நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-14)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
சுந்தரம் ஆபீசில் என்ன நடந்தது என்பதே கல்யாணிக்குத் தெரியாது. அவள் பாட்டுக்கு டிவியை, கம்ப்யூட்டரை தூசி தட்டிக் கொண்டிருந்தாள். சுந்தரம் வரும்போதா அவள் சரியாகக் கம்ப்யூட்டரிடம் நிற்க வேண்டும்? எல்லாம் விதி!
அன்று வழக்கத்துக்கு மாறாகப் பல முறை காலிங்பெல்லை அமுக்கினான் சுந்தரம். யாரோ என்று கதவைத் திறந்தவளுக்கு சுந்தரத்தின் கோபாவேசம் பயத்தை அளித்தது. ஒன்றும் பேசாமல் தான் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தாள். அதைப் பார்க்கப்பார்க்க அவள் வேண்டுமென்றே ஒன்றும் தெரியாத வேஷம் போடுகிறாள் என்று ஆத்திரமாக வந்தது சுந்தரத்துக்கு.
உள்ளே நுழைந்தவன் உடை கூட மாற்றாமல் நேரே விசாரணையில் இறங்கி விட்டான்.
“அது எப்டி கல்யாணி செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாதவ மாதிரி நடிக்கற?”
உண்மையாகவே கல்யாணிக்கு சுந்தரம் எதைக் குறிப்பிட்டுக் கேட்கிறான் என்று தெரியவில்லை. “இவருக்கு இவ்ளோ கோவம் வரும்படியா நாம என்ன செஞ்சுட்டோம்?” என்று யோசித்து நின்றவளை அவன் குரல் மூர்க்கமாக உலுக்கிற்று.
“உன்னைத்தாண்டி கேக்கறேன்! நாசமாப் போறவளே? ஏன் அப்டி செஞ்சே?”
ஒன்றுமே சொல்லாமல் வெறுமே திட்டுவது என்றால்? கல்யாணிக்கும் கோபம் வந்தது.
“என்னங்க நீங்க? என்ன விஷயம்னே சொல்லாம கண்ட மேனிக்குத் திட்டுறீங்க?”
“ஓஹோ! உனக்கு விஷயம் என்னன்னே தெரியாது! இதை நான் நம்பணும் அப்டித்தானே?”
“நீங்க என்ன வேணா சொல்லிக்குங்க! எனக்குக் கவலை இல்ல! ஆனா இப்போ எதுக்கு என்னைத் திட்டறீங்க? ஏன் இவ்ளோ கோபமாயிருக்கீங்கன்னு சொல்லுங்க! அதுக்குத் தகுந்தபடி நானும் பதில் சொல்லறேன்”
“பேச்சுல எல்லாம் ஒண்ணும் குறச்சல் இல்ல! வெளிப்படையாவே கேக்கறேன்! நீ சமீபத்துல வெளிநாட்டுக்கு ஏதாவது பணம் அனுப்பினியா?”
கல்யாணிக்கு வாயடைத்துப் போயிற்று. “ஓ! அது அவருக்குத் தெரிஞ்சு போச்சா? அதான் இந்தக் கோவம்!” என்று நினைத்தவளுக்கு ஏனோ அவளை அறியாமல் நிம்மதி பிறந்தது. இத்தனை நாள் சுந்தரத்துக்குத் தெரியாமல் மறைத்து வைத்த அந்தக் குற்றவுணர்வு மனதில் இருந்து விலகியது. மெல்ல முகம் தெளிந்தாள்.
“என்ன பேச்சு மூச்சே காணும்? பதில் சொல்லப் போறியா இல்லியா?”
“அது வந்துங்க… அது … அ .. ஆமா!”
“என்னது ஆமாவா? அப்போ அனுப்புனது நெஜம் தானா? ஐயோ! என் வாழ்க்கையையே ஸ்பாயில் பண்ணிட்டியே! ஆபீசுல உள்ளவன் எல்லாம் என்னைப் பாத்து சிரிக்கற அளவு பண்ணிட்டியே? என் மானமே போச்சே? உன்னை என்ன செஞ்சாத்தான் என்ன?”
கல்யாணிக்குக் குழப்பமாக இருந்தது. “நான் வெளி நாட்டுக்கு பணம் அனுப்புனதால இவரு மானம் என்ன போச்சு? ஏன் ஆபீசுல எல்லாரும் கேலி பண்ணணும்? புரியலியே?” என்று நினைத்தவள், கணவனிடம்
“ஏங்க! நான் தெரியாம செஞ்சிட்டேங்க! ஆனா அதுக்கும் உங்க ஆபீசுக்கும் என்ன சம்பந்தம்?”
“கேக்குறியா கேள்வி? உனக்குத் தெரியாது? நீ தான் உலக மஹா ஃபிராடாச்சே! எல்லா விஷயமும் தெரிஞ்சு வெச்சுருப்பியே? ஏன் உன் சேட்டிங்க் பண்ற ஃபிரெண்ட்செல்லாம் இதைச் சொல்லலியாக்கும்?”
“ஐயோ! என்னைக் கொல்லாதீங்க! நான் கம்ப்யூட்டரே கதின்னு கெடந்தது தப்புத்தான். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க!”
“எல்லாம் சரி! நீ எதுக்கு வெளி நாட்டுக்கு பணம் அனுப்புன? உங்க சொந்தக்காரங்க யாரும் அங்க கிடையாதே? நிகில் சொல்லி ஏதாவது அமெரிக்காவுக்குப் பணம் அனுப்பினியா?”
இம்முறை மேலும் விழித்தாள் கல்யாணி! “இவருக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சொம்! இவுரு என்னடான்னா நம்மளையே கேக்குறாரே? அப்போ இவருக்கு இன்னும் விஷயம் முழுசும் தெரியாதா? ஆனா நான் சவுத் ஆப்பிரிக்காவுக்கு பணம் அனுப்புனது அவருக்கு எப்படித் தெரியும்?” “அவுரு சவுத் ஆப்பிரிக்கான்னு சொல்லல்லியே? ஏன் வெளி நாட்டுக்கு பணம் அனுப்புனன்னு தானே கேட்டாரு? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” தனக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தாள்
சுந்தரத்துக்கு இவள் மௌனம் மேலும் ஆத்திரத்தைத் தூண்டியது.
“என்னடி மறுபடியும் பேசாம இருக்க?”
“இதப் பாருங்க எனக்கு ஒண்ணும் புரியல! நான் வெளி நாட்டுக்கு பணம் அனுப்புனது உண்மை தான். அது உங்களுக்கு இப்போ தெரிஞ்சு போச்சு! நானே சொல்லணும்னு தான் இருந்தேன். நீங்க என்ன சொல்வீங்களோன்னு பயந்துக்கிட்டு தான் சொல்லல்ல! “
“ஆமா ! ரொம்பத்தான் பயந்தவ! இப்பவாவது வெவரமாச் சொல்லு! என் வேலை சம்பந்தப்பட்ட விஷயம் இது! எந்த நாட்டுக்கு அனுப்புன? யாருக்கு அனுப்புன? எதுக்கு அனுப்புன? இந்த மூணு கேள்விகளுக்கும் எனக்கு இப்போ விடை தெரிஞ்சாகணும்! ஆமா!
மனத்திற்குள் குழம்பினாலும் சொல்ல ஆரம்பித்தாள் கல்யாணி.
“எனக்கு கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு இ.மெயில் வந்துது இல்லியா குவீன்ஸ் லேண்டுங்கற கம்பெனிலருந்து? நான் கூட உங்க கிட்ட சொன்னேனே! நீங்க கூட அதெல்லாம் சுத்த ஏமாத்து வேலைன்னீங்களே!”
“ஆமா”
“அந்த கம்பெனிக்குத்தாங்க நான் அம்பதாயிர ரூவா பணம் அனுப்புனேன். அப்டி அனுப்புனா எனக்குக் அஞ்சு கோடி ரூவா கெடைக்கும்ங்கற ஆசையில தான் நான் அப்டி செஞ்சேன். ஆனா இதுக்கும் உங்க வேலைக்கும் என்ன சம்பந்தம்? எனக்குப் புரியல்லியே?”
சுந்தரத்துக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. “அது முழுக்க முழுக்க ஏமாத்து வேலை! பணம் அனுப்பக் கூடாதுன்னு எவ்வளவோ சொல்லியும் பேராசை பிடிச்சு இவ பணம் அனுப்பியிருக்கான்னா எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கணும்? இவ பேராசையினால எனக்கு எத்தனை அவமானம்?” என்று நினைக்க நினைக்க ஆத்திரமும் வேதனையும் மாறி மாறி வந்து போனது. கல்யாணியைப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது.
“ஓ! உனக்கு விளக்கம் வேற சொல்லணுமா? சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ! உன்னால இந்த வீட்டுக்கு ரெய்டு மட்டும் வந்தது அப்புறம் நீ என்னை உயிரோடவே பாக்க முடியாது. 22 வருஷம் கட்டிக்காப்பாத்துன நல்ல பேரை ஒரே நாள்ல தரை மட்டமாக்கிட்டியேடி! நீயெல்லாம் ஒரு பொண்டாட்டி! தூ!”
“இதப் பாருங்க? எதா இருந்தாலும் சொல்லிட்டுத் திட்டுங்க”
“சொல்றேன்! தாயே! சொல்றேன்! கொஞ்ச நாளாவே எங்க ஆபீசுல ஒரு ஊழல் நடந்துக்கிட்டு இருக்கு. ரெண்டு பேரு சம்பந்தப் பட்டுருக்காங்கன்னு நான் தான் கண்டு பிடிச்சே சொன்னேன். அந்த ரெண்டு பேரு பேரையும், மத்த விவரங்களையும் ஒரு ஃபைலாத் தயார் பண்ணிக் குடுக்கச் சொன்னாரு மேனேஜர். அந்த சமயத்துல நானே அந்த ஊழல்ல சம்பந்தப்பட்டிருக்கறதா யாரோ எனக்கு வேண்டாதவங்க நெறய மொட்டை லெட்டர் போட்டுருக்காங்க. அதை நம்பின அவங்களும், விஜிலன்ஸ் டிபார்ட்மெண்டுக்குச் சொல்லியிருக்காங்க. அவங்களும் என்னை கண்காணிக்க, என்னைன்னா என் ஃபேமிலியையும் சேத்துத்தான் கண்காணிக்க ஆள் போட்டுருக்காங்க. அந்தச் சமயத்துல தான் நீ கர்ரெக்டா வெளி நாட்டுக்குப் பணம் அனுப்பியிருக்க. அதைப் பாத்த எங்க ஆபீஸ்காரங்க நமக்கு ஏதோ ரகசிய அக்கவுண்டு வெளி நாட்டுல இருக்கறதாகவும், நான் அதுல உன் மூலமா நெறயப் பணம் போடறதாகவும் நெனச்சி, நான் ஊழல் பண்ணியிருக்கேன்னு முடிவே பண்ணிட்டாங்க. அதனால என் மேல என்கொயரி, வீட்டுக்கு ரெய்டு இப்படி எல்லாம் நடக்கப் போகுது. எல்லாம் யாரால? உன்னாலதான்.”
கல்யாணிக்கு மூச்சடைத்தது. “அடேயப்பா! நான் செஞ்ச இந்த மடத்தனம் இவ்ளோ பெரிசாயிடுச்சா? கடவுளே! நான் செஞ்ச தப்புக்கு என் புருஷனைப் பழி வாங்கிடாதே! இனிமே இந்த மாதிரித் தப்பு பண்ணவே மாட்டேன்” என்று மனதில் கடவுளுடன் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
“என்ன வாயடச்சுப் போச்சா? பைத்தியம் மாதிரி பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு நிக்காதே! ஏன் அனுப்புன?”
“என்னங்க! நான் பணம் அனுப்பறதால இவ்ளோ பெரிய சங்கடம் வரும்னு எனக்குத் தெரியவே தெரியாதுங்க. அப்டி தெரிஞ்சிருந்தா நான் செஞ்சிருப்பேனா? தயவு செஞ்சு என் மேல கோபப் படாதீங்க பிளீஸ்!”
“பின்னே? நீ செஞ்ச காரியத்துக்கு உன்னைக் கொல செஞ்சாக் கூட என் ஆத்திரம் அடங்காது. நீ வேற எதுல விளையாடி இருந்தாலும் நான் மன்னிச்சிருப்பேன். ஆனா நீ என் நேர்மையோட வெளையாடிட்ட! உன்னால என் போன மானத்தை மீட்டுக் குடுக்க முடியுமா? முடியுமாடி?”
“இப்போ என்னங்க செய்யுறது?”
“என்னைக் கேக்கறியா? இந்த அறிவு பணம் கட்டும்போது இருந்திருக்கணும்டி! இப்போ கேக்கறியே அப்போ எங்க போச்சு புத்தி?
“சும்மா அதையே சொல்லாதீங்க! இப்போ அடுத்தது என்ன பண்றதுன்னு யோசிங்க! “
“யோசிக்காம? உனக்கு வந்த இ.மெயில், நீ பணம் கட்டின ரசீது இதையெல்லாம் வெச்சுப் பேசினா ஒரு வேளை அவங்க கேட்டாலும் கேக்கலாம். என்ன செய்ய அதையும் செஞ்சு பாக்கறேன்! ஆமா! உனக்கு ஏது அவ்ளோ பணம்?”
கல்யாணி எந்தக் கேள்வியை நினைத்து பயந்து கொண்டிருந்தாளோ அந்தக் கேள்வி வந்தே விட்டது. அதுவும் அவள் சற்றும் எதிர்பாராத தருணத்தில். சுந்தரம் நல்ல மூடில் இருக்கும் போது தான் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று கல்யாணி நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அந்தக் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் அதுவும் சுந்தரம் மிகக் கடுமையான கோபத்தில் இருக்கும் போது.
கல்யாணி பேசவே தயங்கினாள்.
“சொல்லு? எப்டி அம்பதாயிர ரூவா பொரட்டின?”
“அது வந்துங்க, அது வந்து என் பேர்ல கொஞ்சம் பணம் இருந்துது இல்ல? அதத்தான் எடுத்துக் குடுத்தேன்”
“அதையா? அது நிகிலுக்கு பைக் வாங்க வெச்சிருந்த பணம் ஆச்சே? அதைத் தொட உனக்கு எப்டி மனசு வந்துது?”
“அந்த அஞ்சு கோடி ரூவா கெடச்சா நிகிலுக்குக் காரே வாங்கிக் குடுக்கலாமேன்னு தான் அதை எடுத்தேன்”
“அஞ்சு கோடி! மண்ணாங்கட்டி! உன் மூஞ்சியும் நீயும். குழந்தைக்கு வெச்சிருந்த பணத்தைக் கொண்டு போயி குடுத்திருக்கியே அதுவும் என்னை ஒரு வார்த்தை கேக்காம? நீ சம்பாதிச்ச பணம் அப்டீங்கற திமிரு தானே?”
“ஐயையோ! அப்டியெல்லாமில்லீங்க! “
“என்ன அப்டியெல்லாம் இல்ல? இதே நான் சம்பாதிக்கற பணத்த உன்னைக் கேக்காம செலவழிச்சிருந்தா சும்மாயிருப்பியா நீ? என்னென்ன கேள்வி கேப்ப? இப்போ நீ செஞ்சா மட்டும் நியாயம்? அப்டித்தானே?”
“என்னங்க நீங்க? நான் அப்டியெல்லாம் நெனப்பேனா?”
“அது சரி.., அதுல நாப்பத்தஞ்சாயிரம் தானே இருந்துது? நீ எப்டி அம்பது கட்டின?”
“அது வந்துங்க! வந்து”
“மென்னு முழுங்காம மடமடன்னு சொல்லு. என்ன பண்ணித் தொலச்ச?”
“என்னொட செயின் ஒண்ணை இங்க பக்கத்துல இருக்கற கடையில அடகு வெச்சிட்டேன். அதுல ஒரு அஞ்சாயிரம் வந்தது”
“சூப்பர்! இது வேறயா? அந்த செயினை எப்டி மீட்கறதா இருந்த?”
“நான் தான் சொன்னேனேங்க எனக்கு அந்த அஞ்சு கோடி வரும்னு நெனச்சேன்னு”
“இன்னும் வேற என்னென்னல்லாம் பண்ணியிருக்க? எனக்குத் தெரியாம?”
“இவ்ளோ தாங்க! வேற எதுவும் பண்ணல்ல!”
“ஏன் இன்னும் பண்ண வேண்டியது தானே? அவ்ளோ தான்னு சொல்ல ஒனக்கே வெக்கமாயில்ல? பழிகாரி! சதிகாரி!”
“இதப் பாருங்க எதுவுமே நான் வேணும்னு செய்யல! எதேச்சையா அப்டி நடந்துட்டுது. அது இவ்ளோ பெரூசா உங்க ஆபீசையே பாதிக்கற அளவு இருக்கும்னு எனக்குத் தெரியாது. ரொம்ப சாரிங்க”
“நீ இனிமே என்ன மன்னிப்புக் கேட்டு என்ன உபயோகம்? நான் யார் யார் கால்ல எல்லாம் விழணுமோ? எல்லாம் என் தலையெழுத்து!”
“தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க!”
“நீ சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி என்னைக் கடுப்பேத்தாதே! உன்னை நான் மன்னிக்கறதும் இல்லாததும் இப்போ முக்கியம் இல்ல! இப்போ எனக்குத் தேவை நம்ம வீட்டுக்கு ரெய்டு வரக்கூடாது. என் மேல உள்ள களங்கம் நீங்கணும். இது ரெண்டும் தான். அந்த பணம் கட்ன ரசீது. இ-மெயில் காபி எல்லாம் குடு! நகை அடகு வெச்ச ரசீதும் குடு. எனக்கு எந்த வகையில அந்த அம்பதாயிரம் கெடச்சிருக்கு அதாவது சோர்ஸ் ஆஃப் இன்கம் குடுத்தா என் மேல உள்ள சந்தேகம் தெளிவாயிடும். போ போயிக் கொண்டு வா”
கல்யாணி பதிலே பேசாமல் உள்ளே சென்று அவன் கேட்டவைகளை எடுத்துக் கொடுத்தாள். சுந்தரமும் எதுவும் சொல்லாமல் அவற்றை வாங்கிக் கொண்டு ஃபோனைச் சுற்ற ஆரம்பித்து விட்டான்.
“சார்! நான் தான் சார் சுந்தரம் பேசுறேன்! என் வைஃப் பணம் அனுப்பினது உண்மைதான். ஆனா அவங்க எங்க காசத்தான் எடுத்து அனுப்பியிருக்காங்க. என் கிட்ட எல்லா புரூஃபும் இருக்கு. “
“———“
“சரி சார்! ரொம்ப தேங்க்ஸ் சார்! நான் இப்போவே வரேன் சார்! ” என்று சொன்னவன் கல்யாணி பக்கம் திரும்பி
“இங்க பாரு நான் மறுபடியும் ஆபீஸ் போறேன். என்னை மேனேஜர் வரச் சொல்லியிருக்காரு. அனேகமா எல்லாம் நல்லபடியாத்தான் முடியும்னு நெனக்கிறேன். ஆனா ஒண்ணு நான் திரும்பவும் இளிச்சிக்கிட்டு உன் பின்னால வருவேன்னு நினைக்காத! உனக்கும் எனக்கும் நடுவுல ஒண்ணுமில்ல! என்னைப் பொறுத்தவரை நீ நிகிலோட அம்மா அவ்ளோதான், இவ்வளவையும் பண்ணிட்டு என் தங்கச்சிய வேற அவமானப் படுத்தியிருக்க! உனக்கு இருக்கற திமிரு வேற யாருக்கும் கிடையாது! என்ன முழிக்கற ? என் தங்கச்சி ஃபோன்ல எல்லாத்தையும் சொல்லிட்டா” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னவன் விருட்டென வெளியேறினான்.
கல்யாணி கைகளைப் பிசைந்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவள் செய்தது ஒரு தப்பா ரெண்டு தப்பா? வரிசையாக அவ்வளவுமே தப்பு. “கம்ப்யூட்டரால் தானே இவ்ளோ வினை? அதையே ஒடச்சுப் போட்டுட்டா என்ன? ஒடச்சுட்டா எல்லாம் ஆச்சா? அவருக்கு இன்னும் என் மேல கோவம் தான் ஜாஸ்தியாகும். அவர் இனிமே என் கூட நல்லாப் பேசுவாரா? இந்தக் குடும்பத்துல கலகலப்புத் திரும்புமா? சே என்ன காரியம் செய்துட்டேன்! அவரோட இத்தனை வருஷ நேர்மையையும், உழைப்பையும் வீணாக்கிட்டேனே! எனக்கு இந்தத் தண்டனை தேவைதான்” என்று என்னவெல்லாமோ யோசித்தபடி உட்கார்ந்திருந்தாள். பொழுது போனதே தெரியவில்லை. நேரம் ஆக ஆக தான் ஏதேனும் தவறான முடிவுக்குப் போய் விடுவோமோ என்ற பயம் அவளை சூழ்ந்து கொண்டது. “எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே ஆண்டவனே! முருகா! வட பழனி ஆண்டவனே! உனக்குப் பால் அபிஷேகம் பண்றேன் சாமி! என் புருஷன் மானத்துக்கு பங்கம் எதுவும் வரக்கூடாது. அவரு சிரிச்ச மொகத்தோட ஆபீஸ் போறதைப் பாத்தா போதும். எனக்கு வேற எதுவும் வேண்டாம்”.
அழுது அழுது கண்களில் நீர் வற்றி விட்டது. தலையெல்லாம் கலைந்து அலங்கோலமாக இருந்தது. பொழுது சாய்ந்ததைக் கூட அவள் கவனிக்கவில்லை. வீட்டில் லைட்டும் போடவில்லை. காலேஜிலிருந்து வந்த நிகில் கதவைத் திறந்த அம்மாவைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டான். சமாளித்துக் கொண்டு உள்ளே வந்தவன் வீடே இருட்டாக இருப்பதைப் பார்த்து லைட்டைப் போட்டு விட்டு அம்மாவை நோக்கி
“அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்டி இருக்கீங்க? லைட்டைக்கூடப் போடாம? ஃபீவரா? ஒடம்பு சரியில்லையா?” என்று கேள்விகளை அடுக்கினான்.
நிகிலைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டது. ஓவென பெருங்குரல் எடுத்து அழுதாள். அவன் பதறிப் போய் விட்டான். அவனிடம் விஷயம் முழுவதையும் சொன்னாள். தான் பணம் கட்டியதிலிருந்து ஆரம்பித்து எல்லா டாக்குமெண்ட்சையும் எடுத்துக்கொண்டு சுந்தரம் ஆபீசுக்கு ஓடியிருப்பது வரை சொன்னாள். விக்கித்துப் போனான் நிகில்.
“டேய் நிகில்! உனக்கு பைக்குக்குன்னு வெச்சுருந்த பணத்தை எடுத்துக் குடுத்துட்டேண்டா! கண்ணா! அது மட்டுமில்ல அப்பாவோட பேரு கெட்டுப் போறதுக்கும் நானே காரணமா இருந்துட்டேன். நான் பாவி நான் பாவி” என்று தலையில் மடேர் மடேர் என்று அடித்துக் கொண்டாள்.
அம்மாவை அப்படியெல்லாம் இது வரை பார்த்திராத நிகில் பயந்து போனான்.
“அம்மா பிளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்மா! பிளீஸ் எனக்கு ரொம்ப பயமாயிருக்கும்மா! பிளீஸ்மா! ” என்று அவன் கதறினான்.
அவன் கதறலைக் கேட்டதும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தாள் கல்யாணி. நிகில் குடுத்த தண்ணீரைக் குடித்தவள் தலையை இறுகி முடிந்து கொண்டாள். சேலையைச் சரி செய்து கொண்டாள்.
“நிகில்! ஐ ஆம் சாரிடா! உணர்ச்சி வசப்ப்பட்டுட்டேன். நான் செஞ்ச தப்பை நெனச்சா” மீண்டும் கண்ணீர் பெருகியது கல்யாணிக்கு.
“அம்மா பிளீஸ்! “
“சரி சரி! உங்கப்பா ஆபீஸ் போயிருக்காருடா கண்ணா அவரு வந்து ஒண்ணுமில்லன்னு சொல்றவரைக்கும் எனக்கு இப்படித்தான் இருக்கும். என்னால இனிமே உனக்கு பைக் வாங்கித்தர முடியாதுடா நிகில் எல்லாத்தையும் எங்கியோ கொண்டு போட்டுட்டேன்”
“அம்மா! பணம் போனப் போட்டும்! அப்பா கெட்ட பேரு இல்லாமத் தப்பிச்சாருன்னா அதுவே எனக்குப் போதும். பைக் இல்லேன்னா என்ன? தலையைச் சீவிடுவாங்களா?”
பொறுப்போடு சொன்ன மகனை வாஞ்சையோடு பார்த்தாள் கல்யாணி.
“ஆனா அப்பா எம் பேருல ரொம்பக் கோவமாயிருக்காருடா நிகில். என்னை அவர் மன்னிப்பார்னு எனக்குத் தோணல!
“எல்லாம் சரியாகும்மா! அப்பாவோட கோவம் பத்தி நமக்குத் தெரியாதா? இன்னிக்குக் கத்துவாரு நாளைக்கே சமாதானமாகிடுவாரு பாருங்களேன்!”
“இல்ல! நிகில்! நீ என் ஆறுதலுக்காகச் சொல்ற! அப்பாவோட கோவத்தைப் பாத்திருந்தீன்னா உனக்குப் புரிஞ்சிருக்கும். நான் எத்தனை மன்னிப்புக் கேட்டும் அவர் கோவம் தீர்லன்னா பாத்துக்கயேன்”
நிகில் மேலும் ஆறுதலாக இரண்டு வார்த்தை சொன்னான். அம்மாவும் மகனும் ஆவலோடு சுந்தரத்தின் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி: https://www.123rf.com/photo_8240357_indian-business-man-using-a-mobile-phone-standing-outside-a-modern-office-building.html