கஹானி இந்தி பட விமர்சனம்
மோகன் குமார்

கஹானி– ஹிந்தியில் சமீபத்தில் வெளியான வித்தியாசமான கதையம்சம் உள்ள படம். கஹானி என்றாலே கதை என்று தான் அர்த்தம் மிக பொருத்தமான தலைப்பு!
கதை
துவக்கத்தில் கொல்கத்தா மெட்ரோ ரயிலில் தீவிரவாத கும்பலால் நூற்றுக்கணக்கானோர் இறப்பதைக் காட்டுகிறார்கள்.இரண்டு வருடத்துக்குப் பின் கர்ப்பிணியான வித்யா அதே கொல்கத்தாவிற்கு, தன் கணவனைத் தேடியபடி வருகிறார். லண்டனில் இருந்து விமானத்தில் வந்து இறங்குபவர், நேரே போலீஸ் ஸ்டேஷன் சென்று கணவனைக் காணவில்லை எனப் புகார் தருகிறார்.
கணவர் தங்கிய லாட்ஜ் சென்று, அவரை குறித்த விபரம் கேட்க, அவர்கள் அப்படி ஒருவர் தங்கவில்லை என்கின்றனர். இதனை நம்பாத வித்யா அதே லாட்ஜில் தங்குகிறார். ரானா என்கிற போலீஸ் அவ்வப்போது வந்து சந்தித்து வித்யாவுக்கு உதவுகிறார்.
கணவரை தேடும் முயற்சியில் சிறு தகவல் கிடைத்தால் அந்த தகவல் தந்தவர் உடனே கொல்லப்படுவதில் அரள்கிறார் வித்யா! இதற்கிடையே வித்யாவை கொல்ல அலைகிறார் ஒரு கூலிப் படை ஆள்! போலீஸிடம் சிக்கும் நேரத்தில் அவரும் விபத்தில் சிக்கி இறக்கிறார்.
கடைசி பத்து நிமிடத்தில் படத்தின்அனைத்து முடிச்சுக்களும் அவிழ்கின்றன. கதை தெரியாதோர் ஊகிக்க முடியாத படி இருக்கிறது அந்த பத்து நிமிடம்.
மேலே சொன்ன கதையில் பல விஷயங்கள் பொய் என்று இறுதியில் தெரிகிறது. வித்யா கர்ப்பிணி என்பது பொய். அவர் பெயர், கணவர் பெயர் எல்லாமே பொய்.கணவரைத் தேடிவந்ததாக சொன்னதும் பொய்.
முதலில் காட்டும் விபத்தில் வித்யா கணவர் இறக்கிறார்.அவரை கொன்றவரைத் தேடியே வித்யா வருகிறார். இறுதியில் கொல்லவும் செய்கிறார். அவருக்கு ஒரு உயர் போலீஸ் அதிகாரி உதவுகிறார். வித்யா மூலம் போலீஸ் துறையில் உள்ள கருப்பு ஆடுகளும் சிக்குகிறார்கள்.
***
படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது.கதை-திரைக்கதை தான் ஹீரோ.முழுப் படத்தையும் வித்யா பாலன் அசால்ட்டாக சுமக்கிறார். என்ன நடிப்பு! வித்யா பாலனை எனக்கு முன்பிலிருந்தே பிடிக்கும். ஐஸ்வர்யா ராய்-கரீனா கபூர் போன்றோர் முன் அதிகம் பிரபலமாகாத வித்யாவிற்கு இப்போது தான் நல்ல ரோல்களும்,அவர் திறமைக்கேற்ற புகழும் கிடைக்கிறது.
படத்தில் வரும் ஆண் பாத்திரங்கள் பலரும் பெங்காலி நடிகர்களே. கொல்கத்தாவில் கதை நடப்பதால், படம் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதால் இயக்குனர் இப்படி தேர்ந்தெடுத்துள்ளார். புதியவர்கள் என்றாலும், யாருமே நடிப்பில் குறை சொல்ல முடியாதபடி அற்புதமாய் செய்துள்ளனர்.
வித்யா தாண்டி மனதில் பதியும் பல பாத்திரங்கள் உண்டு.
வித்யாவுக்கு உதவும் ரானா என்கிற போலீஸ் அதிகாரி– கர்ப்பிணி ஆனாலும் அவள் மேல் ஒரு தலையாய்க் காதல் கொள்கிறார். சற்றே பயந்த மாதிரியான இவர் பாத்திரம் அருமை.
கான் என்கிற போலீஸ் அதிகாரி கர்ப்பிணி முன்பே புகைக்கிறார், வித்யா அதை object செய்கிற போதும் ! முதலில் கான் ஒரு கெட்டவர் என நினைத்தேன். ஆனால் அவர் பாத்திரம் பல வண்ணங்களில் பயணிக்கிறது. செம கேரக்டர் !
சீரியல் கில்லர் பாப் பாத்திரம் மக்களிடையே செம பாபுலர் ஆகி விட்டது. எல்.ஐ சி ஏஜன்ட் போல வந்து “ஒரு நிமிடம் பேசலாமா” என்று கேட்டு, அரை நிமிடத்தில் கொல்லும் இவர் அதிர வைக்கிறார்.
லாட்ஜில் இருக்கும் சிறுவன்,innocent புன்னகையால் மனதைக் கவர்கிறான்.
இப்பட இயக்குனர் சுஜாய் கோஷ் ஹிந்தி பீல்டுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முன் எடுத்த மூன்று படங்களும் செம டப்பா ஆகி விட்ட நிலையில் வாழ்வா சாவா என எடுத்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
எட்டு கோடியில் எடுத்து நூறு கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது. கமர்ஷியல் வெற்றி தாண்டி விமர்சகர்கள், சாதாரண மக்கள் என அனைவரையும் இந்தப்படம் திருப்திப்படுத்தி உள்ளது.
படம் தமிழிலும் வரப் போகிறதாம். வித்யா ரோலுக்கு அனுஷ்காவை பேசிவருகிறார்கள். அழகு+நடிப்பு இரண்டும் உள்ள அனுஷ்கா இதற்கு சரியான சாய்ஸ்தான்!
கஹானி-அவசியம காண வேண்டிய படம்!
இந்திப் படம் பார்க்காதோரையும் அங்குள்ள முக்கிய திரைப்படத்தின் பால், கவனத்தை ஈர்த்திருக்கிறார் மோகன் குமார். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற வகையில் இந்த மொழிமாற்றத் திரைப்படங்களையும் சேர்க்கலாமா?
தங்கள் நல் வார்த்தைகளுக்கு நன்றி அண்ணா கண்ணன். நண்பன் படம் ஹிந்தியிலிருந்து வந்தாலும் நம் மக்களிடம் நன்கு சென்று சேர்ந்தது போல் இப்படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கிறேன். சரியான இயக்குனரும் ஹீரோயினும் அமைவது மிக முக்கியம்