தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-11)
முகில் தினகரன்
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மைதிலி தன்னைக் காணவே வராததால் மிகவும் நொந்து போன சுந்தர் மெல்லத் தன் தாயிடம் விசாரித்தான்.
“ஏம்மா.. மைதிலி இந்தப்பக்கம் வந்தாளா?”
“ப்ச்.. .இல்லையேடா.. நான் அவளைப் பார்த்தே பதினஞ்சு நாளைக்கும் மேலாச்சு!.. அன்னிக்கு உன் கூட சண்டை போட்டுக்கிட்டுப் போனா பாரு.. அதுக்கப்புறம் ஆளையே காணோம்!”
“அப்படியா?” என்று சுரத்தேயில்லாமல் கேட்டு விட்டு நகரப் போன மகனை ஓடி வந்து தடுத்த லட்சுமி, “டேய்.. சுந்தர்.. உண்மையைச் சொல்லுடா.. உனக்கும் அவளுக்கும் என்னடா பிரச்சினை?.. எப்பவும் தமாஷூக்குத்தான் சண்டை போட்டுக்குவீங்க!.. இந்தத் தடவை மட்டும் என்னடா ஆச்சு?”
“இல்லம்மா.. அது வந்து..” திணறினான்.
“இந்த “வந்து.. போயி” சமாச்சாரமெல்லாம் வேண்டாம்.. மொதல்ல அவ வீட்டுக்குப் போயி அவளைச் சமாதானப் பண்ணிக் கூட்டிக்கிட்டு வர்ற வழியைப் பாரு!.. போ!” மகனை விரட்டினாள்.
மனதிற்குப் பிடித்தவளைக் காண முடியாமல் மகன் தவிக்கும் தவிப்பு அந்தத் தாய்க்குத் தெரியாதா என்ன?
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல். அரை மனதுடன் கிளம்பினான் சுந்தர்.
இவன் போன போது மைதிலியின் வீட்டு வாசலில் ஒரு வாடகைக் கார் நின்று கொண்டிருந்தது.
“என்னது.. காரெல்லாம் நிக்குது?” யோசனையுடன் அருகில் சென்றான்.
வாசலில் ஏகப்பட்ட செருப்புக்கள் குவிந்து கிடக்க, வீட்டினுள் ஏகமாய் அந்நிய முகங்கள்.
“யார் இவங்கெல்லாம்?”
அப்போது வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து வெற்றிலையைத் துப்பி விட்டுத் திரும்பிய ஒரு பெண்மணி சுந்தரைக் கூர்ந்து பார்த்து விட்டு, “அட.. நீ லட்சுமி மகன்தானே?” என்று கேட்க,
“ஆமாம்மா!” என்று சற்று உரத்த குரலில் சொன்னவன், அடுத்த நிமிடமே குரலைத் தாழ்த்திக் கொண்டு, “என்ன விசேஷம் இன்னிக்கு?.. ஒரே கூட்டமாயிருக்கு வீட்டுல?” கேட்டான்.
“அட.. உனக்கு விஷயமே தொpயாதா?.. ஜலகண்டாபுரத்திலிருந்து மைதிலியைப் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க!”
பத்தாயிரம் இடிகள் ஒட்டு மொத்தமாய்த் தன் தலைமேல் விழுந்தாற் போல் அதிர்ந்தான்.
“அம்மா.. நீங்க.. .நீங்க.. நெஜம்மாவா சொல்லறீங்க?” தழுதழுத்த குரலில் கேட்டான்.
“பிறகென்ன பொய்யா சொல்றேன்?.. வா.. உள்ளார வந்து நீயே பாரு!.. மாப்பிள்ளைப் பையன் சும்மா ராசாவாட்டமல்ல இருக்கான்” என்றபடி அந்தப் பெண்மணி திரும்பி வீட்டிற்குள் செல்ல,
தள்ளாடியபடி தெருவில் இறங்கி நடந்தான் அவன்.
“மைதிலி.. பாவிப் பெண்ணே.. இவ்வளவுதானா நீ?.. “கவலைப்படாதே சுந்தர் நாம ரெண்டு பேரும் தினக்கூலிக்கு தறி ஓட்டியாவது வயத்தைக் கழுவிக்கலாம்”ன்னு சொன்னியே.. இப்ப ஒட்டு மொத்தமா என்னையே கை கழுவிட்டியே!.. ஏன் மைதிலி?.. இந்த வெறும் பயலைக் கட்டிக்கிட்டு வாழ்நாள் பூராவும் கஷ்டப் படறதை விட வசதியான ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டு ராணியாட்டம் வாழலாம்ன்னு ஆசைப்பட்டுட்டியா மைதிலி?”
நடக்க முடியாமல் கால்கள் நடுங்கின.
பார்க்க முடியாமல் கண்கள் இருண்டன.
பேச முடியாமல் நா தழுதழுத்தது.
“இனி.. நான் எதற்கு வாழணும்?.. அச்சாணி இல்லாத வண்டி மாதிரி அவள் இல்லாமல் என் வாழ்க்கை எப்படி ஓடும்?”
வீட்டை அடைந்ததும், தளர்வாய் நடந்து, உள் அறைக்குச் செனறவன், படுக்கையில் “தொப்”பென்று விழுந்து, தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு ஒரு பெண்ணைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுதான்..
பதறிக் கொண்டு வந்த லட்சுமி, “டேய்..டேய்..சுந்தர்.. என்னடா என்ன ஆச்சு?..” அவன் தோளைத் தொட்டுத் தூக்கினாள்.
மெல்லத் தலையைத் தூக்கியவன் கண்களில் சிரபுஞ்சி.
“அம்மா.. அம்மா.. நம்ம மைதிலி.. நம்மை ஏமாத்திட்டாம்மா!” செத்துப் போன குரலில் சத்தமின்றிச் சொன்னான்.
“என்னடா சொல்றே?.. மைதிலி ஏமாத்திட்டாளா?.. எப்படிடா?”
படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவன், பள்ளிக் குழந்தையைப் போல் இரு கண்களையும் துடைத்துக் கொண்டு, பாதி அழுகையும்,.. பாதி பேச்சுமாய் சொல்லி முடித்தான்.
இடிந்து போனாள் லட்சுமி. “அடிப்பாவி மகளே!.. “சுந்தர் மாமனைத்தான் கட்டிக்குவேன்!.. சுந்தர் மாமனைத்தான் கட்டிக்குவேன்!”ன்னு ஊர் முழுக்க சொல்லிட்டுத் திரிஞ்சியே.. இன்னிக்கு அவன் இருந்த தறியையெல்லாம் வித்துட்டு ஓட்டாண்டியா நிக்கறான்னு தெரிஞ்சதும் ஒரு நிமிஷத்துல தூக்கி எறிஞ்சிட்டியேடி.. !” வாய் விட்டே புலம்பினாள்.
சில நிமிடங்களில் அந்தப் புலம்பல் அழுகையாக மாறியது.
தாயின் அழுகையை காணச் சகியாத சுந்தர், “அட.. நீ ஏம்மா அழறே?.. விட்டுத் தள்ளும்மா.. பாவம்.. அவளுக்கு அங்க என்ன சூழ்நிலையோ.. என்ன கட்டாயமோ?.. யாருக்குத் தெரியும்?.. .அதைத் தெரிஞ்சுக்காம நாம அவளைத் திட்டறதுல அர்த்தமே இல்லைம்மா!.. பாவம்.. .என்ன மாதிரியான இக்கட்டுல அவ இதுக்குச் சம்மதம் தெரிவிச்சாளோ.. ?யார் அவளை அதட்டி.. மிரட்டி.. சம்மதிக்க வெச்சாங்களோ..?” தன் காதலியின் மேல் உள்ள கான்கிரீட் நம்பிக்கையில் அவளை விட்டுக் கொடுக்காமல் பேசினான் சுந்தர்.
“ஹூம்.. வசதியில்லாதவனுக்கு வாழக்கைல காதல் வர்றது கூடப் பாவம்தாண்டா!” ஆற்றாமையைக் கொட்டி விட்டு அழுகையுடனே நகர்ந்தாள் லட்சுமி.
படத்திற்கு நன்றி: http://article.wn.com/view/2012/08/24/Civic_body_moots_proposal_to_levy_pay_and_park_charges_from_/