2011இல் ஐக்கிய இராச்சியம்! – பகுதி 1
சக்தி சக்திதாசன், இலண்டன்
2011 என்னும் இவ்வாண்டு, உலகத்தின் முன்னே தூக்கி வீசி விட்டிருக்கும் சவால்கள் ஒன்று இரண்டல்ல. இரண்டு மகா யுத்தங்களைக் கடந்து விட்ட இவ்வுலகம், மூன்றாவது உலக மகாயுத்தம் என்று ஒன்றினுள் நுழையுமானால் தம்மைத் தாமே சுக்கு நூறாக உடைத்து வீசி விடக்கூடிய நிலையிலிருக்கிறது என்பதை உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே முற்று முழுதாக உணர்ந்து விட்டிருக்கின்றன.
கடந்த முப்பத்தாறு வருட கால இங்கிலாந்து நாட்டு வாழ்க்கையில் நான் கண்ட அரசாங்க மாற்றங்கள் குறைந்தது ஏழாவது இருக்கும். இந்த மாற்றங்கள் என் வாழ்க்கையில் என் உள்ளத்தில், என் உணர்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் பல.
இந்தக் காலக்கட்டத்திலே ஒரு வெளிநாட்டு மாணவன் என்னும் நிலையிலிருந்து, மாணவ கணவன் என்னும் நிலைக்கூடாக, மாணவத் தந்தை என்னும் பாதையினூடாக, ஆசிய இங்கிலாந்துப் பிரஜை என்னும் நிலையை அடைந்து, இன்று வாழ்க்கையின் நடுப்பகுதியைத் தொட்டு நிற்கும் ஒரு புலம்பெயர் தமிழ் மனிதன் என்னும் நிலையிலிருக்கிறேன்.
நான் இங்கிலாந்தில் சந்தித்த அரசியல் மாற்றங்களினால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் எத்தகைய மாற்றங்களை எதிர்நோக்குகின்றன என்பதை ஒரு சாதாரணப் புலம்பெயர் தமிழனின் பார்வையில் பார்க்க விளைந்த காரணமே இத்தலைப்பு.
இக்கட்டுரையைப் பகுதிகளாகப் பிரித்து பார்க்கத் தலைப்பட்டுள்ளேன். முதலாவது பாகத்தில் இங்கிலாந்தில் தனி முத்திரை பதித்த, தேசியப் பெருமையை நிலைநாட்டும் தேசிய சுகாதாரச் சேவையினை (NHS), எடுத்துப் பார்க்க விழைகிறேன்.
முன்னேற்றமடைந்த முதல் உலக மேற்குலக நாடுகள் எனக் குறிப்பிடப்படும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். கடற்படையில் முன்னணியில் திகழ்ந்த காரணத்தால் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை உருவாக்கி, அங்கே சூரியன் அஸ்தமனம் ஆவதில்லை என்னும் பெரிய பெருமையைக் கொண்டுள்ளாதாகக் கூறப்பட்ட அளவிற்குப் பல நாடுகளைத் தமது காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த காலத்திலிருந்து இன்றுவரை இங்கிலாந்து கடந்து வந்த பாதை, பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது.
இன்று முன்னேற்றமடைந்த பல நாடுகள் வியந்து நோக்குமளவிற்கு இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை வளர்ச்சியடைந்திருக்கிறது. அது மட்டுமின்றி இன, மத, மொழி, வர்க்க வேறுபாடுகளின்றி நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் இலவச மருத்துவம் உயர்தர அரசாங்க வைத்திய சாலைகளில் உன்னத மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருவதே இந்நாட்டு சுகாதாரச் சேவையின் மீது மற்றைய நாடுகள் கொண்டிருக்கும் மதிப்பிற்குக் காரணம்.
1948ஆம் ஆண்டு யூலை மாதம் 5ஆம் திகதி இங்கிலாந்தின் தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான் நாள். அன்றுதான் அப்போதைய லேபர் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த அனூரின் பேவன் (Aneurin Bevan), இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மான்செஸ்டர் (Manchestor) நகரில் முதலாவது இலவச அரசாங்க வைத்திய சாலையான பார்க்(Park) வைத்திய சாலையைத் திறந்து வைத்தார்.
இதுவே இங்கிலாந்தின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இலவசத் தேசியச் சுகாதார சேவையின் முதற்படியாகும். இந்த இலவசச் சுகாதாரச் சேவையானது, மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் முன்னேடுக்கப்பட்டது. அவை,
1) இச்சுகாதாரச் சேவை நாட்டு மக்களின் அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் ஆற்றல் வாய்ந்ததாக அமைக்கப்படும்.
2) எந்தவிதப் பாகுபாடும் இன்றி வழங்கப்படும் இடத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
3) இச்சேவை, கட்டணம் செலுத்தக்கூடிய மக்களின் அடிப்படையிலின்றி, அவர்களின் வைத்திய தேவைகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
அரசாங்கங்கள் எத்தனையோ பலவிதமான வித்தியாசமான எண்ண ஓட்டங்களைத் தாங்கிய பிரதமர்களின் தலைமையில் மாறி, மாறி அமைக்கப்பட்டும், இச்சுகாதாரச் சேவையின் அடிப்படை கொள்கைகள் மூன்றும் எதுவித மாற்றங்களுக்கும் உள்ளாகாது பாதுகாக்கப்பட்டு வந்ததே இங்கிலாந்தின் மிகப் பெருமை வாய்ந்த சாதனை எனலாம்.
ஐக்கிய இராச்சியத்தைப் பொறுத்தவரையில் இந்நாட்டு தேசிய அரசாங்கம் இதுவரை காலமும் பிரதானமாக இரண்டு கட்சிகளின் கைகளுக்குள்ளேயே உருண்டுகொண்டிருந்தது. தொழிற்சங்ககங்களின் உதவியோடு சோசலிசக் கொள்கைகளை முன்னெடுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட தொழில் (லேபர்) கட்சியும், அந்தக் கால நிலத்துவ பிரபுக்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருந்த பழைமைவாதக் (கன்சர்வேடிவ்) கட்சியுமே இவ்விரண்டு கட்சிகளும் ஆகும்.
கன்சர்வேடிவ் கட்சி எப்போதுமே சிறிய அரசாங்கமும் பெரிய தனியுடைமைப் பங்கீடும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்னும் கொள்கையையே பிரதானமாகக் கொண்டிருந்தது.
ஆனால் ஐக்கிய இராச்சியத்தின் பெரும்பான்மை மக்களின் கருத்து, சமுதாய பரிணாமத்தைக் கொண்டிருந்ததால் தேசிய சுகாதாரச் சேவையை இலவச சேவை எனும் நிலையிலிருந்து தனியுடைமைப்படுத்தப்பட்ட சுகாதாரச் சேவையாக்க மாற்ற அவர்களால் இதுவரை முடியவில்லை.
ஆயினும் ஏதாவது ஒரு வகையில் தனியார் தலையீட்டை நிகழ்த்தி விடுவது அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதற்கு எதுவிதமான தீய சிந்தைகளின் அடிப்படை கிடையாது, கன்சர்வேடிவ் கட்சியின் பொருளாதாரக் கொள்கை, தனியார் மயப்படுத்தலை மையப்படுத்திய முதலாளித்துவக் கொள்கையின் அடிப்படையில் அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.
கடந்த வருடம் ஆட்சியிலிருந்து மக்களால் அகற்றப்பட்ட லேபர் அரசாங்கம், ஏறத்தாழ பதினொரு வருடங்கள் பதவியிலிருந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளே தமது அடிப்படைக் கொள்கைகள், தாம் போகும் பாதை சோசலிசப் பாதை என முழங்கிக்கொண்டிருந்த லேபர் கட்சியானது உலக நடப்புகளின் யாதார்த்தங்களுக்கு ஏற்ப, தம்மை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய தேவையினால் டொனி பிளேயர் அவர்களின் தலைமையின் கீழ் இடதுசாரிப் போக்குகளிலிருந்து சற்று விலகி, வலது சார்ந்து அரசியல் மையப் பகுதியை நோக்கி இழுத்து வரப்பட்டது.
ஆனாலும் அவர்கள் தமது அரசாங்கத்தின் முத்திரையாக இலவச சுகாதாரச் சேவையை விஸ்தரிக்கும் பாதையில் செல்கிறோம் என்று கூறி, சுகாதாரச் சேவையினுள் பணத்தை வாரி இறைத்தார்கள். ஆனால் அவர்களின் இந்த வரவு, செலவுத் திட்ட அதிகரிப்பு, சரியான திசையில் செலுத்தப்பட்டதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சத்திர சிகிச்சை (ஆபரேஷன்), வைத்திய வல்லுனர்களுடனான பரிசோதனை (Consultants appointments) ஆகியனவற்றின் தேவைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்போர், ஆறு மாத காலங்களுக்கு மேலாக காத்திருக்கக் கூடாது என்பதைத் தமது திட்டமாக முன்வைத்து, தமது சுகாதாரக் கொள்கையின் வெற்றியை இதன் அடிப்படையிலேயே அளந்துகொள்வது என்றார்கள்.
இப்பட்டியலின் காத்திருப்புக் காலத்தைக் குறைப்பதற்காகத் தனியார் மயப்படுத்தப்பட்ட வைத்திய சாலைகளை அரசாங்கம் உபயோகித்தது. ஆனால் இச்சேவையை அரசாங்கம் இத்தனியார் மருத்துவமனைகளில் இருந்து விலைக்கு வாங்கியது. இது ஒருவகைத் தனியார் மையப்படுத்தலுக்கு வழிவகுத்ததோ என்னும் சந்தேகம் ஒரு சாராரிடமிருந்து எழுந்தது.
ஆயினும் அப்போதைய லேபர் அரசாங்கம், இல்லை இது எமது நிர்வாகத் திறமையைக் காட்டுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் தனியார் மருத்துவமனைகளும் இப்பொருளாதாரச் சூழலுக்குத் தேவையே ஆனால் மக்களுக்கு இலவச வைத்திய சேவை என்னும் கொள்கையின்படி தனியார் மருத்துவமனைகளில் நாம் சேவைகளை வாங்கிக்கொள்வது எமக்கு லாபகரமானதாக இருந்தால், அதிலென்ன தவறு என்று அதற்குச் சார்பானவர்கள் வாதிட்டார்கள்.
இந்தச் சுழலிலேயே கடந்த வருடம் கன்சர்வேடிவ் தலைமையிலான லிபரல் கட்சியுடனான கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தது. பொருளாதாரச் சிக்கலைக் காரணம் காட்டித் தாம் அனைத்துப் பொதுத் திட்டங்களையும் மீள்பரிசோதனை செய்து, நாட்டின் பட்ஜெட்டைக் குறைப்பதற்காகப் பல சேவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் கோஷத்தை முன் வைத்தது இக்கூட்டணி அரசாங்கம்.
அவற்றில் முக்கியமானது, தேசிய சுகாதாரச் சேவையின் அடிப்படையையே மாற்றி அமைப்பது என்றார்கள். ஆனால் இந்த மாற்றத்தினால் இலவச சேவை என்னும் அடிப்படைக் கொள்கையில் மாற்றமிருக்காது எனவும், நிர்வாகத்தை மாற்றியமைப்பதன் மூலம் அனாவசியமான நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, அவற்றை வைத்திய சாலைகளின் முக்கிய தேவையான நோயாளிகள் பராமரிப்பை நோக்கிச் செலவிடுவதே தமது நோக்கம் என்றார்கள்.
அதன் அடுத்த கட்டமாக, தற்போதைய கூட்டணி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் அன்ரூ லான்ஸ்லி (Andrew Lansley), 2011 ஜனவரி மாதம் 19ஆம் திகதி “சுகாதார, பாராமரிப்பு சட்டமூலத் திருத்தத்தை”ப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதிலே முக்கியமான அம்சங்கள்,
1) இதுவரை வைத்திய சாலைகளின் பட்ஜெட்டைக் கையகப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த 150க்கும் மேலான “தேசிய சுகாதார பாரமரிப்பு மையங்கள்” (National Health Trusts) அனைத்தும் கலைக்கப்படும்.
2) நாட்டில் இருக்கும் குடும்ப வைத்தியர்களின் கட்டமைப்புகளின் கையில் தேசிய சுகாதாரச் சேவையின் பட்ஜெட்டைக் கையாளும் அதிகாரம் கொடுக்கப்படும். அவர்கள் தமது பாவனையாளர்களின் தேவைகளின் நிமித்தம் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை அதற்கான சிறந்த வைத்தியசாலைகளில் பெற்றுக் கொடுப்பார்கள்.
3) வைத்திய சாலைகளுக்குத் தம்மைத் தாமே நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு, தேசிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து 80% சுதந்திரம் வழங்கப்படும். இச்சுதந்திரத்தின் மூலம் அவர்கள் வசதி படைத்த மக்களுக்கு தமது மருத்துவ வசதிகளைக் கட்டணத்திற்கு விற்கும் அதிகாரம் பெற்றவர்களாவார்கள்.
இந்த மாற்றத்தை பிரித்தானிய வைத்தியர்கள் சங்கம் (BMA) எதிர்க்கிறது. கூட்டணி அரசாங்கம் இத்தகைய சட்ட மூலத்தை அமல்படுத்தாமல், மீள்பரிசோதனை செய்ய வேண்டும் என்னும் அவர்களின் குரலோடு சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.
மிக முக்கியமாக நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் இது ஒன்றல்ல. கன்சர்வேடிவ் கட்சியின் அடிப்படை கொள்கையான தனியார் மயப்படுத்துதல் என்பதன் ஆரம்ப கட்டமே இது என்பது பலரது வாதம்.
1948ஆம் ஆண்டு மக்கள் அனைவருக்கும் அவர்களின் மருத்துவத் தேவைகளுக்கேற்ப இலவசமாக மருத்துவம் வழங்கப்படும் என்னும் முக்கியமான அடிப்படைக் கொள்கைக்கு விழும் முதல் அடி எனச் சமுதாய அமைப்புகள் பல கண்டனக் குரல்கள் எழுப்புகின்றன.
எதிர்ப்புகளின் சலசலப்புகளைக் கண்ட கூட்டணி அரசாங்கம் கொஞ்சம் திகிலடைந்தாற்போல் தெரிகிறது. புதுச் சுகாதார சட்ட மூல அமலாக்கம் மீள்பரிசீலிக்கப்படும் என்று பிரதம மந்திரி, உப பிரதம மந்திரி, சுகாதார அமைச்சர் ஆகியோர் கடந்த சில தினங்களாகக் கூறி வருகிறார்கள்.
1948ஆம் ஆண்டு மக்கள் அனைவரும் சமம் என்னும் அடிப்படையோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த அத்தியாவசிய சேவை, 62 வருடங்களின் பின்னர் வசதி படைத்தவர்கள், வசதியில்லாதவர்கள் என்னும் பிரிவுகளுக்கு உள்ளாக்கப்படப் போகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள் சக்தி மகேசன் சக்தியானால் மந்திரி சபையின் மனம் மாறுமோ?
அடுத்த தொடரில் அரசியல் மாற்றங்களை அலசுவோம்.
(தொடரும்………
====================================
படங்களுக்கு நன்றி: http://www.nhs.uk, http://www.patientsafetycongress.co.uk