உதிரும் சிறகுகளின் இறகுகள்
ஓடி வந்து புத்தகப்பை வீசி
கிடைத்ததைத் தின்று
தெருவிறங்கினால் வந்து சேரும் நண்பர்கள்
துவங்குவார்கள் தீர்மானிக்கப் பட்டிருந்த
அன்றைய ஆட்டத்தை
விளக்கு வைக்கும் நேரத்தில்
அம்மாவின் மூன்றாவது அழைப்பிற்குப்
பிற்பாடு புழுதியில் உருண்டு
வியர்த்து மூச்சு வாங்கி,
கைகால்கள் கழுவி சாமி கும்பிட்டு
அமருகையில் சென்னை வானொலியின்
மாநிலச் செய்திகள் துவங்கும் ..
செய்திகள் முடிந்ததும் படிப்பு
இரவுணவு முடிக்கயிலே ..சுருட்டி இழுக்கும் தூக்கம்
தினம் காலை குளக் குளியல்
மழைக் காலம் மழைக் குளியல்
அறுவடைக் காலங்களில் தெருவெங்கும்
கதிரடிப்பும், மாடுகளின் மணி ஒலியும்
உலர்த்தும் வைக்கோல் மேல் உடலரிக்க
சொறிந்தபடி விளையாட்டு …
திருவிழாக் காலங்களில் தாரை தப்பட்டை
தவில் நாதஸ்வர ஊர்வலங்கள்
இரவின் தீவெட்டி எண்ணெய் மணம்
ஓங்கி முழங்கும் வில்லுப் பாட்டு..
இளம் பருவம் ஓடியது விரைவாக….
இன்றென் மகனிடம் பள்ளி விட்டு வந்த பின்பு
‘வெளிச் சென்று விளையாடு’, எனச் சொன்னால்
” யாரோடு?” என்று வெறிச்சோடியத் தெருவைக் காட்டுகிறான்
நூடுல்ஸ் தின்றபடி மடிக் கணனியில்
விளையாடிக்கொண்டே என்னிடம்
“இதுவும் விளையாட்டு தானப்பா” என்கிறான்
கள்ள உறவும், கதறல்களுமாய்
பதினொன்று மணி தாண்டியும்
தொடர்கிறது சீரியல்கள்
நம்மையறியாமல் தலைமுறைகளாய்
நாம் பறந்து வந்த சுவாரஸ்ய சிறகுகளின்
இறகுகள் உதிர்ந்து கொண்டே இருக்கிறது
இயந்திர சிறகுகளை ரகசியமாய் ஒட்டியபடி…
படத்துக்கு நன்றி
http://www.cepolina.com/India_boy_child_Indian_happy.html
பாராட்ட வார்த்தைகளே இல்லை அய்யா.
Picturisation என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
அதாவது காட்சியை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது.
அது உங்கள் கவிதையில் அற்புதமாக உள்ளது.