியவர்களைக் காட்டிலும் நிறைய நீர் அருந்த வேண்டும் என்பதே.
பெரியவர்களை விடக் குழந்தைகளுக்கு நீர் அதிகமாகத் தேவைப் படும். காரணம் அவர்கள் வளர்ந்து கொண்டிருப்பவர்கள். அது மட்டுமில்லாது அவர்கள் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இயங்குபவர்கள்.
நீர் என்பது உயிர் இயக்கத்தின் மூலப் பொருள். உடலின் வளர் சிதை மாற்றங்கள் நீர் எனும் ஊடகத்திலேயே நிகழ்கின்றன. நமது உட்புற – வெளிப்புற இயக்கங்கள் ஒவ்வொன்றிற்கும், உடலின் நீர் எடுத்துக் கொள்ளப் படுவதால், உடலில் நீர்ச்சத்தின் அளவு படிப்படியாகக் குறைய, அந்தக் குறை இரத்தத்தில் எதிரொலிக்க, தாகம் ஏற்படுகிறது.
தாகம் உண்டாகி விட்டது என்றால் – தாகத்தை உடனே தணிக்க வேண்டுமே தவிர – தாகத்தை அடக்கிக்கொண்டு, எந்தப் பணியும் செய்ய முடியாது – படிக்க முடியாது – விளையாட முடியாது – சிந்திக்க முடியாது – கலகலப்பாகப் பேச முடியாது – பழக முடியாது. உணவு இல்லையென்றாலும் வெறும் நீரைப் பருகியபடியே பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி உயிர் வாழ முடியாது.
நாம் மூச்சு விட வேண்டுமென்றால், அதற்கு நம் உடம்பின் ஈரச் சத்து இன்றியமையாதது. நம் உடம்பில் சுவாச ஏற்பாடு எவ்வாறு அமையப் பெற்றிருக்கிறது என்றால், நாம் மிகச் சரியான அளவு ஈரப்பதம் கொண்ட காற்றை மட்டுமே உட் கிரகிக்க முடியும். வாய் மூக்கு இவற்றின் உட்புறங்கள் எப்போதும் ஈரமாக இருந்து நாம் உள்ளிழுக்கும் காற்றைச் சரியான ஈரப்பதனம் செய்து அனுப்புகின்றன. அது போன்றே நாம் வெளியில் விடும் காற்று அனல் பறக்காமல் வெளி வருகிறது என்றால் அதற்கு நம் வாய் மூக்கு இவற்றின் உட்புறங்கள் எப்போதும் ஈரமாய் இருப்பது தான் காரணம்.
(உண்மையாகப் பார்த்தோமென்றால், நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் பிரம்மாண்டமான வெப்ப சக்தியை உண்டு பண்ணுகின்றன – மோட்டார் வாகனத்தில் எரிபொருள் எரிந்து வெப்ப சக்தியையும் இயங்கு ஆற்றலையும் உண்டாக்குவதைப் போல. இந்த வெப்பம் தான் நம் உயிர் வாழ்வின் கருவூலம். இந்த வெப்பத்தை, உடலில் உள்ள செல்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்வதே நம் உடலில் உள்ள நீரோட்டத்தின் தலையாய பணி.)
பாருங்கள் நம் உடலில் உள்ள நீர் எவ்வாறு வகைப் பட்டிருக்கிறது என்று.
செல்களுக்கு உள்ளே இருக்கிற நீர்: 30 விழுக்காடு
செல்களுக்கு வெளியே இருக்கிற நீர்: 30 விழுக்காடு
செல்களுக்கு இடையில் உள்ள நீர்: 12 விழுக்காடு
இரத்த பிளாஸ்மாவில் உள்ள நீர்: 20 விழுக்காடு
இந்த மூன்று அளவுகளையும் கூட்டினால் கிடைக்கும் 92 விழுக்காட்டை 100லிருந்து கழித்தால் கிடைக்கும் 8 விழுக்காடு நீர் எங்கு இருக்கிறது என்றால் அது எங்கும் இல்லை ஆனால் எங்கும் இருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். இந்த 8 விழுக்காடு நீர் ஓரிடத்தில் இல்லாமல் ஆனால் எங்கும் இருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுவதன் காரணம் அது நம் உடலின் ஜீவ நதியாகும். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
அருவியைப் போலக் கபாலத்திலிருந்து கீழிறங்கி, வாட்டர் பவுண்டனைப் போல மேலெழும்பி என உடலில் தொடர்ச்சியாக, ஜீவனாய் ஓடுகின்ற இந்த நீரோட்டத்தை உயிரின் அடையாளம் என்பர். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளையும் இந்த நீர் சதா சர்வ காலம் வருடி விட்டு, உயவு எண்ணெயைப் போல உராய்வைக் குறைத்து, உஷ்ணத்தை உறிஞ்சி உடலைச் சீரான வெப்பத்துடன், இயல்பான ஸ்மரணையுடன் ஜீவிக்க வைக்கிறது.
Cerebrospinal fluid என்று அழைக்கப்படும் மூளைத் தண்டுவடத் திரவம் ஒரு நாளைக்கு நான்கு முறைப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு புதுப்பிக்கப் பட்டாலொழிய நம்மால் சரியாகச் சிந்திக்க முடியாது, செவ்வனே இயங்க முடியாது.. இந்தப் புதுப்பித்தலுக்கு, நம் உடலின் நீரோட்டம் மிகவும் முக்கியம்.
இதிலே முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நமது மூளையின் புறப்பரப்பும் உள்புறமும் எப்போதும் ஈரப்பதனத்துடன் இருப்பவை. அவை ஈரப்பதனத்துடன் இருந்தால் மட்டுமே நம்மால் சரியாக செயல்பட முடியும். இவ்வகையில், Blood-Brain barrier என்று ஒரு இயற்கை மதகு நம் உடலிலே இருக்கிறது. தந்துகிக் கவர்ச்சி மூலமாக இரத்தத்தையும் மூளையையும் இணைக்கும் நீர்த்திவலைகள்தாம் இந்த மதகுகள். உடலில் நீர்ச்சத்து குறைந்ததென்றால் இந்த மதகுகள் மக்கர் பண்ண ஆரம்பித்து விடும்.
பார்த்தீர்களா இயற்கை நம் உடலை எத்தனை அற்புதமான நீரோடையாகப் படைத்திருக்கிறது என்று? வற்றக் கூடாத ஜீவ நதியான உடல் நீர் வற்றாமல் இருந்து வருவதுதான் ஆரோக்யத்தின் அடையாளம்.
அதே நேரம், உயிர் காக்கும் பொருளான நீர் ஒரு கரைப்பானும் ஓர் உயிர் ஊடகமும் ஆவதால், குடிக்கும் நீரில் பல ஒவ்வாப் பொருட்கள் கரைந்திருப்பதும். தொற்றுக் கிருமிகள் கலந்திருப்பதும் சகஜம். எனவே தோஷமில்லாத, கிருமிகள் இல்லாத நல்ல, பாதுகாப்பான குடிநீர் பள்ளிகளில் கட்டாயத் தேவை. ஆனால் வெகு பல கல்வி நிறுவனங்களில் குடிநீர் வசதி இல்லவே இல்லை.
மேலும் பேசுவோம்
படத்திற்கு நன்றி:http://www.thenutritionpost.com/frontpage/water-in-schools-what-readers-say.html