தேவாரத் தலங்கள் சில (பகுதி-2)
நூ. த லோகசுந்தரம்
திருச்சி சமயபுரம் அருகுள்ள திருப்பட்டூர் என வழங்கும் தேவார வைப்புத்தலம் *திருப்பிடவூர்*
சங்ககால நக்கீரர், சிற்றரசன் *பிடவூர்* கிழானின் வள்ளல் குணம் பாடிய 40 வரி இணைக்குறள் ஆசிரியப்பா பாடலொன்று “புறநானூறு 395 பாடப்பட்டோன் >>சோழநாட்டுப் *பிடவூர்*கிழார் மகன் பெருஞ்சாத்தன்>>திணை>>பாடாண், துறைகடைநிலை” எனும் கோளுவுடன் காணப்படுவதால் மிகமிகப் பழமை வாய்ந்த ஊராகும் இப்*பிடவூர்* எனத் தெளியலாம். புறநானூற்று வரிகள் இவை.
“நெடுங்கை வேண்மான் அருங்கடிப் *பிடவூர்*
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம்”
சேக்கிழார் பெருமான் தன் திருத்தொண்டர் (%) புராணத்தில் தான் பெற்ற ஆணை வழி, சுந்தரர் வெள்ளை யானையில் கயிலாயம் செல்ல அவர் தோழர் சேரமான் பெருமான் தானும் பின்னே குதிரை கொண்டேகி பெருமான் முன் தான் இயற்றிய திருக்கயிலாய ஞான உலாவைச் சிவனார் இசைய ஆங்கே அரங்கேற்றிய நூலை சாத்தனார் என்பார் தமிழக மக்கள் அறிய வெளியிட்ட இடம் *பிடவூர்* என்று வெள்ளானைச் சருக்கத்துக் கடைப்பாடலில் காட்டுவதும் இச்சாத்தன் எனலாம். .
சுந்தரர் தேவாரத்திலுள்ள “பேரருளாளன் *பிடவூரன்* தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர் அம்மானே” எனும் வரி அதனை உணர்த்துகின்றமை காண்க
அதான்று, நச்சினார்க்கினியர் தன் தொல்காப்பிய உரையில் எடுத்துக்காட்டாக வைக்கும் ‘உழுவித் துண்போரில்’ மேற்கண்ட பாடல் தலைவன் நிலக்கிழார் போன்றோர் அரசர்களுக்கு மகட்கொடுக்கும் உரிமை படைத்தவர் ஆகும் எனக்குறிக்கும் போது “வேளாளர்களாகிய சோழ நாட்டுப் *பிடவூர்*, திருஅழுந்துர்.. “எனச் சிலரைக் குறித்துச் செல்கின்றார்.
“வேளிர் வரலாறு”டையாரும் வேள்புலத் தலைவர்கள் வரிசை காட்டும்போது மேற்கண்ட நெடுங்கை வேண்மான் மற்றும் *பிடவூர்* சாத்தனைக் குறிக்கின்றார்.
திருச்சியினின்று 35கி.மீ.தூரம் (15 கி.மீ.)சமயபுரம் கடந்து, சென்னைப் பெருவழிச்சாலையிலிருக்கும் சிறுகனூர் மேற்கே சாலை வழி 5 கிமீ *திருப்பட்டூர்* என இந்நாள் வழங்கும், திருப்*பிடவூர்* (பிரம்மபுரீசுவரர்கோயில்) தேவார வைப்புத்தலமாகும். சில ஆண்டுகளாகப் பிரமன் வழிபட்டதெனத் தனித் திருமுன்னுடன், வெகு தூரத்து வாழும் மக்களால், தத்தம் வாகன வழியிலும் பெருமளவில் நேரில் வந்து வழிபடும் சிறப்பு காண்கின்றது.
அப்பர் பெருமானின் ஓர் ‘காப்புத் திருத்தாண்டகம்’, ‘சேத்திரக்கோவைத் திருத்தாண்டகம்‘ ஒன்று, சுந்தரரின் ‘பரவை உண் மண் தளி’ பதிகப் பாடல் ஒன்று, சேந்தனார் திருஇடைக்கழி ‘திருஇசைப்பா‘ ஒன்று என 4 திருமுறை பாடல்கள் குறிக்கும் 1350 ஆண்டு வரை தொன்மம் கொண்டது இத்தேவார வைப்புத்தலம்.
திருப்பிடவூரினைக் குறிக்கும் திருமுறைப்பாடல் வரிகளிவை.
(1) “தெய்வப் புனல் கெடில வீரட்டமும் செழுந்தண் *பிடவூரும்* 6.7.6 திருவீரட்டானம்-காப்புத் திருத்தாண்டகம்
(2) “பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி *பிடவூர்* 6.70.2 சேத்திரக்கோவை-திருத்தாண்டகம்
(3) “பேரருளாளன் **பிடவூர்* 7.96.6 திருவாரூர்ப் பரவை உண் மண்தளி
(4) “நன்குன்றப் பொழில்வளர் மகிழ் திருப்*பிடவூர்* 9.78 திருவிடைக்கழி-திருஇசைப்பா
(5)”சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத்திரு உலாப்புறம் அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்*பிடவூர்*தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே” 4280 பெரிய புராணம் (%)
[திருவாவடுதுறை ஆதீனம் திருப்*பிடவூர*ரில்* அமைத்ததாகக் காட்டும் கல்வெட்டுகளில் அப்பரடிகளின் திருவீரட்டான காப்புத்திருத்தாண்டகப்பாடலும் சேந்தனாரின் திருவிசைப்பா பாடலும் வைப்புத்தலமாகக் குறிப்பதனை ஏனோ காட்டவில்லை]
கோயில் கருவறை, சுற்று மண்டபம், மதில் வெளியே விழாக்கால திருஓலக்க மண்டபம், எனக் கற்றளிதான். கொடிமரம் உள்ளது. தலஇறைவன் >> பிரமபுரீசர்.இறைவி >> பிடவமலராள்(#) தலப் பயிரினம் >> பழமைப்பெயர்வழி *பிடவம்*
திருச்சி நகரப்பேருந்தே சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்கிறது. வடக்கே பெரம்பலுரிருந்தும் நகரப் பேருந்துளது. திருச்சி – சென்னை சாலைப் பெருவழிப் பேருந்தில் வருவோர் சிறுகனூரில் இறங்கி வேறு சிறுவாகனச் சேவை வழிகளிலும் சென்றடையலாம். மிகச்சிறு ஊராகையால் அங்கே இரவு தங்க வாய்ப்புகள் காணவில்லை. ஆனால் எளியவருக்கும் சமயபுரத்தில் அதிகமுண்டு. சிறப்புமிக்க மாரியம்மனை வழிபட வருவோர் மிக எளிதாக *பிடவூர்* செல்ல முடியும். பழமை மிக்க ஓர் சிவனுறை தேவாரத் தலத்தை எவரும் வழிபட்டு உய்யலாம்.
கோயிலில் காணும் ஓரிரு காட்சிகள் வைத்துள்ளமை காண்க.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
திருமுறைப்பாடல் வரிகளில் காணும் விளிகளையே தலையாகக் கொள்ளுதல் சைவமரபு. எனவே தல இறைன் பெயர் *பேரருளாளன்* ஆகும். அம்மைக்கும் ‘சம்பத்கௌரி’ என மிகமிகப் புதியதோர் வடமொழிப்பெயரே வைக்கப்பட்டுள்ளது.
*பிடவம்* தலப்பயிரினம்
தமிழகத்தில் இடப்பெயர்கள் ஆங்கு வளரும் பயிரினம் பற்றியே வருதல் இயல்பு. தேவாரத் தலங்களுள் மருதம் புன்கு தெங்கு கொன்றை ஞாழல்ஆல் முல்லை பனை வன்னி அகத்தி ஈங்கை கள்ளி கொள்ளி திலம் மாதினை அரசு கொட்டை தில்லை பராய் பாலை பயறு பாசு ஞீலி என ஓர்பயிரினப் பெயர்களே பெரிதும் இணைந்தமை நாம் நன்கே அறிவோம்.
*பிடவம்* ஓர் நறுமணத்துடன் பூக்கும் பயிரினம். கீழ்க்காணும் வரிகள்வழி காண்க. இஃது வெண்மை செம்மை உள்ளமையும் துரத்தே மணம்பரப்ப, காம்பு முடமாக, முள் தாங்கி கூரிய முகைகளுடன், மயிலை களாமவ்வல் குல்லை தளவு குருந்து கொன்றை என்பனவற்றுடனும் மலைகுன்று கடம் என பல்வகை நிலவாகிலும் குறும் புதராக வளர்ந்து இலை உதிர்த்தும் பூக்கும் ஓர் செடி என அறிய முடிகின்றது காண்க.
குல்லை *பிடவம் சிறுமா ரோடம் – 78 குறிஞ்சிப்பாட்டு
சேண்நாறு *பிடவமொடு பைம்புதல் எருக்கி – 25 முல்லைப்பாட்டு
நெருங்கு குலைப் *பிடவமொடு ஒருங்குபிணி அவிழ – 4 அகம் 23
சிறுகரும் *பிடவின் வெண்தலைக் குறும்புதல் – 1 அகம் 34
வார்மணல் ஒருசிறைப் *பிடவு அவிழ் கொழுநிழல் 10 அகம் 139
ஓங்குமலைச் சிலம்பில் *பிடவுடன் மலர்ந்த – 1 அகம் 147
குறும்புதல் *பிடவின் நெடுங்கால் அலரி – 4 அகம் 154
குளிர்கொள் *பிடவின் கூர்முகை அலரி – 11 அகம் 183
வெண்*பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில் – 7 அகம் 184
சுரும்புமிர்பு ஊதப் *பிடவுத்தளை அவிழ – 11 அகம் 304
தொகுமுகை விரிந்த முடக்கால் *பிடவின் 3 அகம் 344
முளி முதல் பொதுளிய முள் புற *பிடவமும் – 2 கலி 101
தண் நறு *பிடவமும், தவழ் கொடித் தளவமும் 2 கலி 102
புல் இலை வெட்சியும் *பிடவும் தளவும் – 2 கலி 103
ஆலலு மாலின *பிடவும் பூத்தன – 3 குறுந். 251
கடத்திடைப் *பிடவின் தொடைக்குலைச் சேக்கும் 17 பதிற்று. 66
போதவிழ் தளவொடு *பிடவலர்ந்து கவினி ஐங்குறு. 412
பொலன்அணி கொன்றையும் *பிடவமும் உடைத்தே ஐங்குறு. 435
வான்பிசிர்க் கருவியின் *பிடவுமுகை தகைய ஐங்குறு. 461
*பிடவம் மலரத் தளவம் நனைய – ஐங்குறு. 499
செவ்வரி இதழ சேண் நாறு *பிடவின் – 25 நற்றிணை 25
*பிடவமும் கொன்றையும் கோடலும் – 9 நற்றிணை 99
வண்டு வாய் திறப்ப விண்ட *பிடவம் – 3 நற்றிணை 238
இலை இல *பிடவம் ஈர் மலர் அரும்ப – 1 நற்றிணை 242
பொன் வீக் கொன்றையடு *பிடவுத் தளை அவிழ – 8 நற்றிணை 246
களவுடன் கமழ *பிடவுத் தளை அவிழ – 6 நற்றிணை 256
*பிடவங் குருந்தொடு பிண்டி மலர – 36 கைந்நிலை
*பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த 158 சிலம்பு 13 புறஞ்-காதை
*பிடவமும் தளவமும் முட முள் தாழையும் – 163 மணிமே. 3 மலர்-காதை
*பிடவு அலர் பரப்பிப் பூவை பூஇட – 12 கல்லாடம் 15
முல்லை அம்படர் கொடிநீங்கி *பிடவ – 16 கல்லாடம் 87
*பிடவமும் களவும் ஒருசிறை பூப்ப – 4 கல்லாடம் 98
*பிடாவும் மலர்வன கண்டே மெலிவது என் – 302 பாண்டிக்கோவை
நிறங்கிளர் தோன்றி பிறங்குஅலர்ப் *பிடவம் – 7 அகப்பொருள் விளக்கம் 22
யாமரக் கிளவியும் *பிடாவும் தளாவும் – 27 தொல். 7 உயிர்மயங்கியல்