மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நகர வட்டம் என்ற பெயரில் செய்தித்தாள். சங்கம் என்ற சொல் முடிவுடன் அரசியல் கட்சி, சிகாமணி என்ற பெயரில் மன்னர். தமிழே தெரியாத மக்களிடையே வழமையில் உள்ள தமிழ்ச் சொற்கள்.

காம்புத் தேசம் காம்போசம், கம்பூசியா, கம்போடியா எனப் படிப்படியாக மருவி வழங்கும் நாட்டில் இவ்வாறும் பிறவுமாகத் தமிழும் வழங்குகிறது. அந்த நாட்டில் வேறெங்கெல்லாம் தமிழ் மொழிச் சொற்கள் வழக்கில் உள்ளன என்பதை அறிய, ஆராய்ச்சியாளர் முன்வரவேண்டும்.

மேற்கூறிய செய்திகளைத் தாவீது சாந்திலர் David Chandler எழுதிய கம்போடிய வரலாறு என்ற நூலில் கண்டேன்.

தமிழ்ச் சொற்கள் மட்டுமல்ல, தமிழர் வரலாற்றுப் படிமங்களைக் கம்போடியாவின் இரு சிவன் கோயில்களில் சிற்பமாகக் கண்டேன்.

தமிழ் நாட்டின் கிழக்குக் கரைத் துறைமுக நகரங்களுள் ஒன்று காரைக்கால். புனிதவதி என்ற அம்மையார் தனதத்தனை மணந்து வாழ்ந்து வருகிறார். மண வாழ்வில் ஈர்ப்பு இன்றி இறையருள் நாடும் வாழ்வில் ஈர்ப்புடையராகிறார். மண வாழ்வு முறிகிறது. அழகுக் கோலத்தை மாற்றிப் பேய்போன்ற அழகற்ற கோலம் கொள்கிறார். கோயில்களை வணங்குகிறார். திருக்கயிலாயம் வரை பயணிக்கிறார். சென்னைக்கு மேற்கே திருவாலங்காட்டில் ஆடலரசன் அடியின் கீழ் இருக்கும் பேறுபெறுகிறார்.

தமிழ்ப் பண்களுக்கு உயிரூட்டுகிறார். இசைப் பாடல்களை வழங்குகிறார். தமிழ் நாட்டு வரலாற்றுடன் பின்னிப் பிணைகிறார்.

காரைக்கால் அம்மையாரைச் சுந்தரர் (கிபி. 740 ) சுட்டிக் காட்டுகிறார். நம்பியாண்டார் நம்பி (கிபி. 1000) சுருக்கித் தருகிறார். சேக்கிழாரோ (கிபி 1150) வரலாற்றை நீட்டி எழுதுகிறார்.

63 நாயன்மார்களுள் ஒருவராகத் தென்னிந்திய மற்றும் இலங்கைச் சிவன் கோயில்களில் சிலையாகக் காரைக்கால் அம்மையார் உள்ளார். காரைக்கால் நகரில் அவருக்கு ஒரு கோயில் உண்டு.

இனறோ மலேசியாவில், சிங்கப்பூரில், ஆத்திரேலியாவில், ஐரோப்பாவில், கனடாவில் தமிழர் அமைக்கும் கோயில்களிலும் காரைக்காலம்மையார் சிலைகள், வரைபடங்கள் உள.

தமிழ்நாட்டின் வரலாற்றுடன் கலந்த காரைக்காலம்மையார் காம்பேசத்தின் பண்டைய வரலாற்றுடன் இணைந்தமையை அங்குள்ள சிற்பங்கள் நமக்குக் காட்டுகின்றன.

காம்போசத்தில் யசோவர்மன் கிபி. 889இல் ஆட்சிக்கு வருகிறான். 910 வரை அவனது ஆட்சி.

ஆட்சித் தலைநகராக ஓர் இடத்தைத் தேர்கிறான். நகரம் எனப் பெயரிடுகிறான். நகரம் என்ற சொல்லே, பிற்காலத்தில் அங்கோர் என மருவுகிறது.

மலைகள் மீது சிவன் கோயில்கள், நீர்ப்பாசன வாய்க்கால்கள், குளங்கள், வழிபாட்டாளருக்காக நூறு திருமடங்கள், தன் பெற்றோருக்காக மலைமேல் நினைவிடங்கள் என யசோவர்மன் ஆட்சியில் செல்வம் செழித்ததால், நற்பணிகள் பல நீடித்தன.

மலை உச்சியில் யசோவர்மன் கட்டிய கோயிலின் இன்றைய பெயர் பிரியா விகாரம் (Preah Vihear). 625 மீ. உயரச்சில் உச்சி. அந்த மலைக்குச் சிவபத மலை என யசோதவர்மன் பெயரிட்டான். சிவபதத்தை, வீடுபேற்றை நோக்கிய சைவசித்தாந்தக் கருத்தைக் கொண்ட மலை.

வடக்கு நோக்கிய வாயில். நான்கு கோபுர வாயில்கள். ஐந்தாவது கோபுரம் கருவறைக்கு மேலே. யசோவர்மன் வைத்த பெயர் சிறீசிகரீச்சரம்.

வடக்குக் கோபுரவாயிலில் இருந்து பார்த்தால் அடுத்த கோபுர வாயில் மட்டுமே தெரியும். அவ்வாறே ஒவ்வொரு கோபுர வாயிலும் அடுத்த கோபுர வாயிலையே காட்டும். கீழிருந்து மேலே மலைக்கு ஏறுமுகமாக அமைந்ததால் ஏறினால் தான் கோயிலை அடையலாம். இதோ கோயில் என எண்ணுவோர், இல்லை இல்லை இது கோபுர வாயில் எனும்போதும் மேலும் ஏறவேண்டும் எனும் மலைப்புடன் செல்லுமாறு அமைந்த கட்டடக் கலை.

தொடக்க வாயிலில் இருந்து கருவறை ஒரு கிமீ. தொலைவில் உள்ளது. இடையே மூன்று கோபுர வாயில்கள்.

கருவறைக்குள் சிவலிங்கம். கருவறைக் கதவுக்கு மேலே சிற்பவேலை. வளைவுச் சிற்பவேலை. சிவனின் நடனம். சிவனின் நடனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர் காரைக்காலம்மையார். சிவனுக்கு வலப்பக்கத்தில் பேயுருவாக அவர். இடப்பக்கத்தில் மத்தளம் கொட்டுவோன்.

காரைக்காலம்மை வரலாற்றை மலை உச்சியில் கருவறை வாயிலில் சிற்பமாக்கிய யசோவர்மன் தமிழ்நாட்டு வரலாற்றை அங்கு பதிந்தான். இராமாயண, மகாபாரதக் காப்பியக் கதைகளின் சிற்பங்கள் நிறைந்த கோயில். மயில்வாகனனாக முருகன் காட்சிதரும் கோயில். இவையாவும் புறச் சுவர்களில், அல்லது வேறு கோயில் கதவு முகப்புகளில்.

பல்வேறு காப்பியக் கதைகளைப் பல்வேறு இடங்களில் சிற்பமாகப் பதிந்த யசோவர்மனின் சிற்பிகள், காரைக்காலம்மையைக் கருவறை முகப்பில் பதிந்த காரணம் என்ன?

பல்லவர் காலச் சுந்தரர் சுட்டிக் காட்டிய வரலாற்றுப் பதிவை, சோழர் கால நம்பியாண்டார் நம்பி மீண்டும் சுருக்கித் தரமுன்பே காம்போசத்தில் யசோவர்மன் பதிந்துள்ளமை, தமிழகப் பல்லவ மன்னர்களுக்கும் காம்போசப் பல்லவ மன்னர்களுக்கும் உள்ள நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பை, சைவ நெறி மரபுத் தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.

மாமல்லபுரத்தில் பல்லவர்கள் இராமாயண, மகாபாரதக் காப்பியக் கதைகளைச் சிற்பமாக்கியதையும் நோக்கவேண்டும்.

யசோவர்மனைப் பற்றிய செய்திகள் கிரந்த எழுத்தில் உள்ளன. தேவநாகரி எழுத்துகளைக் காணமுடியாது. கிரந்த எழுத்துகள் தமிழகப் பல்லவர்களின் கண்டுபிடிப்பு. தமிழ் வரிவடிவங்கள பலவற்றுடன் வருக்க ஒலிகளுக்காக மேலதிக வரிவடிவங்களும் கூட்டெ வருவடிவங்களும் கொண்ட ஒலிசார் வரிவடிவத் தொகுப்பு. தமிழ்நாட்டிலிருந்து காம்போசத்துக்குச் சென்றது.

யசோவர்மன் காரைக்காலைம்மையார் வரலாற்றைத் தெரிந்ததால் அக்கோயிலில் பொறித்தான் எனக் கூறலாமா? யசோவர்மனின் சிற்பக் கலைஞருக்குக் காரைக்காலம்மையார் வரலாறு தெரிந்திருந்தது எனக் கூறலாமா?

காம்போசத்தின் சிற்பக்கலை வரலாற்றுடன், சிவன்கோயில் கருவறை முகப்பில் பதிவாகும் வரலாற்றுடன் காரைக்காலம்மையார் பிணைந்து நிற்கிறார்.

யசோவர்மன் கிபி. 910இல் இறந்தான். அவன் மகன் முடிசூடுகிறான். சில ஆண்டுகளிலேயே இறந்துவிடுகிறான். யசோவர்மனின் மனைவியின் உடன்பிறந்தவனான நான்காம் செயவர்மன் கிபி. 928இல் ஆட்சிக்கு வருகிறான்.

பிரசாத தொம் என்ற சிவன்கோயிலை வேறொரு மலை உச்சியில் நான்காம் செயவர்மன் கட்டுவிக்கிறான். அங்கே 18 மீ. (59 அடி) உயரம் 5 மீ. (16 அடி) விட்டம் கொண்ட இலிங்கத்தை அமைத்துப் பொன்னால் கவசமிடுகிறான். இதே காலத்தில் தான் சற்றேறக்குறைய அதே அளவுள்ள தஞ்சைப் பெரிய கோயில் சிவலிங்கமும் உருவாகிறது.

நான்காம் செயவர்மன் இவ்வாறு சிவன் கோயில்கள் பலவற்றைக் கட்டுவித்தான். கிபி. 942இல் நான்காம் செயவர்மன் இறந்தான்.

யசோவர்மனின் மற்றொரு மருகன் இரண்டாம் இராசேந்திர வர்மன் முடிசூடிக்கொள்கிறான். மேபொன், பிரியா உருவம் ஆகியவற்றுடன் மேலும் பல சிவன் கோயில்களைக் கட்டுவிக்கிறான். சிதைந்த கோயில்களில் திருப்பணி செய்கிறான்.

வடமொழியில் நூல்கள் அவன் காலத்தில் எழுந்தன. காம்போசக் காவியங்கள் யாப்புநெறியுடன் கிரந்தத்தில் எழுதப்பெற்றன. கிபி. 968இல் இரண்டாம் இராசேந்திரவர்மன் இறந்தான்.
அவன் மகன் சிறுவன். எனினும் ஐந்தாம் செயவர்மன் என்ற பட்டப் பெயருடன் முடிசூடிக் கொள்கிறான்.

இரண்டாம் இராசேந்திரவர்மனின் அரச குருவாக விளங்கியவர் ஞானவராகர். இவரே ஐந்தாம் செயவர்மனுக்கும் ஆசிரியராகிறார்.

ஞானவராகரின் புலமையால் ஈர்க்கப்பெற்ற புலமையாளன் இரண்டாம் இராசேந்திரவர்மன். ஞானவராகர் தனக்கென ஒரு கோயில் கட்ட விழைகிறார். இராசேந்திர வர்மன் நிதி வழங்குகிறான்.

நகரம் (அங்கோர்) என்ற தலைநகருக்கு வடக்கே 20 கிமீ. தொலைவில் ஞானவராகர் வடக்கே அயன், நடுவே சிவன், தெற்கே திருமால் என மூன்று கருவறைகள் கொண்ட கோயிலைக் கட்டுவிக்கிறார். அழகான கோயில் எனக் காம்போசத்தில் இன்றும் உள்ள கோயில் ஞானவராகர் கட்டிய மும்மூர்த்திக் கோயில். இன்றைய பெயரோ அம்மன் கோயில் (Banteay Srei).

மலை உச்சியில் அமையாமல் சமவெளியில் அமைந்த கோயில். மகேந்திர மலை அடிவாரத்தில் அமைந்த கோயில். ஞானவராகர் சூட்டிய பெயர் திரிபுவனேச்சரம். ஞானவராகரும் அவரது தம்பியாருமாகக் கட்டிய அந்தக் கோயில் தமிழர் வரலாற்றைப் பதிந்த கோயில்.

நடுக் கோயில் கருவறையில் சிவலிங்கம். கருவறை வாயிலில் திருவாலங்காட்டு நடனக் காட்சி. சிவனின் திரு நடனம். வலப்புறத்தில் காரைக்காலம்மையார். இடப்புறத்தில் மத்தளம் கொட்டுவோன்.

நகரம் (அங்கோர்) என்ற தலைநகருக்குச் சற்றே வடமேற்காக 290 கிமீ. தொலைவில் சிவபத மலையுச்சியில் சிறீசிகரேச்சரத்தில் கருவறை முகப்பில் காரைக்காலம்மையார்.

60 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த தலைமுறை மன்னர் காலத்தில், 250 கிமீ. தென்கிழக்கே மகேந்திர மலை அடிவாரத்தில் அமைந்த கோயிலின் திரிபுவனேச்சரர் கருவறை முகப்பில் காரைக்காலம்மையார்.

இரண்டாம் இராசேந்திரவர்மன் காலத்தில் தொடங்கி அவன் மகன் ஐந்தாம் செயவர்மன் காலத்தில் அரசகுருவும் தம்பியாரும் கட்டிமுடித்த அழகிய கோயில் திரிபுவனேச்சரம். கிழக்கு நோக்கிய கோயில். 110 மீ. நீளம், 95 மீ. அகலம் கொண்ட அந்தக் கோயிலுக்கு கருவறைக் கோபுரம் மூன்று, வாயிற் கோபுரம் மற்றது.

 காம்போசப் பல்லவர்கள் இதிகாசங்களுக்குக் கொடுத்த அதே மதிப்பையும் சிறப்பபையும் காரைக்காலம்மையாருக்குக் கொடுத்தனர். கிரந்த எழுத்தைப் பயன்படுத்தினர். தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தனர். பல்லவர் காலத்தில் தொடங்கிய அந்தத் தொடர்பு சோழர் காலத்திலும் தொடர்ந்தது.

இன்று இந்தக் கோயில்களில் கட்டடங்கள் சிதைந்துள. கருவறைகளில் புத்தர் காட்சி தருகிறார். சிற்பங்களைக் கலைக்காமல் வைத்திருக்கின்றனர்.

சிவபத மலைக் கோயிலுக்காக, தாய்லாந்து நாட்டுக்கும் கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாகப் போர் நடப்பதால் அங்கு இடிபாடுகள் கூடுதலாக உள. இரு நாடுகளும் தமக்கெனக் கொள்ளும் இக்கோயில் உரிமைப் போர் உலக நீதிமன்றம் வரை சென்று அங்கு கம்போடியாவுக்குச் சார்பாகத் தீர்ப்பு வந்தபின்பும் தாய்லாந்து அதனை ஏற்கவில்லை.

 

கம்போடியாவின் சிவபதமலையில் இருந்து கிழக்கே தாய்லாந்து, வடக்கே இலாவோசு நாடு. சிவபத மலையில் இருந்து இலாவோசு நாட்டைப் பார்த்தால் தெரியும் மலையே இலிங்க மலை.

மேலும் படிக்க:

        Chandler, David (2008) A History of Cambodia, Silkworm Books, Chiang Mai 50200, Thailand.
        Freeman, Michael and Claude Jacques (2003) Ancient Angkor, River Books Ltd., Bangkok, Thailand
        Sahai, Sachchidanand (2009) Preah Vihear, Cambodian National Commission for UNESCO.

காணொலி பார்க்க, பகிர்க

http://youtu.be/97p2zCfp89k

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கம்போடியாவில் காரைக்காலம்மையார்

 1. மிக அருமையான பதிவு ஐயா! கம்போடியாவில் கண்டெடுத்த, கையில் தாளத்துடன் உள்ள காரைக்கால் அம்மையாரின் உருவச்சிலையை முன்பொருமுறை ஒளிப்படத்தில் காண நேர்ந்தது. மிக வியந்தேன். தென்னிந்தியாவின் தொடர்பும், தமிழின் தொடர்பும் இன்னும் நிறைய அறியக் கிடக்கின்றன என்று அறிய வியப்பாக உள்ளன. அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

 2. புதிய தகவல்கள். வியப்புக்குரிய செய்திகள். கடல் கடந்த நாட்டில் தமிழ்ப் பண்பாட்டின் முழுமையான வரலாற்றுத் திரட்டு. தெளிவான படங்கள். பாராட்டுகள். நன்றி

 3. பல புதிய தகவல்களை தந்திருக்கிறீர்கள். இதனை புத்தக வடிவில் வெளியிட்டால் எல்லோரும் பயனடைவார்கள்.
  ஊன் மறந்து , உயிர்மறந்து ,உறவுகள் மறந்து தலைவன் தாளே தலைப்பட்டு சிவ தொண்டாற்றும் உங்களுக்கு பலகோடி வணக்கங்கள்.

  நண்பன்
  தெ.ஈஸ்வரன்

 4. கம்போடியாவில் 1994 லிருந்து 1996 வரை உலக வங்கியின் ஆலோசகராகப் பணியாற்றியதால், அங்கோர் வாட்டை முழுமைஅயாக்ப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. விவரங்களை எனது கம்போடியா நினைவுகள் (தமிழக அரசு பரிசு பெற்றத்) நூலில் காணலாம். பழனியப்ப பதிப்பகம் வெளியிட்டதௌ.
  நரசய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *