இங்கிலாந்து சந்திக்கும் புதிய கேள்விகள்

1

சக்தி சக்திதாசன், இலண்டன்

sakthidasanஇங்கிலாந்தில் முதன் முறையாக ஒரு கூட்டணி அரசாங்கம் அமைந்து, ஏறத்தாழ ஒரு வருடம் பூர்த்தியாகிறது. இது, வலது சார்புக் கொள்கைகளைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியும், இடதுசார்புக் கொள்கைகளைக் கொண்ட லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கூட்டணி அரசாங்கம்.

பொருளாதாரச் சிக்கல்களினால் முகிழ்த்த முடிச்சுகளை அவிழ்க்கும் கொள்கைகள் நம் வசம்தான் இருக்கிறது என்று பிரசாரம் செய்த கன்சர்வேடிவ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மையைக் கொடுக்குமளவிற்கு மக்கள் அவர்களை நம்பவில்லை என்பதையே அப்போதைய தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின.

இங்கிலாந்து நாட்டின் அரசாங்கத்தின் கடன் தொகை, முன்னேற்றமடைந்த மேற்கத்திய நாடுகளின் மத்தியில் மிகவும் அதிகமான அளவை எட்டி விட்டது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் ஜஸ்லாந்து நாடு அடைந்த வங்குரோத்து நிலையை இங்கிலாந்து எட்டி விடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்னுமொரு அச்சம் மிகுந்த வாதத்தை அப்போதைய எதிர்க் கட்சியினரும், இப்போதைய கூட்டணி அரசாங்கத்தின் பெரும்பான்மையாளர்களுமான கன்சர்வேடிவ் கட்சியினர் முன்னேடுத்தார்கள்.

David Cameronஇக்கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றைய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சி, தாம் எப்போதுமே அரசாங்கம் அமைக்கும் அளவிற்கு வர மாட்டார்கள் என்பது திண்ணமாகத் தெரிந்தவகையில் ஏனோ, தானோவென்று மக்களைக் கவரும் பலவிதமான கொள்கைகளைத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டார்கள்.

ஆனால் காலத்தின் மாற்றம், எதிர்பாராத வகையில் அவர்கள் கூட்டரசாங்கத்தின் ஓர் அங்கமாகி விட்டார்கள். சர்வகலாசாலையில் கற்பதற்கு மாணவர்களுக்குக் கட்டணம் வ‌சூலிக்கத் தொடங்கிய கடந்த லேபர் கட்சி அரசாங்கம் (தற்போதைய எதிர்க் கட்சி), மீண்டும் அரசமைத்தால் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மேலும் உயர்த்துவார்கள். நாம் இதை முற்றாக எதிர்க்கிறோம் என்று மாணவர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்த தொகுதிகளிலெல்லாம் பிராசரம் செய்த தற்போதைய உதவிப் பிரதமரும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவருமான நிக் கிளேக், மாணவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றார். லிபரல் டெமகிரட்ஸ் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வாக்களித்தவர்களில் மாணவர்களே அதிகம்.

raise tuition fees in Englandஎதிர்க் கட்சிகளில் ஒன்றாக இருப்பது மிகவும் சுலபம், ஆனால் ஆளும் கட்சிகளில் ஒன்றாக இருப்பது எத்தனை கடினம் என்பதை முதன் முறையாக லிபரல் டெமகிரட்ஸ் கட்சி உணர்ந்தது. அவர்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான மாணவர்களுக்கான கட்டணத்தை இல்லாமல் ஆக்குவதாகச் சொல்லப்பட்ட கொள்கைக்கு எதிராக ஆளும் கட்சிகளில் பிரதானமான கான்சர்வேடிவ் கட்சியினால் கொண்டு வரப்பட்ட மாணவர்களுக்கான கட்டண உயர்வை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட லிபரல் கட்சியின் செல்வாக்கு, பொலபொலவென்று சரிந்தது.

இந்தக் கொள்கை மட்டுமின்றி, இன்னும் பல கொள்கைகளில் லிபரல் கட்சி எடுத்த நிலைமை, அவர்களை ஒரு கொள்கையற்ற பதவிக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஒத்தூதும் கட்சி என்ற அபிப்பிராய வட்டத்துக்குள் தள்ளிவிட்டது. அதன் விளைவாக சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் லிபரல் டெமகிரட்ஸ் வேட்பாளர் கட்டுப் பணத்தை இழந்து, ஆறாவது நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இங்கிலாந்து நாட்டின் தேசியக் கடனைக் குறைப்பது எப்படி என்னும் கருத்தில், மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை அதிக அளவில் குறைத்து, செலவுகளைக் கட்டுப்படுத்திக் குறைப்பது என்னும் நிலைப்பாட்டில் கன்சர்வேடிவ் கட்சியும், செலவுகளைக் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். ஆனால் அதற்காக மக்களை வேலையில்லாப் பட்டியலுக்குள் தள்ளக் கூடாது என்னும் நிலைப்பாட்டை லேபர் கட்சியும் எடுத்திருந்தன.

இந்த இரண்டு கருத்துகளில் கூடுதலாக லேபர் கட்சியின் கருத்துடனேயே ஒத்துப் போகும் வகையில் பிரசாரம் செய்த லிபரல் டெமகிரட்ஸ், தேர்தல் முடிந்ததும் பல்டி அடித்து கன்சர்வேடிவ் கட்சியுடன் கூட்டமைத்து அரசில் இணைந்துகொண்டதைப் பலவிதமான வித்தியாசமான கண்ணோட்டங்களுடன் மக்கள் பார்த்தார்கள்.

இன்றைய இங்கிலாந்து எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

no privatizationஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி. அரசாங்கத்தின் தேசியக் கடனின் பளுவைக் காரணம் காட்டி, வலது சார்புக் கொள்கைகளுடைய கன்சர்வேடிவ் கட்சி தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்கின்றதோ என்னும் கேள்வி பலருடைய மனங்களில் ஊசலாடுவது உண்மை.

இங்கிலாந்து நாட்டின் தேசியப் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படுவது இந்நாட்டு தேசியச் சுகாதார சேவையாகும். அனைவருக்கும் சுகாதாரச் சேவை வழங்கப்படும் இடத்தில் அது இலவசமாகவே வழங்கப்பட்டு வருவது, இந்நாட்டின் சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அத்தகைய சுகாதாரச் சேவையுள் தனியார் ம‌யப்படுத்தல் என்னும் கொள்கை மெதுவாக உள்நுழைக்கப்படுகிறதோ என்னும் சந்தேகம் ஊடுருவச் செய்கிறது.

நாட்டின் செலவைக் கட்டுப்படுத்துகிறோம் என்னும் போக்கில் பல வைத்திய சாலைகளில் படுக்கைகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டும், டாக்டர், தாதிமார்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் வருகிறது.

இதைப் பற்றிய விவாதம் எழும்போதெல்லாம் நாம் சுகாதாரச் சேவையின் தரத்தைக் குறைக்கவில்லை, அதற்காகச் செலவிடப்படும் பணத்தைக் குறைக்கவில்லை ஆனால் அச்சேவையை இன்னும் சிறந்த வகையில் நடைபெறக்கூடியதாகச் சீரமைக்கவே செய்கிறோம் என்று அரசாங்கம் சொல்கிறது.

இல்லையில்லை, கன்சர்வேடிவ் கட்சியினர், மிகப் பெருமையான, அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான தனியார் மயப்படுத்தலை மெதுவாக, மக்களுக்கு மிகவும் முக்கியமானதான சுகாதாரச் சேவையினுள் நுழைக்கிறார்கள். இதனால் நன்மையடையப் போவது, இக்கன்சர்வேடிவ் கட்சியின் நண்பர்களான பெரிய பண முதலைகளே என்று வாதிடுகிறது இடதுசார்புக் கொள்கைகளையுடைய லேபர் கட்சி.

நாட்டின் பணவரவை உயர்த்தும் முகமாக, பொருட்களுக்கான விற்பனை வரி (Value Added Tax)யை 17.5% இலிருந்து 20% ஆக உயர்த்தியதும் மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. இதனால் மக்களின் வாழ்வியலுக்கான விலைவாசி உயர்ந்துவிட்டது. இதன் பாதிப்பு, மக்களுக்கு மிகவும் உணரக்கூடியதாக உள்ளது.

மோட்டார் வாகனங்களுக்கான எரிபொருளின் விலை, மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கு மற்றொரு காரணம், மத்திய கிழக்கு நாடுகளிலே கணப்படும் அரசியல் ஸ்திரமற்ற நிலையாகும்.

இக்கூட்டு அரசாங்கத்தின் அடுத்த செலவீனக் கட்டுப்பாடாக நாட்டின் இராணுவத்திற்கும் பாதுகாப்பிற்குமான செலவை மிகவும் கணிசமான அளவில் குறைத்தமை. ஈராக், ஆப்கானிஸ்தான் என்று மற்றைய நாடுகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்று நீண்ட கால யுத்தங்களில் எமது இராணுவத்தினரை ஈடுபடுத்தி விட்டு, அவர்களுக்கான பட்ஜெட்டைக் கட்டுப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது என்னும் கேள்வி, பல திக்குகளிலும் இருந்து எழுகிறது.

இங்கிலாந்தில் கடந்த வருடம் தேர்தலுக்கு முன்னிருந்தே பேசப்பட்டு வரும் பெரியதோர் பிரச்சனை, வெளிநாட்டவரின் குடிவரவு ஆகும். இக்குடிவரவை, கடந்த லேபர் அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் விட்டதால் பலவிதமான நெருக்கடிகளுக்கு உள்நாட்ட‌வர்கள் முகம் கொடுக்க வேண்டி வந்தது என்னும் ஒரு கருத்து பொதுவாக உள்நாட்டு மக்களிடையே நிலவி வந்தது உண்மை.

royal mailவெளிநாட்ட‌வரின் இங்கிலாந்து வருகையை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து கட்டுப்படுத்துவது என்னும் கொள்கையைக் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் உரத்துப் பிரசாரம் செய்து வந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் கன்சர்வேடிவ் கட்சியுடன் கைகோர்த்திருக்கும் லிபரல் டெமகிரட்ஸ் கட்சியோ, கள்ளத்தனமாக இங்கு வந்து குடியேறி அனுமதியின்றி வசிக்கும் வெளிநாட்டவர் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம் இங்கிருக்கும் அனைவரையும் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக ஆக்கி விட்டு, அதன் பின்பு குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைப் பற்றிப் பேசலாம் என்றே பிரசாரம் செய்து வந்தது.

ஆனால் இன்றோ தாமும் பங்காளர்களாக இருக்கும் இக்கூட்டரசாங்கத்தில் கன்சர்வேடிவ் கட்சி கொண்டுவரும் கடுமையான விதிகளை ஆதரிக்கும் நிலைக்குத் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் வந்துள்ளார்கள்.

இங்கிலாந்தினைப் பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுவிப்பதற்காக அரசாங்கம் அறிவித்த கடுமையான அரசாங்க அலுவல்களின் தொழில் மாற்றங்கள், அரசாங்க உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கின்றது. இது கட்டம், கட்டமாக அமலுக்கு வரும் போது பலர் தமது வேலையை இழக்கும் நிலை ஏற்படும், ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

நேற்றைய அறிவிப்பின்படி இங்கிலாந்தின் அரசாங்கத் தபால் சேவையான ராயல் மெயில், தமது இரண்டு லண்டன் ஆபிஸ்களிலிருந்து 1700 பேரை ஆட்குறைப்புச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

இக்கூட்டரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் கடுமையனவை இவை மக்களின் வாழ்க்கை முறையைக் கடுமையான வகையில் தாக்கப் போகின்ற‌ன என்று எதிர்க் கட்சியான லேபர் கட்சி எச்சரித்த வண்ணம் இருக்கின்றது.

பணப் புழக்கைத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மையம் ஒன்றின் சமீபத்திய அறிக்கையின்படி, மக்களின் பையிலிருக்கும் பணத்தின் வலு குறைந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

அதாவது 2008ஆம் ஆண்டு தனது பையில் 200 பவுண்ட்ஸ் வைத்திருந்த ஒருவருக்கு அப்போது அந்த 200 பவுண்ட்ஸ்க்கு இருந்த வலு தற்போது அவரது பக்கெட்டில் இருக்கும் 200 பவுண்ட்ஸ்க்கு இல்லை என்னும் வகையில் அந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் கடன் சுமை அதிகரிக்கக் காரணமாயிருந்தது வங்கிகள், தமது குறுகிய கால லாபத்திற்காக தூரப் பார்வையின்றி கன்னா பின்னாவென்று அனைவருக்கும் கடன் கொடுத்து அதைத் திருப்பிப் பெறமுடியா நிலையில் இருந்ததுவே என்பதே பொதுப்படையான கருத்து.

இந் நிலையில் அவ்வங்கிகளைக் காப்பதற்காக உதவி செய்த அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கி சிறுதொழில் மேம்பாட்டிற்காக உதவுவதில் வங்கிகள் மிகவும் தயக்க நிலையைக் கடைப்பிடிக்கின்றன என்ப‌து ஒரு குற்றச்சாட்டு.

அத்தோடு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரிய தொகையிலான போனஸ்களையும், அதியுயர் சம்ப‌ள உயர்வினையும் கொடுப்பது எப்படி நியாயமாகும்? என்பது, ஒரு சாராரின் வாதம். ஒரு பக்கம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரம் தத்தளிக்கிறது. மறுபுறம், இத்தகைய வங்கிகளின் தலைவர்கள் எண்ணமுடியாத அளவு  ஊதியத்தைப் பெறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் என்று வாதிடுகிறார்கள்.

Muammar al-Gaddafiஇத்தகைய ஒரு இக்கட்டான சந்தியில் இங்கிலாந்து நின்றுகொண்டிருக்கும் போது, “பழைய குருடி கதவைத் திறவடி” என்னும் பழமொழிக்கேற்ப மீண்டும் ஒரு யுத்தத்தில் இங்கிலாந்து இராணுவத்தை ஈடுபடுத்திவிட்டது இவ்வரசாங்கம்.

லிபிய நாட்டு மக்கள் அவர்களது சர்வாதிகாரத் தலைவரான கடாபிக்கு எதிராக ஜனநாயகப் போர்க்கொடியைத் தூக்கியுள்ளார்கள், அவர்களைக் கண்மூடித்தனமாக அழிக்கும் முயற்சியில் கடாபி இறங்கியுள்ளதால் நாம் அம்மக்களுக்குத் துணை போக வேண்டியது எமது தார்மீகக் கடமை.

இக்கூற்றின் அடிப்படையில் மீண்டும் உலகப் பாதுகாவலர்களாக‌ உருவெடுத்திருக்கிறார்கள் இங்கிலாந்து அரசியல்வாதிகள்.

இவர்களின் இத்தலையிடுதலின் இறுதி நோக்கமென்ன? என்னும் விடையறியா வினாக்கள், மக்கள் மனங்களில் தலைவிரித்தாடுகின்றன.

எங்கே இந்த யுத்தம், இன்னொரு ஈராக்காக, இன்னொரு ஆப்கானிஸ்தானாக, தம் கால்களில் ஏற்றப்படும் சுமைகளாகிவிடுமோ என்னும் அச்சம், பலரின் மன‌ங்களிலும் இருக்கிறது.

இல்லை. ஒருபோதும் அப்படி இருக்காது. நாம் எமது தரைப் படைகளை லிபிய தேசத்தினுள் அனுப்பப் போவதில்லை. கேர்னல் கடாபி தமது மக்களை அநியாயமாக அழித்து விடக்கூடிய வல்லமையைத் தடுக்கும் நடவடிக்கைகளே எமது நடவடிக்கைகள் என்கிறார்கள் அமெரிக்க, இங்கிலாந்து, பிரெஞ்சு கூட்டுப் படையினர்.

இதற்கான விடையைக் காலமே பகரப் போகிறது.

ஒரு மிக முக்கியமான சந்தியில் இருக்கும் இங்கிலாந்து எந்த வகையில் தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி.

உலகத்தில் பல நாடுகளில் சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் உரிமை இங்கிலாந்து, அமெரிக்கக் கூட்டணிக்கு இருக்கிறதா?

இக்கேள்விக்கான‌ விடையை, இச்சமுதாயத்தின் அங்கமான புலம்பெயர் தமிழ்ச் சமுதாயமும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய தேவையிருக்கிறது. இங்கிலாந்து தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலச் சந்ததி, பொருளாதாரச் சிக்கல்களை மட்டுமல்ல, அச்சிக்கல்களினால் குதிரும் இனவேற்றுமைக் காரணிகளையும் எதிர்கொள்ள வேண்டிய தேவையில் இருக்கிறார்கள்.

இவ்வரசாங்கத்தின் தலையெழுத்தையும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப் போகும் காரணிகள்

1) தற்போதைய அரசாங்கத்தின் கடுமையான செலவீனக் கட்டுப்பாட்டின் விளைவு, அவர்களின் கூற்றுப்படி தேசியக் கடனின் அளவைக் குறைத்து, எதிர்காலத்தை ஒரு தீர்க்கமான அத்திவாரத்தில் எழுப்புகிறதா?

2) எந்த அளவிற்கு அரசாங்கக் கூட்டணியின் பெரும்பான்மைக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தனித்துவத்திற்கு மதிப்பளிக்கிறது?

3) பிரதமரின் கூற்றுப்படி, லிபிய‌ நாட்டின் அரசியல் குழப்பத்தின் தலையீடு அவர்களுக்கு உண்மையான ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்கப் போகிறதா?

உள்ளத்தில் உதிக்கும் கேள்விகள் ஆயிரம். இவற்றுக்கு விடை உங்களிடமும் என்னிடமும் இருக்கிறதா?

==================================

படங்களுக்கு நன்றி: http://lalqila.wordpress.com, http://www.architectsjournal.co.uk, http://www.justmeans.com, http://www.hellmail.co.uk, http://www.zimbio.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்து சந்திக்கும் புதிய கேள்விகள்

  1. இதற்கு முந்தைய லேபர் கட்சியின் ஆட்சியை, ‘கன்ஸெர்வேட்டிவ்’ ஆட்சி என்று நான் கேலி செய்வது உண்டு. அந்த அளவுக்குத் ‘தனியார்’ மேல்நிலைக்கு வர முயன்றார்கள். பிரதமர் டேவிட் கேமரான் செலவீனக் கட்டுப்பாட்டு செய்வதில் தவறு ஒன்றும் காணக் கிடைக்கவில்லை. இந்த அரசு,

    ‘சுகாதாரச் சேவையின் தரத்தைக் குறைக்கவில்லை, அதற்காகச் செலவிடப்படும் பணத்தைக் குறைக்கவில்லை ஆனால் அச்சேவையை இன்னும் சிறந்த வகையில் நடைபெறக்கூடியதாகச் சீரமைக்கவே செய்கிறோம்…’

    என்று சொல்வது புதிது அல்ல. அவர்களுக்கு வாய்ப்பும் நேரமும் கொடுக்க வேண்டும். இந்தச் சேவையைக் கொணர்ந்த பொருளியல் மேதை பார்பாரா கேசில் அவர்கள், சிக்கனத்துக்கு முக்யத்துவம் கொடுத்தார்.

    மற்ற இரு கேள்விகளுக்கு பதில் அளித்தால், அது நீண்டு விடும். நன்றி, திரு. சக்திதாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *