இலக்கியம்கவிதைகள்

ஆசிரியர் தினம்

 நடராஜன் கல்பட்டு

 

Inline image 1

 

 

நாளை செப்டம்பர் ஐந்து.  இது நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.  அவர் விருப்பத்திற் கிணங்க இன்னாள் நம் நாட்டில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

 

ஆசிரியர்

 

ஆசிரியர் தினமாம் இன்று

நினைத்திடுறேன் ஆசிரியர்கள் குறித்து

ஆ சிறியர் அல்ல அவர்

ஆற்றலில் பெரியவர் அவர்

அறிவில் சிறியோரும்

சிறப்பாய்க் கற்றிடல் வேண்டு மெனும்

சீரிய நோக்குடையவ ரவர்

அவர் அணிந்திடும் சட்டையில்

இருக்கலாம் ஓட்டைகள்

அவர் நம் அறிவுக்குத் தீட்டிடும் பட்டையோ

வைரத்திற்கு ஒளி தந்திடும் பட்டைகள் என்பேன்

சீரும் சிறப்புமாய்த் தன் மாணவன்

வாழ்ந்திட வேண்டும் என

நாளும் அயராது உழைத்திடும்

தன்னலம் கருதாத் தியாகிகள் அவர்

மாதா பிதா குரு தெய்வம் என

இறைவனுக்கும் முன்னே இடம் பிடித்தவர் அவர்

என் மனத்துள்ளும் தான்

 

 

“எழுத் தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்பது முது மொழி.  எழுத் தறிவித்தவன், அதான் ஆசிரியன், ஒரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.  இது பற்றிய என் சிந்தனைகளை ஒரு கவிதை வடிவில் தர முயற்சித்துள்ளேன்.  அக் கவிதை இதோ:

Inline image 2 

 

பள்ளி சென்று

புத்தகம் படித்துக்

கற்றால் மட்டும் பூர்த்தி

ஆகிடாது கல்வி

கற்றிடல் வேண்டும் நாம்

திடச் சித்தமதை

அசையா நின்றிடும்

மலைகளிட மிருந்தே தான்

கற்றிடல் வேண்டும் நாம்

நித்தமும் குளித்தே உடல்

சுத்தம் காத்திடல்

களிரிட மிருந்தே தான்

கற்றிடல் வேண்டும் நாம்

உற்றார் உறவினொரொடு கலந்துண்ணல்

கரு வண்ணக்

காகத்திட மிருந்தே தான்

கற்றிடல் வேண்டும் நாம்

சுறு சுறுப் பதனை

கணமும் நின்றிடா துழைத்திடும்

எறும்பிட மிருந்தே நாம்

கற்றிடல் வேண்டும் நாம்

அயரா துழைத்திடல்

அருஞ்சுவைத் தேனளிக்கும்

சின்னஞ் சிறு தேனீக்களிட மிருந்தே தான்

கற்றிடல் வேண்டும் நாம்

பலனெதிர் பார்த்திடாதே பிறர்க் குதவிடல்

நிழல் கனி ஈன்றிடும்

நன் மரங்களிட மிருந்தே தான்

கற்றிடல் வேண்டும் நாம்

நன்றி மறவாமை

என் நாளும் நன்றி மறவா

நாய்களிட மிருந்தே தான்

கற்றிடல் வேண்டும் நாம்

நற் பண்புகளை

நம் பெற்றோர் மற்று மவர்

பெற்றோரிட மிருந்தே தான்

கற்றிடல் வேண்டும் நாம்

கலைகள் பலவும்

நல் ஆசானிட மிருந்தே தான்

அறிந்திட வேண்டும் நாம்

இவ ரெல்லோரும்

நல் லாசிரியர் என்றே தான்

 

(படம் இணைய தளத்தில் இருந்து)

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க