மலரும் மாலவனும்
ஷைலஜா
“தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான் முகனைப்படைத்த
தேவன் எம்பெருமானுக்கல்லால்
பூவும் பூசனையும் தகுமே”
என்று நம்மாழ்வார் அருள்கிறார்.
தேவ ஜாதி மற்றும் எல்லாப்பொருட்களையும் படைக்கவேண்டுமென தன்னுடைய நாபிக்கமலத்தில் நான்முகனைப்படைத்தான் எம் பெருமான். அப்படிப்பட்ட எம் பெருமானுக்கல்லாமல் மற்றவர்களுக்கு மலர்களும் பூஜைகளும் தகுமோ என்கிறார். மாலன் அழகன் அவனுக்குத்தான் மலர் சூடி அழகு பார்க்க வேண்டுமாம்! பூஜை செய்ய வேண்டுமாம்!
ஆனால் சாஸ்திரங்களில் அதிக ஞானம் இல்லாதவர்களும் செய்ய சக்தியற்றவர்களும் என்ன செய்வது? இதற்கும் மாலவன் பகவத் கீதையில் சுருக்கமாய் அருளிச்செய்கிறான்.
துளசிதளம் போன்றதை, ஏதேனும் ஒரு பழத்தை, ஒன்றுமில்லையெனில் தீர்த்தத்தை மட்டும் எனக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறவனுக்குப் பரிசுத்த மனத்துடன் பக்தியுடன் அவன் சமர்ப்பிக்கும் இலை பூ முதலானவற்றை நான் நேர்த்தியான நைவேத்தியமாக ஏற்றுக்கொண்டு உண்கிறேன். இப்படிக் கீதையில் அருள்கிறார் இறைவன்.
சமர்ப்பி்ப்பது நம்மளவில் மிக சாதாரணமாக இருந்தாலும் பிரியமுடன் அதனை ஏற்கும் எம்பெருமானின் எளிமையும் கருணையும் எழுத்தில் வடித்து விட முடியுமா என்ன?
பெரியாழ்வார் எம்பெருமானை மனதினாலேயே ஆராதிக்கலாம் என்கிறார்.
“மார்வமென்பதோர் கோயிலமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு
அரவதண்டத்திலுய்யலுமாமே..”
இங்கு ஆழ்வார் தன் இதயத்தையே கோயிலாக்கி, இறைவனை அங்கே அமர்த்தி, அவன் மேலுள்ள அளவற்ற ஈடுப்பாட்டினையே பூக்களாகி பூஜையிடுமாறு அருள்கிறார்.
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாம் ஆண்டாளும், “தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்கப் போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்கிறாள்.
திருமங்கை ஆழ்வாருக்கு மலர்களைக் கண்டால் எம்பெருமான் திருவடிக்கு இவை ஏற்றமாகுமே என்று எண்ண வேண்டும் என அற்புதமாக அருளிச் செய்கிறார்.
“கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால்
புள்ளாயோர் ஏன்மாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று”
நம்மாழ்வாரும், “நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே” என்று அருளும் பாசுரத்தில் வாடாமலர்களை வராஹவதாரம் செய்த பெருமானின் திருவடிக்குச் சமர்ப்பிக்கும்போது மறுவீடு கிடைக்குமே என்கிறார்.
மலர்களை மாலவனுக்குச் சமர்ப்பித்து நாமும் மறுவீடு பெறும் பேறுக்கான பாதை நோக்கிப்பயணிப்போம்!
படத்திற்கு நன்றி: http://www.gettyimages.in/detail/photo/vishnu-feet-india-royalty-free-image/130158810