இலக்கியம்கவிதைகள்பொது

உள்ளத்தில் வந்த உமை

 

திவாகர்

உலகுக்கு உயிர் கொடுத்தவளே
உலகம் உய்யவழி வகுத்தவளே
உலகாளும் உத்தமியே உமையாளே
உலகறிய கேட்கின்றேன் உனையே

உள்ளத்தில் ஊறிய கேள்விகள்பல
கள்ளமனங்கொண்டு கேட்பேனேயாகின்
பிள்ளைதானே இவனென பிழைபொறுத்தென்
உள்ளத்தே வந்திருந்து பதில்சொல்தாயே

பலபேர் ஓர்நாள்கூட்டமாய் என்னெதிரே
செலவாகிப்போன அவர்வாழ்வின் காலத்தை
பொலபொலவென பலகதைகள் பலசொல்லி
புலம்பின சோகத்தை சொல்கின்றேன்கேள்

கல்லாதவன் பொல்லாதவன் பெரியோர்
சொல்கேளாதவன் கல்மனமும் உண்டாம்
எல்லாமுஞ்சேர்ந்து வாழ்வுதனைச் சூதுகவ்வ
நில்லாமல்நின்று தள்ளாடும்வாழ்வும் ஒருவாழ்வோ

ஊரெல்லாம் பொய்ப்பேச்சு உறவெல்லாம்
தேர்போல எமையிழுத்துச் சேர்த்தாலும்
பாரினிலே எமக்கிணையார் எனுங்கர்வத்தால்
கூர்வேல்கொண்டு சிதைத்த வாழ்வையென்சொல்வேன்

காசுக்கு விலையாகிப்போன காலமதே
தூசென தூற்றினாலும் தொற்றிக்கொண்டே
பேசும்வலியோன் அவைபேச்சை நம்பியவன்வாய்
கூசும் கொடுஞ்சொல் கேட்டும் வாழ்ந்தேனே

சீயெனத் துரத்தும் மனிதர்பின்னே
நாயெனத் தொடரும் காலங்களுண்டு
தாயினும் சிறந்துநின்றப் பல்லோரைப்
பேயெனப் பழுதாய்ப்பார்த்ததை என்னென்பேன்

அத்தனையும் வெளிவேஷம் என்றே
எத்தனைதான் இப்புத்திக்குப் பட்டாலும்
தித்தித்ததே அத்தனையும் அந்நாளில்
பித்தனாய்ப் போனேனே என்செய்கேன்

தெளிவெதுவெனத் தேடித்தெளிவுக்கு மருந்திதுவாம்
எளிதாகவெம்மை எந்நிலையிலும் வைப்பதுவாம்
களவாகிப்போன இதயத்தை மீட்பதெனநம்பி
கள்ளுக்கிரையாகி கண்ணிருந்தும் குருடாகிப்போனேனே

கல்லடிபட்டதில்லை கல்லால் அடித்ததுண்டு
சொல்லடிபட்டதில்லை சொல்லால் புண்செய்த
பொல்லாத காலமுண்டு நல்லோர்நெஞ்சை
பலமுள்கொண்டு தைத்தகதையை என்சொல்லியழுவேனோ

எத்தனையோ இன்பங்களைத் தொலைத்துவிட்டு

சித்தமெலாம் சிவமயமாய் இல்லாதநிலையில்
பித்தனாய் பொழுதைப்போக்கி எல்லோருக்கும்
எத்தனாயிருந்த என்சோகத்தை எளிதில்மறப்பேனோ

பாவைகள்பின்னே தடம்மாறி அவர்தம்பார்வைக்காக
ஏவல்கள்பல செய்துபலவேஷம்காட்டி ஏய்த்து
காவலாய் கால்மேலே தலைகீழேதொடர்ந்தாலும்
யாவும் எள்ளலாய்முடிந்தகதை என்சொல்லிமாள்வேன்

கண்ணேமணியே கற்பகமே கற்கண்டேயென
கண்ணால் பெண்பேசியதாய் கற்பனையாய்நம்பி
கண்ணாலங்கட்டுவெனக் கேட்டவுடன் கண்ணகியாய்
கண்ணாலே எரித்தவள்கதை என்வாழ்விலுண்டே

வீணானகாலத்தில் விலையாகப்போய்விட்டு வெள்ளிக்
கிண்ணத்தின்தேனை வெண்மண்ணில் கொட்டிவிட்டு
கண்ணெதிரே கொட்டிவிட்டதேனை மறுபடியுமெடுக்க
மண்ணுள்ளேத் தேடுமதியீனவாழ்வைக் கேண்மினோ

வாழ்வுவீணாகிப் போச்சுதம்பி வாழ்ந்தகாலமெலாம்
தாழ்வெனவே தாமதமாய்க் கண்டுகொண்டோம்
கூழுக்காகவாயைக் கூராயுதத்தால் கீறிக்கொண்டோம்
பாழுங்கந்தலாகிப் போயிற்றே இனியென்செய்வோம்

காலைமாலை போகின்றது காலம்கரைகின்றதுவாழ்வின்
சோலைகளையெல்லாம் சுண்ணாம்புக் களவாய்போல
வேலைமெனக்கெட மாற்றிவிட்டுக் காலம்போனபின்னே
ஓலமிடும் எம்வாழ்விதினி யாருக்கும்வரவேண்டாம்

ஒருவர்பின் ஒருவராய் அவர்களெல்லோரும்
ஒருவார்த்தை எனச்சொல்லி அவர் வாழ்க்கை
பெரும்சிறப்பாக இருக்கவேண்டி ஆசைப்பட்டு
சிரிப்பாகப் போனகதை செவியாறக்கேட்டேனே

புத்தி தெளிந்ததாபித்து பிடித்ததா
தித்திப்பான வாழ்வைக் கசப்பாக்கும்
சத்தியம் உணர்ந்தேன் இதுதான்சமயமென
புத்திக்குள்ளே ஒளிந்திருந்தவன் வெளிவந்தான்

என்மனசாட்சியாம் பேசுகின்றான் எனக்குள்ளே
இன்னபிறர் சொன்னகதை அத்தனையும்கேட்டாய்
பின்னாலுன் வாழ்க்கையைச் சற்றேதிரும்பிப்பார்
சொன்னதில் எள்ளளவேனும் உனக்கும்பங்குண்டே

என்னுள்ளத்தில் வந்தவளே எமையாளும்உமையவளே
என்மனமறிந்தவளே மனசாட்சிசொன்னதும் சரிதானே
என்னெதிரே பலர்சொன்ன இன்னல்களிவையே
எனக்கில்லை என்வாழ்வில் இதையுமறிவாயே

உள்ளத்தினுள்ளே உறுதியாய் நீஇருக்க
பள்ளத்தில் விழுந்தாலும் பாதைமாறிப்போனாலும்
சுள்ளெனச்சுடும் தீயேதோன்றித் தகித்தாலும்
எள்ளத்தனை இன்னலும் எனக்கில்லையம்மா

தவறென்று தெரியும்போது தடுத்திட்டாயே
கவலைகள் கண்ணில்பட்டால் கலைத்திட்டாயே
சிவமிருக்குன் சீவனுக்குள்ளென தெளிவித்தாயே
சிவகுருவும் நீதானெனத் தெரிந்துகொண்டேனே

உன்பாதமலரில் சிரம்தாழ்த்தி வேண்டுவதே
உன்னுறவு உன்பேச்சு உன்னுடந்தையென்றே
உன்னாமமெப்போதும் எந்நாளும் என்னாவிலே
உன்னருளால் உரைத்திடச்செய்வாயே உமையே!

படங்களுக்கு நன்றி:

https://picasaweb.google.com/lh/photo/KXamRZOUtmy0QLTiSzwaLg

http://wayneharrel.zielix.com/how-great-leaders-inspire-people/

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (3)

 1. aaha. arumai Dhivakar. sollave Illaiye.. Ragasiyama irundha vittuduvomaa?  thedinen vandhathu  Thamizh sir idhu.. Thalai Vanagugiren. – Dhevan

 2. உன்பாதமலரில் சிரம்தாழ்த்தி வேண்டுவதே
  உன்னுறவு உன்பேச்சு உன்னுடந்தையென்றே
  உன்னாமமெப்போதும் எந்நாளும் என்னாவிலே
  உன்னருளால் உரைத்திடச்செய்வாயே உமையே!

  naanum appadiye – Dhevan

 3. வீணானகாலத்தில் விலையாகப்போய்விட்டு வெள்ளிக்
  கிண்ணத்தின்தேனை வெண்மண்ணில் கொட்டிவிட்டு
  கண்ணெதிரே கொட்டிவிட்டதேனை மறுபடியுமெடுக்க
  மண்ணுள்ளேத் தேடுமதியீனவாழ்வைக் கேண்மினோ

  aaha, enna solrathu? vaazhga vazhga – Dhevan

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க