தமிழ்த்தேனீ

Tamil theneeதேர்தல் வரப் போகிறது. ஆமாம், சுதந்திரம் வாங்கி 64 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆமாம் என் குழந்தை சுதந்திர தேவிக்கு வயது  64. நான் உங்கள் தாய், உங்கள் பாரத மாதா, உங்கள் தாய்க்கு ஒரு துன்பம் என்றால் ஆல மரத்தின் விழுதுகள் தாங்குதல் போல என்னைக் காப்பது உங்கள் கடமையல்லவா? என்னை மகிழ்விப்பது உங்கள் கடமையல்லவா?

தேர்தல் வருகிறது. என் குழந்தைகளே நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள் வேட்பாளர்களுக்கு. தவறாமல் வாக்களியுங்கள் அது நம் கடமை! நீங்கள் அளிக்கும் வாக்குகள் மூலமாக உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் வாக்காளர்கள் உங்களையும் என்னையும் ஆளப் போகிறார்கள். ஆமாம் நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையின் மொத்த பலனாகத்தான் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமரப் போகிறார்கள்.

அதற்கு முன் ஜாதி, மத, இன, மொழி பேதமில்லாமல் உங்கள் அனைவரின் தாயான எனக்கு நீங்கள் முக்கியமாக ஒரு வாக்களிக்க வேண்டும்.  ஆமாம் எனக்கு உங்களின் மூலமாக ஒரு வாக்குறுதி வேண்டும். வாக்குறுதி அளித்தால் மட்டும் போதாது, அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் பெற்ற குழந்தைகளில் ஒரு குழந்தை திருடனாக, ஒரு குழந்தை முரடனாக, ஒரு குழந்தை குடிகாரனாக, ஒரு குழந்தை நல்லொழுக்கம் இல்லாதவனாக, ஒரு குழந்தை ஆதரவற்றவனாக, ஒரு குழந்தை ஏமாற்றுக்காரனாக, ஒரு குழந்தை வன்முறையாளனாக, இப்படியெல்லாம் இருந்தால் நீங்கள் எப்படித் துன்புறுவீர்களோ அப்படித் துன்புறுகிறேன்  நான். ஆமாம், நான் பெற்ற என் மகள் சுதந்திராதேவிக்கு பிறந்த குழந்தைகளில் ஒவ்வொன்றும் இப்படி இருக்கிறது, சில நல்ல பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தாய்க்கு தன் பிள்ளைகள் எல்லோருமே  நல்ல பிள்ளைகளாக, கெட்டிக்காரர்களாக, நேர்மையானவராக, இருந்தால்தானே மகிழ்ச்சி வரும்.

ஒரு ஆலையத்தை நிர்மாணிக்கும்போது, குறிப்பாக மூலத்தானத்தில் தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது, மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று கூடி, நம் ஆத்ம சக்தியை உபயோகித்து, மனப்பூர்வமான தியானத்தினால் கிடைக்கும் சக்தியை ஒன்று திரட்டி, மொத்த சக்தியாக மாற்றி அந்த மொத்த சக்தியை அந்த விக்ரகத்துக்கு அளித்து, அந்த விக்ரகத்தைச் சக்தி வாய்ந்த தெய்வமாக மாற்றிவிட்டு, பின்னர் அந்தச் சக்தியிடம் வரம் வேண்டி மனமுருகிப் பிரார்த்தனை செய்து பலன் பெறுகிறோம். ஆனால் அந்தச் சக்தி நமக்கு எந்த வாக்குறுதிகளையும் அள்ளித் தெளிப்பதில்லை. நாம் நம்புகிறோம், அந்தச் சக்தி நல்லது செய்யுமென்று.

ஆனால் வேட்பாளராக நிற்கும் அனைவருமே நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பித்தான் இவர்களுக்கும் வாக்களிக்கிறீர்கள். ஆனால் இவர்கள் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? நீங்கள் அளித்த வாக்குகள் மூலமாகப் பதவிக்கு வந்த இவர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்கிறார்கள்? நம் நல் வாழ்வுக்கு என்ன செய்கிறார்கள்?

இது வரை பதவிக்கு வந்தவர்கள் என்ன செய்தார்கள்? சுதந்திரம் வாங்குவதற்கு முன் நம் நாடு இருந்த நிலையிலாவது நாம் இருக்கிறோமா?  அப்போது இருந்ததை விட மகிழ்ச்சியாக நாம் இருக்கிறோமா? இல்லை அப்போது இருந்ததை விடக் கவலையாக இருக்கிறோமா? அப்போது இருந்ததை விட நமக்கும் நம் நாட்டுக்கும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? இவற்றை நன்றாகச் சிந்தித்து நாம் நம்முடைய வாக்குகளை அளிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

போனது போகட்டும், இனியாவது நம் நாடும் நாமும் வளம் பெற வேண்டுமானால், இனி வருங்காலங்களில் நம் சந்ததிகள் நல்ல முறையில் இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் இப்போது போடும் விதைகளை நல்ல விதைகளாகப் போட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு இப்போது அளிக்கும் வாக்குகளை யோசித்து, யாருக்கு அளித்தால் நாடு நலம் பெறும் என்று எண்ணிப் பார்த்து, நம் வாக்குகளை அளிப்போம்.

நம் தேவை என்ன என்பதை உணர்ந்தால்தான் நாம் எதைக் கேட்கலாம் என்று நமக்குப் புரியும். நம் தேவைகள்:

BHARAT-MATA1. இருக்க ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலில் இடம், குடிக்க ஆரோக்கியமான தண்ணீர், உண்ண ஆரோக்கியமான உணவு, சாதாரண மக்களும் கற்கும் அளவுக்குத் தரமான கல்வி. இவை நான்கும் அடிப்படைத் தேவைகள், இவை நான்கும் கிடைக்கிறதா?

2. ஒரு நாடு என்றால் அதிலே வாழும் மக்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல், ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா? ஆரோக்கியமாக இருக்கிறோமா? மகிழ்ச்சியாக இருக்கிறோமா? ஒற்றுமையாக இருக்கிறோமா? நம் பிள்ளைகள் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு, அலுவலகங்களுக்குச் சென்று மீண்டும் பத்திரமாகத் திரும்பி வரும் என்கிற நம்பிக்கை  நமக்கு இருக்கிறதா?

3. வரவிருக்கும் காலங்களில் நம் நாட்டை ஆளத் தகுதியான இளம் தலைமுறைகளை உருவாக்கி இருக்கிறோமா?

4. நம் வாகனங்கள் ஓடச் சீரான சாலைகள் அமைத்திருக்கிறோமா? நாம் பாதுகாப்பாக நடமாட நடைபாதைகள் இருக்கின்றனவா? மஹாத்மா காந்தி கூறியது போல் நடு இரவில் எல்லா நகைகளையும் அணிந்துகொண்டு ஒரு கன்னிப் பெண் வெளியே சென்று மீண்டும் பத்திரமாக எந்தவிதச் சேதமும் இல்லாமல் வீட்டுக்குத் திரும்பி வர முடியுமா?

5. பகலிலேயே நாம் நம் உடைமைகளை எடுத்துச் சென்று அவற்றை பத்திரமாக மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வர முடியாத நிலை இருக்கிறதா?

6. வாகனங்கள் எரிபொருளில் ஓடுகின்றன, ஆனால் நம் நாடு மதுபானத்தினால்தான் ஓடும் என்னும் அவல நிலை இல்லாமல் இருக்கிறதா?
இவற்றைச் சற்றே சிந்தியுங்கள்.

7. நாம் வியர்வை சிந்தி உழைத்து ஈட்டும் பொருளில் வரிகள் போக, மீதம் இருப்பதில் நாம் மகிழ்ச்சியாக வாழ முடிகிறதா?

8. நம் நாட்டை வருங்காலத்தில் உலக நாடுகளுக்கு இணையாக முன்னேற்ற விஞ்ஞானம் முன்னேறியுள்ளதா?

9. சட்டம், நீதி, நியாயம், தர்மம் இவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா?

10. நாட்டின் பாதுகாப்புக்காக இயங்கும் எல்லைப் படைகள், கடற்படைகள், விமானப் படைகள் மூன்றும் முறையாக இயங்குகின்றனவா?

11. முக்கியமாக லஞ்சம், ஊழல் போன்றவை தலைவிரித்து ஆடாமல் உள்ளனவா?

12. நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படுகிறதா?

13. நாட்டின் செல்வங்களான விவசாயம், நெசவுத் தொழில், காடுகளைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சிற்பக் கலை, ஓவியக் கலை போன்றவை முறையாக நடக்கின்றதா? இவை அனைத்தையும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்!

ஒவ்வொரு துளித் தண்ணீரும் ஒட்டு மொத்தமாய்ச் சேர்ந்ததுதான் கடல்!

ஒவ்வொரு சிறு தீக்கங்கும் சேர்ந்ததுதான் உலகிற்கே ஒளி தரும் சூரியன்!

ஒவ்வொரு சிறு மணல் துகளும் சேர்ந்ததுதான் உலகம்!

உலகத்தில் உள்ள சிறு குமிழ்வாயுவும் சேர்ந்ததுதான் காற்று!

பல சிறு துகள்கள் சேர்ந்ததுதான் பிரபஞ்சம்!

இயற்கையின் ஒவ்வொரு சிறு அசைவும் இயக்கமும் சேர்ந்துதான் ஒட்டுமொத்த சூறாவளி ஏற்படுகிறது!

பூமியின் அடியில் ஏற்படும் பாறைகளின் சிறு அசைவுதான் பெரும் பூகம்பம் ஏறபடக் காரணமாய் இருக்கிறது!

நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாக்குகளும் சேர்ந்துதான் நம் நாட்டின் தலையெழுத்தையே நிர்ணயிக்கிறது.

இப்போது யோசித்துப் பாருங்கள் நம் தனிப்பட்ட ஒவ்வொருவருடைய வாக்குரிமைக்கும் எவ்வளவு பொறுப்புகள், எவ்வளவு சக்திகள் இருக்கின்றன  என்று.

நன்றாக உணருங்கள், உங்கள் விரல் நுனியில் நம் நாட்டின் எதிர்காலமே அடங்கியுள்ளது. இதை வேட்பாளர்கள் மறக்கலாம், ஆனால் நீங்கள் மறக்கக் கூடாது.

‘விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்காது’ என்பர் நம் முன்னோர். ஆகவே நாம் என்ன விதை போட்டோமோ, அந்த விதைதான் முளைத்து, இன்று மரமாகி, தோப்பாகி, நமக்குப் பலன் தந்துகொண்டிருக்கிறது. இப்போது சிந்தியுங்கள், நாம் நல்ல விதை போட்டோமா என்று.

சரி போனது போகட்டும், இனியாவது நம் வாக்குரிமையின் சக்தியை உணர்ந்து, நல்ல விதைகளை விதைப்போம். வருங்கால பாரதம் வளமாக, இன்று நமக்கெல்லாம் ஒரு அரிய நாள் கிடைத்திருக்கிறது. ஆகவே நன்கு சிந்தித்து நம் பொன்னான வாக்குகளை அளிப்போம்.

உங்கள் சக்திதான் உலகத்திலேயே பெரிய சக்தி. ஆமாம் மக்கள் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து, என்னைக் காக்கும் ஒரு மாபெரும் சக்தியாக நீங்கள் மலர வேண்டுமானால்

மேற்கூறிய அனைத்தையும் சிந்தித்து, தகுந்த நபருக்கே வாக்களித்து, நம் நாட்டின் வருங்காலத்தைக் காப்போம் என்னும் வாக்குறுதியை உங்கள் தாயான பாரத மாதாவான எனக்கு முதலில் அளித்துவிட்டு, பின்னர் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் தகுந்த நபருக்கு மறக்காமல் வாக்களியுங்கள்.

இது வரை அளித்த வாக்குறுதிகளை யார் நிறைவேற்றினார்களோ, நம் நாடு வளம் பெற யார் உண்மையாக உழைத்தார்களோ! நம் மக்கள் வளம் பெற யார் திட்டம் வகுத்தார்களோ!  இனி இந்த நாட்டை யார் வளம் பெறச் செய்வார்களோ அவர்களைக் கண்டுபிடித்து, நம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அவர்களிடம் வாக்குறுதி பெற்று, அப்படி அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் எந்த நேரத்திலும் அவர்களைப் பதவியிலிருந்து நீக்க நமக்கு உரிமை உண்டு என்பதை உணர்ந்து, அவர்களுக்கு வாக்களியுங்கள்.

உணருங்கள், நான் பெற்றெடுத்த மக்களாகிய உங்கள் சக்தி மட்டுமே உலகிலேயே மிகப் பெரிய ஆக்க சக்தி. உங்களால் மட்டுமே ஆக்க முடியும். நம் கைகள் உயர்ந்தே இருக்கட்டும். வேட்பாளர்கள் அளிக்கும் இலவசங்களைத் தைரியமாக மறுப்போம். தாழ்ந்து தானம் வாங்க வேண்டாம். தன்மானத்துடன் வாழ்வோம். உரிமைகளைப் பெறுவோம். ஒற்றுமையாகக் கைகளை உயர்த்துங்கள். உயர்வோம்.

===================================

படத்திற்கு நன்றி: http://satyameva-jayate.org

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பாரத மாதா பேசுகிறேன்

  1. உணர்ச்சி வேகம், ஆக்கம் தேடும் தாகம், ஊக்கமளிக்கும் நடை, அருமையான நாட்டுப் பற்று, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை எல்லாம் ஒரு சேர, அதற்கெல்லாம் உருவகம், பாரத மாதா. வாழ்த்துகள், தமிழ்த்தேனீ.

    -இன்னம்பூரான்.

    பி.கு. எனக்குப் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது இருந்த நம்பிக்கை ஓடிப் போய்விட்டது.

  2. “ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
    இரவின் இளிவந்தது இல் ” என்ற குறளில்
    பசுவுக்காகக் கூட நீரை யாசகமாகப் பெறக்
    கூடாது என்ற வள்ளுவர் வாய்மொழியை
    நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இலவச
    அறிவிப்புகளால் மக்களின் உள்ளங்கள்
    மகிழ்ச்சி அடைந்தாலும் பாரத மாதாவும்
    தமிழ்த் தாயும் அழுது விடுவார்கள் என்பதே
    உண்மை.
    இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

  3. வணக்கம். கட்டுரை நன்றாக இருந்தது.
    வாக்கு அளிப்பதுடன் வாக்காளர் கடமை தீருவது இல்லை.
    தயவு செய்து மக்கள் கண்காணிப்புக் குழு (தேவை) வல்லமை. காம்
    தளத்தில் படியுங்கள்.
    வாழ்த்துகள் .
    உண்மையுடன்,
    உதகை சத்யன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.