ஒரு ஊஞ்சல் பேசுகிறது
நான் ஊஞ்சல் பேசுகிறேன்…………..
“கிரீச் கிரீச்” என்று ஆனந்தமாக ஆடிண்டிருந்தேன். என்மேல் அமர்ந்திருப்பது யார் தெரிமோ? அவன் என் ராமுதான். ஆசையோடு அம்பின்னும் கூப்பிடுவோம். அந்த வீட்லே நான் சுமார் 150 வருஷமா இருக்கேனே. அவா வீட்டு பேச்சு கேட்டுக்கேட்டு எல்லாம் எனக்கும் அத்துபடி. ஐயராத்து பேச்சு. அவனை நான் பொறந்ததுலேந்து பாத்தவனாச்சே! ஆமாம் இன்னிக்கு அவன் மொகத்திலே ஏன் இத்தன சோகம் அப்பிக்கிடக்கு? எப்போதுமே சந்தோஷமா சிரிச்ச மூஞ்சியுடன் இருப்பான். இன்னிக்கி என்னடா வந்துடுத்து அம்பி?
என்ன ஆச்சுன்னு தெரியலே … போன வாரந்தான் ராமுவோட புள்ளையாண்டான் அமெரிக்காலேந்து வந்தான். இதோ இங்கதான் என் மேலதான் ரெண்டு பேரும் உட்காந்து பேசினா.
“வீட்டை வித்துடு அப்பா, என்னோட அமெரிக்கா வந்துடு” அப்படின்னான் அவன் அருமந்தப்புள்ள.
“உன் அம்மா போன இடத்தை விட்டுவிட்டு எப்படிடா வருவேன் ?அவ செத்தாலும் என்னோட உயிரோடுதாண்டா இருக்கா. அவ ஞாபகத்திலேயே என் மிச்ச வாழ்க்கையும் இங்கேயே தள்ளிடுவேன். இங்கேயே என் உசுரு போணும்டா ” ன்னான் அப்பன்.
“ஏன் அப்பா இப்படி பிடிவாதம் பிடிக்கறேள் ? உங்களுக்கு எதாவது உடம்புன்னா ஒவ்வொரு தடவையும் அவ்வளவு தூரத்லேந்து கிளம்பி வரமுடியுமா ? வராம அங்கேயே இருந்தா என்னமோ ஏதோன்னு மனசு கிடந்து அடிச்சுக்கறது ..பாக்கறவா என்ன நினைப்பா?அதான் சொல்றேன் இந்த வீட்டை வித்துட்டு என்னோட வந்துடு ”
“என்னடா பேசறே முரளி ?தெரிஞ்சிண்டுதான் பேசறயா ? இந்த வீடு உன் தாத்தா காலத்திலேந்து இருக்கு. இந்த வீட்லே ஒரு சரித்திரமே இருக்கு. நான் குழந்தையா வளைய வந்த இடமப்பா இது . நீயும் இங்கதாண்டா பொறந்தே”
“வயசானாலே ரொம்ப கஷ்டம்பா உன்னோட, எப்படியோ போ… நான் இன்னும் ஒரு வாரம் இருப்பேன். நன்னா யோஜனை பண்ணி சொல்லு”
முரளி கிளம்பிப் போனான். பாவம் என் ராமுவுக்கு எழுவது வயசு ஆயிடுத்து. இரண்டு வருஷம் முன்னாலே தான் அவன் சம்சாரம் ஜானகி பூவும் பொட்டுமா போய் சேர்ந்தாள். இப்பக் கூட ஞாபகம் இருக்கு. என் ராமு பொறந்தது …. சும்மாவா பொறந்தான்!
குழந்தையே இல்லேன்னு அவன் அப்பா சுந்தரமய்யர் பண்ணாத பூஜை இல்லை, பரிகாரம் இல்லை, அப்பறம் யாரோ ஒரு சன்யாசி அவருக்கு சுந்தரகாண்டம் படிச்சா ஆம்பள குழந்தை பொறக்கும்னு சொன்னார். அவ்வளவு தான், வீட்டிலே கல்யாணக்கோலம் பத்து நாள் பாராயணம். முடிஞ்ச நாள் அன்னிக்கி வந்தவாளுக்கெல்லாம் சாப்பாடு. அதென்ன தானம்… அதென்ன தானம் அப்பப்பா ! மன்னார்குடியே புகழந்தது.
அப்புறம் என்ன… அவர் நம்பிக்கை வீண் போகலே. ஒண்ணே ஒண்ணே கண்ணே கண்ணு னுட்டு நம்ம ராமமூர்த்தி…. அதான் நம்ம அம்பி ராமு பொறந்தான். ராமநவமி அன்னிக்கிதான்…ரொம்ப செல்லமாத்தான் வளந்தான். ரொம்ப நன்னா படிச்சான். ஏழு வயசிலே பூணலும் போட்டாச்சு. நல்ல மூளை அவனுக்கு. எதச் செஞ்சாலும் நான் தான் வேணும். எழுதணுமா, என்மேலே உட்க்காந்து எழுதுவான். படிக்கணுமா, அப்பவும் என் மேலேதான். என்மேல அத்தனை ஆசை அந்த அம்பிப் பயலுக்கு !
அவன் அம்மா ஆசை ஆசையா தட்டிலே சம்பார் சாதம் பிசைஞ்சு மொறுமொறுன்னு உருளைக்கிழங்கு கறி போட்டுக் கொடுத்தா தூக்கிண்டு என்னிடம் வந்துடுவான்.
“ஏண்டா தடியா, எங்கேடா போறே அப்பாவோடு சாப்பிடேண்டா”
“இல்லேமா நான் ஊஞ்சல்லேதான் ஆடிண்டே சாப்பிடுவேன்”
எனக்கும் அவனுக்கும் அப்படி ஒரு பந்தம். ஆச்சு… ஸ்கூல் முடிச்சு காலேஜும் போனான். நல்ல மார்க்கில் பாஸும் ஆயிட்டான். போஸ்டாபீஸிலே நல்ல வேலையும் கிடைச்சுடுத்து.
கீரீச் கீரீச் … இருங்கோ, சித்த இருங்கோ, என் அம்பி ராமு வெளிலேந்து வந்துட்டான். மூஞ்சியெல்லாம் வாடி. என்ன கவலை! பாவம் என்ன சாப்பிட்டானோ?
“கவல படாதே ராமு, நான் இருக்கேண்டா உனக்கு .. “என் மேலே ஒக்காந்து வீசி வீசி ஆடு. கவல எல்லாம் பறந்து போயிடும். சரி ரெஸ்டு எடு”
சரி, நாம இப்போ கதைக்கு வருவோமா ? என்ன சொன்னேன்…ஆ.. ஞாபகம் வந்துடுத்து. அவன் நல்ல வேலைக்கு போனானா, அப்பறம் ஒரு நாள் அம்பியோட அம்மா பரபரன்னு உள்ளுக்கும் வாசலுக்கும் போயிண்டிருந்தா. உள்ளே நான் இருந்த இடத்திலே ஒரு அழகான கோலம் போட்டிருந்தது. ஆ.. புரிஞ்சு போச்சு நம்ம அம்பிக்கு கலயாணம் நிச்சியம் செய்யறா… அம்பி முகத்திலே வெக்கத்தைப்பாரு! நாலு மணிக்கு, ஒரு படையே வந்தது. பின்னாலே பொண்ணு வந்தா. என்ன அழகு, காதிலே சிமிக்கி, கழுத்திலே அட்டியல், காலிலே கொலுசு, இடுப்பிலே ஒட்டியாணம், தலைப்பின்னி குஞ்சலம், தலை நிறைய மல்லிகப்பூ…… கண்கொட்டாமல் பார்த்தேன்.
அவ பேரு ஜானகி….. ராமனுக்கு ஜானகி நல்ல பொருத்தம் தான்.
“ஏ அம்பி நீங்க இரண்டு பேரும் எம்மேலே ஒக்காந்துக்கோங்கோ வாடா அம்பி ….” நான் சொன்னது அவனுக்கு புரிஞ்சு ஜானகி கையைப் பிடிச்சுண்டு எம்மேலே வந்து ஒக்காந்தான். மெள்ள அவ இடுப்பிலே ஒரு கிள்ளு, அவள் ஆஆ என்று கத்த எல்லோரும் “என்ன ஆச்சு ? என்று கேட்க, “ஒண்ணுமில்லை, கீழே விழப்போனா அதான்” என்று என் ராமு அசடு வழிந்தான். அப்புறம் அவள் வெண்டைக்காய் விரல்லே மோதிரம் போட்டான்.
“கீரீச் கிரீச் ” கொஞ்சம் கொஞ்சமாக ஆடுவதை நிறுத்தினேன். என் மேலே சயனிச்ச ராமு எழுந்துட்டான், என்னைத் தடவினான்.
“உன்னை விட்டு எப்படிடா அமெரிக்கா போவேன் ? ஒரு பத்து நாள்னா பரவாயில்லை. வீடு வேற விற்கன்னா சொல்றான். முரடன், உம் மேலேயும் இந்த வீடு மேலே நான் வச்சிருக்கும் பாசம் அவனுக்கென்ன தெரியும்? பெரிசா பேச வந்துட்டான். அங்கு ஒரு திண்ணை உண்டா? கோயில் உண்டா ? பஜனை உண்டா ? அப்படியே கோயில் இருந்தாலும், அழைத்து போக யாரிருக்கா ? நான் நினச்ச நேரத்துக்கு போகமுடியுமா ? நீயே சொல்லு “
நான் என்ன சொல்ல ? எனக்கு மட்டும் அவனைப்பிரிஞ்சு இருக்க முடியுமா ? அது புரியாத பேசறானே! ஐயோ அழறானே… சரி திரும்ப எங்கேயோ கிளம்பறான்.
சரி, அவன் கதையை மேலே சொல்றேன்.
அன்னிக்கி ஜானாக்கு உடம்பு சரியில்ல. வாந்தி எடுத்தாள். ராமுக்கு புரிந்து போச்சு.
“அடிக்கள்ளி நான் அப்பா ஆகப் போறேனா” அப்டின்னுட்டு அவளை அணைச்சுண்டான். எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான். மாதங்கள் ஓடி வளகாப்பு சீமந்தம் எல்லாம் முடிஞ்சு, தங்க விக்ரஹம் போல் முரளி பொறந்தான். அப்போதும் ஜானா என்மேலே தான் ஒக்காந்திருப்பாள். பாப்பாக்கு பால கொடுப்பா, அங்கேயே ஆடி பாப்பாவை தூங்க வைப்பா. சும்மா சொல்லப்படாது அவா வாழ்க்கையே நான் தான். காலசக்கரம் ஓடிடுத்து. முரளி இப்போ பெரிய பையன்.
முரளியின் மூளையோ மூளை! எல்லாத்லேயும் முதல்தான். பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு அமெரிக்காவுக்கு மேல் படிப்பு படிக்க போனான். “இரண்டு வருஷத்தில் வந்துடறேன் அம்மா” அப்படின்னு சொல்லிட்டுத்தான் போனான். ஆனா வரலையே ? வருஷங்கள் ஓடிப்போச்சு. முரளியைப் பிரிஞ்ச வேதனைலெ ஜானா படுத்த படுக்கை ஆனாள். எம்மேலே தான் படுத்துண்டு ஆடிண்டிருப்பா. ராமுதான் ரசஞ்சாதம் கரைச்சுக் கொடுப்பான். அன்னிக்கி வெள்ளிக்கிழமை, திடிரென்னு ஜானாக்கு மூச்சு திணறிச்சு.
“ஏன்னா இங்கே வாங்கோ அந்த லலிதா சஹஸ்ரநாமம் டேப் போடறேளா” அப்படின்னா. ராமு ஓடி வந்து டேப்பை போட்டான். “டாக்டரைக் கூப்பிடபோறேண்டி “ன்றான்.
“வேண்டாம் என்னை விட்டு போகாதீங்கோ” ன்னு அவன் மடிலே தலைச் சாய்ந்தாள்.
“பந்தூக குசும ப்ரக்யா
பாலா லீல விநோதினி
சுமங்கலி ஸுககரி ஸுவேஷாட்யா ஸுவாஸினி”
என்று பாடிய லலிதா சஹஸ்ரநாமத்தைக்கேட்டுக் கொண்டே தலை சாய்ந்தாள் ஜானா.
முரளி வந்தான். 15 நாட்கள் காரியம் ஆகி வேலை பளுன்னு திரும்ப போயிட்டான். அது என்ன பண சம்பாத்யமோ! அந்தப் பாசம், அன்பு எல்லாம் எங்கே போச்சு ? இரண்டு வருஷம் ராமு தனிமையில் எப்படியோ ஓட்டினான். நான் உண்டு, கோயில் உண்டு, பாட்டு, டிவி, சாப்பாடு இதுதான் அவன் உலகம்.
ஆனா போன மாதம் நல்ல சுரம் வந்து, அவன் நண்பன் சுப்புணி முரளிக்கு போன் செஞ்சான். அதுதான் அவன் வந்திருக்கான்.
இருங்கோ, அம்பி வந்துட்டான். ஐயோ கூடவே முரளியும் இன்னும் சில பேர்கள் வராளே. அடடா வீட்டை வித்துட்டான். ராமுட்டே ஒரு பேப்பர் நீட்டறான் முரளி. அவனும் கையெழுத்து போடறான். 200 வருட வீடாச்சே இதுலே எத்தனை வாழ்க்கை பாத்திருக்கேன் ! அப்பாவெ கூட்டிண்ட்டு போகப் போறனா? இல்லையே, முதியோர் இல்லத்திலே சேர்க்கப்போறன். இந்த வயசிலே துணை வேணுமே ! அதுதான்… நான் துணையா இருக்கேனே! புரியலையா மடப்பயலே ?
“அப்பா இட்டிலி சட்னி தின்னுட்டு கிளம்புங்கோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கோ” னுட்டு முரளி அவசரமாக கிளம்பிப் போனான்.
“என்ன ஜானா நீ எப்படி மல்லிப்பூ மாதிரி இட்லி கொடுப்பே ! நீ செஞ்சு கொடுக்கும் வெங்காய பக்கோடா இன்னி முழுக்க வாசன அடிக்குமே, ஏன் என்னை வீட்டுட்டு பேட்டே நீ. ஒம் புள்ள இன்னிக்கி வீட்டையும் வித்துட்டான். ஜானா ……” அழுதான் அம்பி ராமு.
நானும் அழுதேன். அப்புறம் இரண்டு ஆட்கள் என்னைக் கழட்ட வந்தா. அதற்குள் அவாளை கொஞ்சம் இரு, கொஞ்சம் இரு என்று சைகைக் காட்டி என் ராமு லலிதா சஹச்ஸ்ர நாமம் ஸ்லோகம் வைத்தான்.
,,,”ஓம் ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாரஜ்ஞீ” ஸ்லோகம் நகர்ந்தது. ஆசைத் தீர வேகவேகமாக என்மேல் அமர்ந்து ஆட்டினான் நானும் வீசி வீசி ஆடினேன் ஆ ஆ ன்னு தன் மார்பை பிடிசுண்டு “ஜானா” ன்னு அலறினான். தலைச்சாய்ந்து கீழே விழுந்தான் …. ஜானாவிடம் போய்விட்டான்.
அவனில்லாமல் நானா ! நானும் கீழே அறுந்து விழுந்தேன். உடைந்தும் போனேன். எத்தனை வருட பந்தங்கள்…. இன்று அறுந்து போச்சு.

சிறுகதையில் இது ஒரு புது யுத்தி இல்லையென்றாலும், வித்தியாசமானது என்பது உண்மைதான். நாடகத்தனமான முடிவுதான் என்றாலும், கதையைப் படித்து முடித்தவுடன் ஒரு கவிதையைப் படித்த உணர்வு ஏற்பட்டது.
கதையின் போக்கு மிக அருமை, கதையின் முடிவு பாராட்ட தக்கது.