சக்தி சக்திதாசன்


தமிழன்னை மடியினில் தவழ்ந்தான் ஒரு தவப்புதல்வன். கவிதைப்புனல் கொண்டு தமிழன்னையை ஆராதித்தான் அந்தக் கவிமகன். வாழ்வின் நிகழ்வுகளை தமிழ்நயம் கொண்டு காதுகளில் தேனாய்ப் பாய விட்டான் அந்தக் காவியத்தாயின் இளையமகன்.

அந்த இனியமகனை, ஈடில்லாக் கவிஞனை, அனுபவப் புலவனை பூமியில் எமக்கெல்லாம் பரிசாக அளித்த புனிதமான தினம் தான் ஜீன் 24ம் திகதி.

ஆம் என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எண்பத்தி ஆறு அகவைகளின் முன்னே இவ்விகத்தினில் முகிழ்த்தது இந்நாளே.

என்ன எத்தனையோ பாடலாசிரியர்கள் வரவில்லையா? இனிய கானங்களைத் தரவில்லையா ? எனச் சில மூலைகளில் இருந்து கேள்விகள் எழாமல் இல்லை. வந்தார்கள் தான். அவர்களும் இனிய பாடல்களைத் தந்தார்கள் தான். ஆனால் கவியரசருக்கு இருக்கும் தனிப்பெருந் தகைமையே அவரின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத கானங்கள்.

அவர் எமக்கு அளித்த திரைப்பாடல்கள் மட்டுமல்ல கட்டுரைகள், கதைகள், திரைக்கதை வசனங்கள், பத்திரிகைகள் எனப் பலவுமே அவரது தனிப்பெரும் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன.

இந்த மகத்தான தினத்திலே கவியரசரின் படைப்புக்களில் சிலவற்றைப் புரட்டிப் பார்ப்பது அவரது நினைவுகளுக்கு நான் செய்யும் காணிக்கை என்றே எண்ணுகிறேன்.

தான் பாடல்கள் எழுவதற்கு தனக்கு உறுதுணையாக இருந்தது கம்பராமாயணம் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் கவியரசர். கம்பரிலக்கியத்தில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அது சாதாரண பாமர ரசிகனையும் சென்றடைய வேண்டும் எனும் அவாவினால் சில பாடல்களின் கருத்தை எளிமையான தமிழினில் ஆக்கி பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்த அற்புதக் கவிஞர் கோமகன் அவர்.

இதோ அவரின் கவிதை ஒன்றின் பகுதி,

“எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு,

செப்புவதெல்லாம் கம்பன்

செந்தமிழாய் வருவதனால்;

அக்காலம் அப்பிறப்பில

அழகு வெண்ணை நல்லூரில்

கம்பனது வீட்டில்

கணக்கெழுதி வாழ்ந்தேனோ?

நம்புகிறேன் அப்படித்தான் “

ஆமாம். தான் கம்பன் வீட்டில் கணக்கெழுதி வாழ்ந்திருப்பேனோ என வித்தியாசமான அவரது கேள்வி,

“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்” 

எனும் வாக்கியத்தை எமக்கு செவ்வனே புரியவைக்கிறது.

அவரது பல பாடல்களில் கம்பனை வம்புக்கிழுக்கிறார் எம் கவியரசர். அதுவும் கம்பன் மீது கொண்ட வாஞ்சையினால் தான்.

கம்பன் ஏமாந்து விட்டானாம் எப்படி என்கிறீர்களா ? கன்னியரை ஒரு மலர் என்று சொல்லி விட்டானாம். நாயகன் தான் விரும்பும் பெண் தன்மீது ஊடல் கோபம் கொண்டிருப்பதை அறிந்து அவளைத் தன்வயப்படுத்துவதற்காக பாடும் ஒரு பாடலில் வரும் வரிகள் அவை.

ஒரு மலரின் இதழைத் தென்றல் தீண்டும் போது அது எத்தனை இதமாக இருக்கும் தெரியுமா? அந்தச் சுவையை, இனிமையை எதற்கு ஒப்பிடுகிறார் எம் கவியரசர், கம்பனுடைய வருணனைகளில் இருக்கும் இனிமையைப் போன்றதாம் தென்றல் மலர்களின் இதழ்களைத் தீண்டும் இன்பம்.

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” எனும் பாடலை ஆக்கும் போது அவருக்கு “இதழை வருடும் பனியின் காற்று, கம்பன் செய்த வர்ணனை” என்கிறார் போங்கள் !

ஆலயமணி எனும் படத்தில் நாயகன் சிவாஜி தன் உளங்கவர்ந்த கன்னி சரோஜாதேவியைப் பாடலில் வர்ணிக்கும் போது விட்டாரா கம்பனை ?

“கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?” எப்படி கருத்தைப் புதைத்திருக்கிறார்? அழகிலும், கற்பிலும்,பணிவிலும், தன்மீது கொண்ட அன்பிலும் தன் நாயகி சீதையின் புத்திரி என்றல்லவா கம்பனைத் துணைக்கிழுத்து ஒப்பனை செய்திருக்கிறார் !

இராமாயணத்திலே வரும் ஒரு காட்சி. தான் தெய்வமாகத் தொழும் அண்ணன் ஸ்ரீராமனைக் காட்டுக்குப் போகச் சொல்லி விட்டார் தந்தை என வெகுண்டெழுந்தான் இலட்சுமணன்.

அவனது கோபத்தைத் தணிக்க ஸ்ரீராமன்.

இதைக் கம்பர் தன் பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.

நதியின் பிழை அன்று நறும்புனல்

இன்மை அற்றே

விதியின் பிழை இதற்கு என்னை

வெகுண்டது என்றான்”

சாதாரண பாமர ரசிகனால் புரிந்து கொள்ள முடியாத இலக்கியப் பாடலை எப்படி எம் இணையற்ற கவியரசர் எளிமையாக்கியிருக்கிறார் பாருங்கள் !

“நதி வெள்ளம் காய்ந்து விட்டால்

நதி செய்த குற்றமில்லை

விதி செய்த குற்றமின்றி

வேறு யாரம்மா?”

நாயகன் பார்வையை இழந்து விடுகிறான். தன் மறைந்து போன(தாக நினைத்துக் கொண்டிருக்கும்) மனைவிதான் தன்னோடு இருப்பவள் என்று அறியாமல் தன் மனநிலையைக் கூறும் வரிகளைப் பாருங்கள்.

“என்னை யாரென்று எண்ணி, எண்ணி நீ பார்க்கிறாய்?

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்?

நான் அவள் பேரைத் தினம் பாடும் குயிலல்லவா?

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா?”

இத்தனை துல்லியமாக, எளிமையாக ஒரு மனிதனின் மனதிலுள்ள காதலை யாரால் இயம்பிட முடியும்.

கவியரசரின் பாடல்களில் உள்ள வரிகளில் பல, சிந்திக்கும் போது பல வித்தியாசமான கருத்துக்களை நெஞ்சில் திணிக்கும் வல்லமை படைத்தவை.

உதாரணமாக நான் ஏறக்குறைய 38 வருடங்களுக்கு முன்னர் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவன். கவியரசரின் காதல் பாடலில் உள்ள வரிகள் நான் எனது தாய்மண்ணை விட்டுப் பிரிந்திருக்கும் உணர்வினை அப்படியே வடித்துக் காட்டுவதாக நான் சிந்திப்பதுண்டு.

அப்படியான அவ்வரிகள் என்ன என்கிறீர்களா?

“எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா ?

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி……

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா?”

ஆமாம் கவியரசரின் வரிகள் என் நெஞ்சத்து உணர்வுகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

தினமும் இங்கிலாந்துக்கும், எனது தாய்நாடான ஈழத்திற்கும் நான் எண்ணங்களாலே தான் பாலம் அமைத்து நடக்கிறேன். என் தாய்மண்னை விட்டு இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இருகரம் கொண்டு வணங்குகிறேன்.

கவியரசர் ஒரு நேர்காணலில் தன் குரலிலேயே சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரூ பாடல் நல்ல பாடல் என்று எப்படி தீர்மானிப்பது என்னும் கேள்விக்குப் பதிலளிக்கும் போது, நல்ல மெட்டு உள்ள பாடல்கள் மட்டும் தான் நல்ல பாடல்கள் என்பது அல்ல, ஒரு பாடலைத் தனியே இருந்து கேட்கும் போது அது சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தால் தான் அது நல்ல பாடலாகும். நான் எழுதும் பத்துப் பாடல்களில் ஏழு பாடல்களாவது அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று பதிலளித்திருந்தார் எம் கவியரசர்.

மெட்டைக் கொடுத்து பாடல் எழுதச் சொல்லும் காலத்தை மாற்றியமைத்து பாட்டை எழுதி அதற்கு மெட்டுப் போடச் சொல்லும் காலத்தை உருவாக்கியதில் கவியரசர் வகித்த பங்கு பிரதானமானதும், அளப்பரியதும் ஆகும்.

அதற்காகவே தானே “மாலையிட்ட மங்கை” எனும் படத்தைத் தயாரித்து திரைக்கதை வசனம். பாடல்கள் எழுதினார் நம் கவியரசர். அதிலே அக்கால கதாநாயகன் டி.ஆர் மகாலிங்கம் பாடி நடித்த “செந்தமிழ்த் தேன்மொழியாள்” பாடலை இன்று கேட்டாலும் நெஞ்சம் துள்ளும். அதே போல “வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள் ” எனும் பாடல் இன்றும் நெஞ்சத்தை அள்ளிக் கொண்டு செல்லும்.

நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லுவதையே எங்கே என்னை மதவெறியன் என்று சொல்லி விடுவார்களோ என்று அறியாமையில் மூழ்கிக் கிடந்த என்னை “நான் ஒரு இந்து” என்று பெருமையாக சொல்ல வைத்தது கவியரசரின் படைப்பான அர்த்தமுள்ள இந்துமதமே. இது எனது நெஞ்சார்ந்த உண்மை.

அது மட்டுமல்ல மதத்தை அணிகலனாகக் கொள்ளலாமே ஒழிய ஆடையாகக் கொள்ளக்கூடாது எனும் வகையில் எனது அகக் கண்களைத் திறந்ததும் அவர் படைப்புக்களே.

எனது மதத்திற்கு நான் கொடுக்கும் மதிப்பு மற்றைய மதங்களை எவ்வாறு மதிக்கிறேன் என்பதிலேயே தங்கியுள்ளது என்பதையும் மிகவும் எளிமையாகப் புரிந்து கொண்டதும் கவியரசரின் படைப்புக்களால் தான்.

அதற்கு,இராமன், இயேசு, அல்லா மூவரையும் ஒரே தளத்தில் நிறுத்து. மூன்றும் வெவ்வேறு நதிகள். ஆனால் அவை சேரும் இடம் ஒன்றுதான் எனும் அற்புதத் தத்துவத்தைச் சொல்லும் பாடலின் மூலம் அருமையான தத்துவத்தை அழகாய்க் கூறினார்.

அர்த்தமுள்ள இந்துமதம் மட்டுமின்றி, இயேசுகாவியமும் படைத்தார் எம் கவியரசர்.

அவ்வினிய தமிழ்மகனின் பிறந்த தினத்தில் எனது காணிக்கை.

ஆராதிப்போம் நாமும் அன்புடனே

அகவைகள் எண்பத்திஆறு ஆயிற்று
அரும்பெரும் கவியரசர் தமிழ்
அகிலத்தில் அவதரித்து , அதனை
ஆராதிப்போம் நாமும் அன்புடனே

கலங்காதிரு மனமே என ஆரம்பித்து
கண்ணே ! கலைமானே ! என முடித்தார்
கண்டோம் நாம் அதனுள் பல ஆயிரம்
கண்ணான பாடல்களை அவரிடத்தில்

அர்த்தமில்லா இப்புவியுலக வாழ்வதனை
அறிந்தார் நன்றே எம் கவியரசர் அதனால்
அர்த்தமுள்ள இந்துமதம் தனைத் தந்தார்
அத்தனையும் அதனுள் முத்துக்கள் தானே

முத்தான எம் கவியரசர் சிறுகூடல் பட்டியில்
முத்தையாவாக முகிழ்த்தாரே அன்றொருநாள்
முத்தமிழின் வரலாற்றில் அது ஓர் பொன்னாளே
முழுத்தமிழரும் கொண்டாடும் அந்நாள் இந்நாளே

எத்தனை இடர் கண்டார் அவர்தம் வாழ்வினிலே
அத்தனையும் வாழ்வி; அனுபவம் எனும் படிகளாக்கி
அழகாய் வடித்திட்டார் வனவாசம் பின்னே மனவாசம்
அவரின் வழியில் அறிந்தேன் தமிழின் பெருமைகளை

காதலின் சுவை சொன்னார் கண்ணதாசன் அவர்
கன்னியரின் வகை சொன்னார் கட்டான கவிதைகளில்
கவலைகளின் நிலை சொன்னார் எம் கவிஞர்
காலத்தால் அழியாத தாலாட்டுப் பாடல்கள் தந்தார்

அரசியல் எனும் சேற்றில் அவர் பாவம்
அறியாமல் காலை விட்டார் , அறிந்தார்
அழுக்குத்தான் இவையென உணர்ந்ததினால்
ஆன்மீகப் பாதையில் அமைதியாய் பயணித்தார்

நல்ல பாடல்கள் தானிவை எனத் தொடங்கி
நான் கற்ற்றுக் கொண்ட விடயங்கள் பல‌
அனுபவம் எனும் கல்வியை நானும்
அனுபவித்தே கற்றேன் அவர் படைப்புகளில்

போனால் போகட்டும் போடா என்றார்
பிறக்கும் போதும் இறக்கும் போதும்
அழுகின்றாயே மனிதா என அவர்
ஆக்கிய பாடல்கள் சொன்ன கதை ஆயிரம்

மனதில் நான் வரித்துக் கொண்ட என்
மனாசீகக்குரு கவியரசர் கண்ணதாசன்
மண்ணில் உதித்த இத்தினத்தை நான்
மாண்புமிகு தினமாக மதித்து வணங்குகிறேன்

உலகில் கடைசித் தமிழன் வாழும் வரை
உயரவே பறக்கும் கவியரசரின் புகழ் கொடி
கவியத்தாயின் இளையமகனின் பாதம் தொட்டு
கண்ணீர் செலுத்தி வணங்கிப் போற்றுகிறேன்

அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

http://www.thamilpoonga.com/

http://www.facebook.com/sakthi.sakthithasan

படங்களுக்கு நன்றி : பல இணையத்தளங்கள்

 

 

பதிவாசிரியரைப் பற்றி