கண்ணை விற்றுத்தான் ஓவியம் வாங்க வேண்டுமா?
பவள சங்கரி
தலையங்கம்
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு மக்களை தெய்வமாகக் கொண்டாடுபவர்கள், ஆட்சிக்கு வந்த மறுநொடியே செய்யும் முதல் வேலை முந்தைய ஆட்சியாளர்களை பழி வாங்கும் முக்கியப் பணிதான். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன நிலையில், தொழில் நுட்பம், விண்வெளி ஆய்வுகள் போன்ற பலவற்றிலும் முன்னேறியிருக்கும் நம் நாட்டில் இன்றும் கிராமப்புறங்களில் 67 சதவிகிதம் பேருக்கு திறந்தவெளியே கழிப்பிடம். இதனை குடிநீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான ஜெயராம் ரமேஷ் மாநிலங்களவையில் தெரிவித்திருக்கிறார். நாட்டின் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் இந்த முக்கியமான பிரச்சனையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரணத்தை விளைவிக்கும் பல காரணிகளில் குடி நோயும் ஒன்று. நம் இந்திய நாட்டில் குடிநோய் தொடர்பான பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களால் இன்று மனநல சிகிச்சை மையங்கள் நிரம்பிக் கொண்டிருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசமான குடிப்பழக்கம் இளைஞர்களை,குறிப்பாக மாணவர்களை வெகுவாக பாதிக்கிறது. அவர்களின் படிப்பு, தொழில் முன்னேற்றம் என அனைத்தையும் பாதிக்கிறது.
கேரளாவில் அதிகரித்துவரும் குடிப்பழக்கத்தின் காரணமாக மது விலக்கை அமல்படுத்த அரசிற்கு உயர்நீதி மன்றம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை ஐந்து மணிக்கு மேல் மதுபானக் கடைகளை திறக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளது. சமீபத்தில் கேரள மாநிலத்தில் சிறுவர்கள் 14 வயது நிரம்புவதற்குள் மதுப்பழக்கத்தை கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 6200 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மூலம் அரசிற்கு கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்பது பெரிதும் கவலைக்குரிய விசயம். குடிகாரர்களாகும் மக்கள் சுய நினைவும் இழந்து முடங்கிப்போவது நாட்டு நலனையும் பாதிக்கக்கூடியது. குஜராத் மாநிலத்தில் முழுமையான மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனாலும் இதே குஜராத் மாநிலத்தில் விசச் சாராயம் அருந்தி பலர் உயிர் இழக்க நேரிடுவதும் வருத்தத்திற்குரிய விசயம். தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களிலும் விசச்சாராயம் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதும் உண்மை. அதுமட்டுமல்லாமல், சிறுவர்கள் அதிக அளவில் இது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவதும் வேதனைக்குரிய விசயம். குஜராத மாநிலத்தில் அதிகமாக இந்தப் பிரச்சனையைக் காணமுடிகிறது. குஜராத் மாநிலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதோ அல்லது விற்பதோ கொலைக்குற்றமாக கருதப்பட வேண்டும் என்ற கருத்திற்கு வலு சேர்க்கும்படி அம்மாநில ஆளுநர் தூக்கு தண்டனை அளிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்க்கது. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவருக்கு ஏழு முதல் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், கள்ளச்சாராயம் குடித்ததனால் இறப்பு ஏற்பட்டால் அதை விற்றவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படும். இந்த சட்ட திருத்தம் மூலமாக இதனைக் கட்டுப்படுத்த முடியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகுப்பதும் வரவேற்கத்தக்கது.
மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு மக்களை குடிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது பயனளிக்காது என்றாலும் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அரசாங்கமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். டாஸ்மாக் கடைகளில் வருமானத்தை உயர்த்தி, இலவசங்களைப் பெருக்கி தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பதை மக்கள் அறியாதவர்கள் இல்லை. கள்ளச் சாராயம் காய்ச்சுவதையும் கடுமையான தண்டனைகள் மூலம் கட்டுப்படுத்துவதும் அவசியம். அரசு இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
வரவேற்கப்படும் தலையங்கம், இது.
காட்சி 1: மது விலக்கு நீக்கப்பட்ட துரதிர்ஷ்ட தினமன்று நாளிதழ் ஒன்றில் குடிமகன்களின் ஆர்பாட்ட கொண்டாட்டத்தின் ஃபோட்டோ வெளியானது, என் நினைவில் இருக்கிறது. அன்று பிடித்தது சனி.
காட்சி 2: மூதறிஞர் ராஜாஜி, அழையா விருந்தினராக, மு.க.வின் வீட்டு வாசற்படி ஏறி, இந்த விஷபரிக்ஷை வேண்டாம் என்று கெஞ்சினார். வீண் போயிற்று.
காட்சி 3: நான் ராணிப்பேட்டையில் ஒரு சமுதாயபணி மையத்திற்கு சென்றிருந்தேன். கிராமத்து பெண்மணிகள் கூடி என்னை வரவேற்று பேசினார்கள். தங்கள் கிராமத்தில் பெண்களால் அமல்படுத்துப்பட்டுள்ள மதுவிலக்கை பற்றி சொன்னார்கள். அப்போது, ஒரு மூதாட்டி தன் குடிகார கணவனை பற்றி சொன்னார். அவர் இறந்ததை உணர்ச்சி இல்லாமல் சொன்னதால், வியந்து, ‘பிறகு?’ என்று அசட்டுத்தனமாக கேட்டு வைத்தேன். ‘எரித்து விட்டோம் சனியனை’ என்றார். அத்தனை கொடுமை பட்டிருக்கிறார்.
காட்சி 4: சமீபத்தில், குடித்து விட்டு தன் பென்ணை வன்முறை செய்ய துணிந்த கயவனை, அவன் மனைவி கொன்றது பெரிதல்ல. அவனுடைய அம்மா அதை ஆதரித்ததைச் சொல்லவேண்டும்.
காட்சி 5: ஜூனியர் விகடனில் அருமையான மதுவிலக்குப் பிரச்சாரம் நடக்கிறது.
காட்சி 6 மேற்கத்திய நாடுகளில், இந்த பிரச்னை இருந்தாலும், நம் நாட்டு அளவுக்கு, மதியிழக்கும்வரை குடிப்பது இல்லை. காரோட்டிகள் மிக கவனமாக இருப்பார்கள். தண்டனை கடுமை. மதுஷாலாக்களுக்கு ஓய்வும், இளைப்பாறுதலும், நட்பும் நாடி வருகிறார்கள். அவற்றை அனுபவிக்கிறார்கள். டாஸ்மாக் அடிமட்ட சூழ்நிலையை அங்கு நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.
காட்சி 7: ஆனால், ஒரு நெருடல். மதுவை விட மோசம் மது விலக்கு போலீஸ், நம் நாட்டில். கள்ளச்சாராயம் பெரிய பீதி.
இன்னம்பூரான்
22 08 2012
மேடம்…இதயத்தை விற்று இரைப்பையை நிரப்பிக் கொள்ளும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் புரியற மாதிரியிருந்தா அப்புறமென்ன?
சரியான நேரத்தில் எழுதப்பட்ட தலையங்கம் இது. இந்த அம்மையார் ஆட்சியைப் பற்றி எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், செய்ய எண்ணியதை எவ்வளவு தடைகள் வரினும் கலங்காது திண்ணமுடன் செய்து முடிப்பவர் என்ற உண்மை அவருடைய எதிரணியில் இருப்போராலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. மழை நீர் சேகரிப்பை அமுல்படுத்தியதிலும், புதிய வீராணம் திட்டத்தைக் கொண்டு வந்ததிலும் இந்த் உறுதியை நாம் கண்கூடாகக் கண்டோம்.
ஆகவே, மதுவிலக்கை அமுல் படுத்துவதிலும், நமக்குள்ள ஒரே நம்பிக்கை இந்த அம்மையார்தான். அவர் மதுவிலக்கு அவசியம் என்று மனம் மாறும் அந்த நாளும் வந்திடாதோ அன்று ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.