இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ….. (24)
அன்பினியவர்களே !
மீண்டும் ஒரு மடலில் உங்களுடன் மனதில் கிளர்ந்தெழும் கருத்துக்களுடன் கலக்கிறேன்.
காலம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டு செல்கிறது. நாம் வாழும் காலங்களிலேயே எம் கண்முன்னால் வாழ்க்கையின் அடிப்படைக் கலாச்சார மாற்றங்கள் பல நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
விஞ்ஞான மாற்றங்கள் கனவேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விஞ்ஞான மாற்றங்கள் மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன.
“உத்தியோகம் புருஷ லட்சணம்” எனும் ஒரு ஒரு மொழி முந்தைய காலங்களில் சொல்வழக்கில் இருந்தது. ஆனால் இன்றைய சூழலில், வாழ்க்கையின் வசதிகளின் பெருக்கமும், அவ்வசதிகளை நோக்கிய சமுதாயத் தேடல்களும் ஆண், பெண் இருபாலரையும் சமூகத்தில் வெளியே சென்று உழைக்கும் ஒரு நிலையைத் தோற்றுவித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி பெண் என்பவள் அடுப்பங்கரையில் அடங்கியிருந்து, குழந்தைகளைப் பெற்றெடுத்துப் பராமரிப்பவள் மட்டுமே எனும் கருத்து அடிபட்டு, சமூகத்தின் முன்றலில் ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவகளல்லர், அவர்களும் நாட்டின் பொருளாதார முதுகெலும்பின் முக்கியமான அங்கமே ! என்பதை வலியுறுத்தும் வகையில் இன்றைய சமுதாயத்தில் ஆண்களும், பெண்களும் இணையாக கரம் கோர்த்து நடப்பது பெண்ணுரிமையை முன்னெடுத்த புதுமைப்பாவலன், புரட்சிக் கவிஞன் பாரதியின் நெஞ்சைக் குளிர்விக்கும் செயலே.
விஞ்ஞானம் எத்துனை தூரமும் முன்னேறியிருக்கலாம், காலம் எப்படியும் மாறியிருக்கலாம், காலத்தின் மாற்றத்தை உளவாங்கிக் கொண்டு நாமும் சூழலுக்கேற்ப எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது உண்மை எனும் வாதம் ஒருபுறமிருக்கட்டும். காலம் எவ்வளவுதான் மாறினாலும் அம்மாவை “அம்மா” என்றுதானே அழைக்கிறோம் ! அது மாற்றமடையக்கூடிய ஒன்றா ?
என்ன பேசுகிறீர் ? அம்மாவை இப்போ “மம்மி” என்று அழைக்கிறோமே ! என்று விதண்டாவாதாம் புரியலாம் ஆனால் நான் சொன்னதன் உள்ளர்த்தத்தை புரிந்திருப்பீர்கள். சில அடிப்படை உண்மைகள் மாற்றப்படமுடியாதவை. கால மாற்றத்திற்கப்பாற்பட்டவை.
மனித சமுதாயம் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், நாகரீகம் எனும் பெயரில் தம்மை பல மாற்றங்களுக்குள்ளாக்கியிருந்தாலும், மனித தர்மத்திற்கு உட்ப்பட்ட சில அடிப்படை வரம்பு முறைகளை நாம் மீறாமலிருப்பது ஒன்றுதான் எம்மை விலங்குகளிலிருந்தும் பிரித்து வைத்திருக்கிறது.
அட என்னய்யா ? எதற்கு இந்த நீண்ட பீடிகை எனும் உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது.
கடந்தவாரம் இங்கிலாந்தின் உதவிப்பிரதமர், கூட்டாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவர் திரு நிக் கிளெக் (Nick Cleg) தன்னை ஒரு சர்ச்சைக்குள் மாட்டி விட்டிருக்கிறார்.
என்ன அது ?
“ஓரினத் திருமணம் ” இது இப்போ பல முன்னணி நாடுகளில் தலைதூக்கியுள்ள ஒரு சிக்கலான பிரச்சனை. இங்கிலாந்து நாட்டிலே இதற்கு முன் ஆட்சிபீடத்திலிருந்த லேபர் அரசாங்கம் “ஒரு ஆணும், ஆணும்” அன்றி “ஒரு பெண்ணும், பெண்ணும்” தம்மைத் தம்பதியர் எனும் பந்தத்தில் புகுத்தி இணைந்து வாழ வேண்டுமெனில் அவர்கள் “சமூகச் சடங்கு (Civil ceremony) ” ஒன்றின் மூலம் சட்டப்படி இணைந்து கொள்ளலாம் என்றும், சட்டப்படி தம்பதியர் ஸ்தானத்தில் வாழும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் சட்டச் சலுகைகள் அனைத்தும் இவர்களுக்கும் கிடைக்கும் என்றும் சட்டமூலம் கொண்டு வந்தார்கள்.
ஆனால் இந்த அரசாங்கம் இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளது. இத்தகைய “உறவில்” இணைந்திருப்பவர்கள் ஒரு ஆணும், பெண்ணும் கிறீஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் முன்னிலையில் தெய்வ சாட்சியத்துடன் திருமணம் செய்து கொள்வதைப் போல திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் வகை சட்டமூலத்தைத் திருத்தி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றது.
இத்தகைய முயற்சிக்கு ஆதரவும், எதிர்ப்பும் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது.
“ஓரின ஜோடி” என்பதை சமூகத்தில் ஓர் சாதாரண நிகழ்வாக ஏற்றுக் கொண்டாலும் கூட தெய்வ முன்றலில் அவர்களை இணைப்பது எவ்வகையில் முறையாகுமென்று வாதிடுகிறார்கள் கிறிஸ்தவ மதகுருமார் பலர்.
விவிலியக் (Bible) கோட்பாடுகளின்படி தெய்வ சாட்சியாக நடைபெறும் “திருமணம்” எனும் பந்தம் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் மட்டுமே நிகழும் ஒரு சம்பிரதாயம். அது எப்படி “ஓரின ஜோடி”களுக்கிடையில் தெய்வத்தின் முன்றலில் நிகழலாம்? என்பதுவே அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களினதும் வாதம்.
ஆனால் இதை ஆதரிப்பவர்களோ, காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டும்தானா மலர முடியும்? “ஓரினக் காதல்” என்பது ஒரு நோயல்ல. அது இயற்கையானதாக இருக்கையில், இத்தகைய உறவில் இருப்பவர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், ஏன் அவர்கள் தெய்வ முன்றலில் ஒரு தேவாலயத்தில் தம்மைத் திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது ? என்கிறார்கள்.
சரி இவ்வாதத்தில் எமது உதவிப்பிரதமரின் தலை ஏன் பந்தாடப்படுகிறது ?
“ஓரின ஜோடி” தேவாலயத்தில் பாதிரியாரின் மூலம் திருமணத்தில் இணைந்து கொள்வதை எதிர்ப்பவர்கள், மனத்தளவில் இனத்துவேஷம் கொண்டவர்களுக்கு நிகரானவர்கள் என்று கூறி தன்னை இவ்வாதத்தின் முனைப்பில் புகுத்தியிருக்கிறார் நம்ப உதவிப்பிரதமர் .
“ஓரின ஜோடி” இன் வாழ்க்கைமுறையை நாம் எதிர்க்கவில்லையே ! அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழட்டும் அது அவர்களது தனிமனிதச் சுதந்திரம். ஆனால் கிருஸ்துவ மதத்தின் அதிகாரபூர்வமான விவிலியக் கூற்றின்படி, இத்தகைய சேர்க்கை குற்றமாகக் கருதப்படுகையில், இவர்களை தேவாலயத்தில் இணைப்பது என்பது மதத்தையும், தெய்வத்தையும் அவமதிப்பதாக இருக்காதா? அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை எமது உதவிப்பிரதமர் எப்படி எம்மை “இனத்துவேஷிகள்” போன்றவர்கள் என்று வர்ணிக்கலாம் ? என்று வெகுண்டுள்ளார்கள்.
ஆத்திகர்கள், நாத்திகர்கள் எனும் வாதம் ஒருபுறமிருக்கட்டும். “ஓரின ” உறவில் ஈடுபடுவோர் சிறுபான்மையினர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் ஆதங்கத்தில், அடிப்படை கலாச்சாரத்தில் தம்மை வளர்த்து, அந்த நம்பிக்கையில் ஊறிப்போயிருப்பவர்களின் தனிமனித உரிமைகளை மதிக்கத் தவறலாமா?
நாம் விரும்பியோ விரும்பாமலோ இயற்கை சில நியதிகளை விதித்திருக்கிறது. அத்தகைய ஒரு நியதியே விலங்குகள், மனிதர்கள் , விருட்சங்கள் என்பனவற்றினிடையே நடைபெறும் இனவிருத்தியுமாகும். இவை ஒரு ஆண், பெண் என்பவர்களின் சேர்க்கையால் நிகழ்வதும் இயற்கை வகுத்த நியதியே. காலம் எத்தனை வேகத்தில் ஓடினாலும், நாகரீகம் எப்படித்தான் மாறினாலும் இயற்கை வகுத்த நியதிகளை எம்மால் மாற்ற முடியுமா?
ஒரு சமுதாயம், சமூகம் சீராக வாழ வேண்டுமானால் அவற்றின் வாழ்க்கை முறைகளுக்கு சில வரம்பு முறைகள் வேண்டும். இவை பல்வகையாக எமது முன்னோர்களால் வகுக்கப்பட்டு இருக்கிறது. எம்மை இயக்கும், எமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இவ்வியற்கையை இயக்குகிறது என்பது உண்மை.
அது தெய்வமா? இல்லையா? என்பதில் ஆத்திகர்களுக்கும், நாத்திகர்களுக்கிடையிலுமான வாதம். அது ஒருபுறமிருக்கட்டும். எம் முன்னோர்கள் வகுத்த நியதிகளில் சில இன்றைய காலகட்டத்திற்கு ஒவ்வாதவையாக இருக்கலாம். அவற்றை காலமாற்றத்திற்கேற்ற வகையில் மாற்றியமைப்பது கூடத் தேவையாயிருக்கலாம்.
ஆனால் ஆண் பெண் உறவு, திருமணம் என்பன இத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியவைதானா? தாய்க்கும், சேய்க்கும் இடையிலான உறவு எத்தகைய புனிதமான உறவோ, அத்தகைய புனிதமான உறவே திருமணம் இல்லையா?
இன்றைய சமுதாயத்தில், குறிப்பாக மேலைநாடுகளில் இளம் தலைமுறையினரிடையில் வளரும் வன்முறைகள் வளர்ந்து கொண்டே போகிறது. இதைத் தடுக்க பலவிதமான சட்டங்கள், சமூக நடவடிக்கைகள் என அரசாங்கமும் மற்றும் பல சமூக அமைப்புகளும் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
சமூக வரம்புகளைக் காலமாற்றம் எனும் போர்வையில் உடைத்துப் பார்க்கும் செயலே சில இளைய தலைமுறையினரைத் தான்தோன்றித்தனமாக நடக்க வைக்கிறதோ என்று கூட சில ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.
மூடத்தனமான, மூர்க்கத்தனமான, மக்களை அடிமைப்படுத்தும் அர்த்தமற்ற நியதிகளை மத்ததின் பெயரில் கடைப்பிடித்து வந்தால் அத்தகைய நியதிகளை கேள்விகளுக்குட்படுத்துவது நியாயமான செயலே !
ஆனால் நாம் புதுயுகத்தினர் என்று கூறிக் கொண்டு, நியாயமான ஆன்மிக உணர்வுகளின் அடிப்படையில் தெய்வ நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் செய்யும் நடவடிக்கைகள், எதையுமே நியாயப்படுத்துவதாக அமையாது.
எமது பின்புல நாடுகளில், நாகரீக முன்னேற்றம் எனும் வகையில் சமுதாய வரம்புகளை அசைத்துப்பார்க்கும் நடவடிகைகளைக் கட்டுப்படுத்துவது விழிப்புணர்வுகளை கொண்ட இளைய சமுதாயத்தினரினாலேயே முடியும்.
தனிமனிதச் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றே ! ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை தமக்குப் பிடித்த வகையில் வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பதுவும் நியாயமே ! ஆனால் புரட்சி உணர்வுகள் எனும் போர்வையில் கண்ணுக்குத் தெரிந்த கலாச்சார வரம்புகளுக்கு சவால் விடுவது ஆபத்தானது.
சமுதாயம், சமூகம் ஸ்திரமாக வாழ்வது அதன் அசைக்க முடியாத கலாச்சார அத்திவாரத்தில் அவை கட்டப்பட்டிருப்பதனால். அத்திவாரம் அசைக்கப்படுமானால் கட்டிடம் தரைமட்டமாவது போல இத்தகைய அடிப்படைக் கலாச்சார நம்பிக்கைகளைச் சிதைப்போமானால் சமூக, சமுதாயச் சீர்குலைவும் கட்டுப்படுத்த முடியாததாகிவிடும்.
இதற்காகத்தானோ என்னவோ கவியரசர்,
“கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? ” என்று கவி படித்தார் போலும்.
நாகரீகம் மனிதனுக்குத் தேவையே, ஆனால் அது அவனது சமூகத்தையே அழித்துவிடும் நச்சுப்பாம்பாக மாறக்கூடாது.
அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
நல்லதொரு சிந்தனைப் பகிர்வு. நன்றி ஐயா!