அமெரிக்கச் சமூகத்தில் தாய்மை
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
மார்ச் மாதம், உலக மகளிர் மாதம். மார்ச் எட்டாம் தேதி, உலக மகளிர் தினம். இன்று இந்த மகளிர் மதத்தை ஒட்டியோ, என்னவோ அமெரிக்கப் பெண் ஒருவர் செய்த அசாதாரணச் செயல் எல்லோர் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. தான் எப்போதுமே ஒரு தாயாக இருக்க விரும்பியதில்லை என்று கூறியிருக்கும் இந்தப் பெண், தன் வாழ்க்கையை ‘Hiroshima in the morning’ என்னும் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அதில் தனக்கு எப்போதிலிருந்து தாயாக இருக்க விருப்பம் இல்லாமல் போனது என்று விளக்கியிருக்கிறார்.
இரண்டு பையன்களுக்குத் தாயான இந்தப் பெண்ணிற்கு 2001இல் (அப்போது அவருடைய பையன்களுக்கு மூன்று, ஏழு வயது) ஒரு புத்தக ஆராய்ச்சிக்காக ஜப்பானுக்குச் சென்று ஆராய்வதற்கு மானியத் தொகை கிடைத்ததாம். ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டின் தாக்குதலுக்குத் தப்பியவர்களைப் பற்றிய ஆராய்ச்சி அது. இப்படிக் வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயமாதலால், அவருடைய கணவரும் மற்றையோரும் அந்த மானியத் தொகையை ஏற்றுக்கொண்டு ஜப்பானுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து வரும்படி அந்தப் பெண்ணை ஊக்குவித்தார்களாம்.
அப்படி ஆறு மாதங்கள் தன் குடும்பத்தைப் பிரிந்திருந்து ஆராய்ச்சி செய்தபோது இந்தப் பெண்ணிற்குத் தனக்காக வாழும் அருமை தெரிந்ததாம்! எந்த இடையூறும் இல்லாமல் எல்லா நேரத்தையும் தனக்காகவே செலவழித்துத் தன் ஆராய்ச்சியை முடித்த பிறகு, தனக்குள் அது வரை அமுங்கிக் கிடக்கும் திறமையை (potential) முழுவதுமாக உணர்ந்தாராம்.
நாடு திரும்பிய பின், முதல் வேலையாகக் கணவனை விவாகரத்து செய்துவிட்டாராம். பையன்கள் இருவரையும் கவனிக்கும் பொறுப்பை நீதிமன்றம் இருவரிடமும் ஒப்படைத்தது. இப்போது பாதி நேரம் மட்டும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதால் இவருக்குத் தனக்காக, தன் ஆராய்ச்சிக்காகச் செலவழிக்க நிறைய நேரம் கிடைக்கிறதாம். தாயாக இருப்பதில் தனக்கு எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை என்று இப்போது உணர்வதாகக் கூறியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக இருக்கும் பெண் ஒருவர் (இவர் சீன வம்சாவழியில் வந்தவர்) தான் தன் இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்ததைப் பற்றி ஒரு புத்தகம் (Battle Hymn of the Tiger Mother) எழுதியிருக்கிறார். அதில் அவர் குழந்தைகளைக் கண்டிப்புடன், அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணித்து, வளர்க்க வேண்டும்; அவர்கள் திறமைகளை வெளிக்கொணர, அவர்களைப் பலவந்தப்படுத்தினாலும், பெற்றோரே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்தப் புத்தகம் வெளிவந்தவுடன் பல இடங்களில் கீழை நாட்டுப் பழக்கம் என்றும், அமெரிக்காவில் அதெல்லாம் சரிப்படாது என்றும், குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் பல இடங்களில் வாதங்கள் நடத்தினார்கள்.
முதலில் குறிப்பிட்ட பெண், இந்தப் பெண்ணிற்கு நேர் எதிர். பிள்ளைகள் யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்தாலும் நன்றாக வளர்வார்கள் என்றும், தன் சொந்தப் பிள்ளைகள், தாய் எப்போதும் அவர்களுடன் இல்லையென்றாலும் நல்ல முறையில் வளர்ந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்த பின் இவருடைய முன்னாள் கணவர் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவரிடமும் குழந்தைகள் பகுதி நேரம் இருக்கலாம் என்று நீதிமன்றம் கட்டளையிட்டிருப்பதால் அவரிடமும் பாதி நாள்கள் குழந்தைகள் வளருகின்றன.
மாற்றாந்தாயிடம் வளரும் குழந்தைகள் எப்படி மன, உடல் ஆரோக்கியத்தோடு வளர்கின்றன என்று தெரியவில்லை. இந்தத் தாய் செய்த செயல் சரியில்லை என்று சிலர் கூறினாலும், அது சரியென்று கூறுவோரும் அமெரிக்காவில் இருக்கின்றனர். குழந்தைகளோடு தாய் செலவழிக்கும் நேரம் எவ்வளவு என்பதை விட, செலவழிக்கும் நேரத்தைச் செம்மையாகச் செலவழிக்கிறார்களா என்பதுதான் முக்கியம் என்று உளவியல் அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் நிறையப் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமலே பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள். பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் வளர்க்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. தத்தெடுப்பவர்களிடம் கொடுத்துவிடலாம். தாய் சரியாக வளர்க்கவில்லை என்றால் அரசே தாயிடமிருந்து குழந்தையைப் பிரித்து குழந்தைக் காப்பகங்களில் விட்டுவிடுவார்கள். தமிழில் ‘ஏழு குழந்தைகளை எமனுக்குக் கொடுத்தாலும் உயிரோடு ஒரு பிள்ளையைக் கூட ஒரு தாய் கொடுக்க மாட்டாள்’ என்று ஒரு பழமொழி உண்டு. அமெரிக்காவில் அதெல்லாம் இல்லை. தான் பெற்ற குழந்தையை எளிதாகப் பிறரிடம் கொடுக்கும் தாய்மார்கள் உண்டு.
ஒவ்வொரு சமூகமும் தான் அழிந்துவிடாமல் தொடர்ந்து வாழ விரும்புகிறது. இது நடைபெற வேண்டுமானால் பெண்கள்தான் பிள்ளைகளைப் பெற வேண்டும். பிள்ளை பெற்றுக்கொள்ளத் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று முடிவு செய்ய, எல்லாப் பெண்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் அப்படி நினைக்கும் பெண்கள் சிறுபான்மையினரே. அவர்களை விட்டுவிடுவோம். பிள்ளை பெற்றுக்கொண்டவர்கள் அந்தப் பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்க வேண்டுமல்லவா? அந்தக் குழந்தைகள் இந்த உலகிற்கு வரக் காரணமாக இருந்தவர்கள் அவர்களை வளர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? இதை ஏன் சில அமெரிக்கப் பெண்கள் ஒப்புக்கொள்வதில்லை.
பெற்ற குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு சுமையாகக் கருதும் இந்தப் பெண்கள், எப்படி ஒரு நல்ல தாயாக இருக்க முடியும்? நல்ல தாய்மார்களை உருவாக்காத ஒரு சமூகம், எப்படி நல்ல குடிமக்களை உருவாக்க முடியும்? ‘உன் நலனைப் பாதுகாத்துக்கொள். அதுதான் நீ செய்யவேண்டிய முதல் காரியம்’ என்று போதிக்கும் அமெரிக்கச் சமூகம், எந்தத் திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.
தாய்மை என்பது தியாகத்தின் திருவுருவம் என்று உலக வரலாறே ஒத்துக்கொள்ளும் ஒரு உண்மை. வேலைக்குப் போகும் பெண்கள், குழந்தைகளைத் தம் தாயிடமோ, மாமியாரிடமோ அல்லது தாதியரிடமோ விட்டுச் சென்றாலும் அவர்களின் எண்ணங்கள் அக்குழந்தை மீதே இருக்கும். அவர்களின் உணவு. உறக்கம்
மற்றும் பாதுகாப்பு பற்றியே சிந்தனை இருக்கும். தன் வளர்ச்சிக்குக் குழந்தையும் கணவனும் தடையாக இருக்கிறார்கள் என்று அவர்களையே தள்ளி வைப்பது ஒரு தாய்க்கு அழகல்ல! அவ்வெண்ணம் அவளைப் பிடித்த மன நோயே!
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.