சு.கோதண்டராமன்

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.

சேருங்கள் திறனையெலாம், செலுத்திடுவோம் படகினையே.

எல்லையிலாப் பெருங்கடலாம் இதுவென்று தெரிந்தும்

எல்லையதைக் கண்டுவிட எண்ணியிதில் புறப்பட்டோம்

 

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.

பாருங்கள் படகினையே, பக்கத்தில் நோக்காதீர்.

 

அடிப்புறத்தில் ஒர் ஓட்டை. அதனாலென் நண்பர்களே?

அஞ்சாமல் செலுத்திடுவோம் அக்கரையை நோக்கிடவே.

ஓட்டை வழி நீர் புகுந்து உட்புகுந்தால் அஞ்சுவதேன்?

ஓயாது இறைத்துவிட உள்ளனவே இரு கரங்கள்.

 

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை

ஓருங்கள் இக்கூற்றை, உழைப்பொன்றே வெற்றி தரும்.

 

“இந்த ஒரு படகன்றி ஏற்றமுள வேறொன்றில்

வந்திருக்கலாகாதா?” எனுமிந்த வார்த்தைக்கு

இடமில்லை இங்கே. எடுத்து வந்த படகிதனால்

தடமகன்ற கடலிதனைத் தாண்டிடுவீர், வீரர்களே.

 

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.

சீர் உங்கள் நோக்கம் எனின் சிறுமதியை நீக்கிடுவீர்.

 

“புயல்வரும் நேரத்தில் புறப்பட்டுவிட்டோமே,

தயங்கியே நாம் சற்று தாமதித்து வந்தால் என்?”

என்று நீர் முணுமுணுத்தல் என் காதில் விழுகிறது.

வென்றிடப் பிறந்தோர்க்கு வேளையும் நாளும் ஏன்?

 

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை

போர் உங்கள் வாழ்க்கை. அதில் பொருதே புகழ் காண்பீர்.

 

பொங்கிவரும் கடல்நீரும் புயற்காற்றும் சேரட்டும்.

எங்கும் இருள். அதனூடே இடிமுழக்கம் கேட்கட்டும்.

மனத்துள்ளே காணுங்கள்- மற்றுமொரு சுழற்காற்று.

மனவேகம் பீறிட்டால் வளிவேகம் என்செய்யும்?

 

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.

பாருங்கள் புறப்புயலும் பஞ்சாய்ப் பறப்பதையே.

 

உண்டிங்கே பலவகையும் உடனுறையும் தோழர்களில்.

நொண்டி, குறைகூறி, நோயாளி, கோமாளி,

அச்சத்தால் செத்தவர்கள், அறிவில்லா மூடர்கள்.

மிச்சத்தின் துணை கொண்டு மேவிடுவோம் கரைநோக்கி.

 

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.

ஊறுங்கள் பக்தியிலே ஓங்குபெரு சக்தியின் பால்.

 

உள்ளத்தில் நின்று ஊக்குகிறாள் நம் சக்தி.

கள்ளத்தனம் இன்றிக் காட்டுகிறாள் கருணையினை.

தெய்வம் அவள் என்று திடமாய்ப் பற்றிவிட்டால்,

கைவலிமை தந்து அவளே காரியங்கள் நடத்திடுவாள்.

 

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.

ஊர் உங்கள் புகழ் பாடும் உழைப்பின் உயர்வெண்ணி.

 

படத்திற்கு நன்றி :

http://en.wikipedia.org/wiki/File:Lifeboat-drill.JPG

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வாழ்க்கைப் படகு

  1. வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தி வரும் கருத்துக்களை உள்ளடக்கிய உங்கள் கவிதை அற்புதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *