செம்மொழியாம் நம் தமிழ்மொழி!

2

 

அன்பு நண்பர்களே,

வணக்கம். உலகமே சுருங்கி ஒரு கிராமமாகிவிட்ட இந்த கணினி யுகத்தில், அவரவர் தாய் மொழியைக் காப்பதை ஒரு பெருங்கடமையாகக் கொண்டு போராட வேண்டிய நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது. உலக மொழிகள் பல இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது.

”உலகமயமாக்கலின் இன்றைய நிலையின் அதிகபட்ச விலையாக நம் தமிழ்த் திருமொழியை கொடுக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதை தவிர்க்க இயலவில்லை. உலகம் முழுவதும் தற்போது 6000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்த நூற்றாண்டில் 12 மொழிகள் மட்டுமே வளமையாக வாழப்போகிறது என்றொரு ஆய்வறிக்கை அச்சமூட்டுகிறது. இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவல், அப்பட்டியலில் தமிழ் மொழி இல்லை. நம் நாட்டில் மொத்தம் வழக்கில் உள்ள 18 மொழிகளில், இந்தி மற்றும் வங்காளி மொழி மட்டும்தான் எஞ்சி நிற்கலாம் என்கிறது அந்த ஆய்வறிக்கை. மொரீசியசு நாடு இதற்கு ஒரு சான்று. இன்றும் பலர் தமிழ் பெயர்களுடன் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் தமிழர்களாயினும் தமிழ் மொழி பயன்பாடு அறவே நின்றுபோய் உள்ளது. காலப்போக்கில் அழிந்து போய் உள்ளது.” (என் கட்டுரை – மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!)

இன்றைய இளைஞர்கள் ’திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று உலகம் முழுதும் பொருளாதாரம் தேடி ஓடிக்கொண்டிருக்கையில், பல்வேறு மொழிகளை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தச் சூழலில் அவர்தம் தாய் மொழியே முதல் பலிகெடா ஆகிவிடுகிறதோ என்ற அச்சம் எழாமல் இல்லை. அடுத்து வரும் சந்ததியினரின் நிலை இதைவிட மோசமாகக் கூடும் என்று அறிஞர்கள் வேதனை கொள்வதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. நம்முடைய செந்தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தற்கால சிறந்த படைப்புகள், சமகால் தமிழ் அறிஞர்களின் தலை சிறந்த படைப்புகள் என அனைத்தையும் நம் வருங்காலச் சந்ததியினருக்காக சேமித்து வைக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் நம் வல்லமை இதழ் எடுக்கும் பல்வேறு முயற்சிகளின் தொடர்பாக இன்று சிறந்த தமிழ் அறிஞர் திரு ஹரிகிருஷ்ணன் அவர்களை அறிமுகப்படுத்துகிறோம். மேலும் பல அறிஞர்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பையும் வரவேற்கிறோம்.

30 வருடங்களாக. 2005 வரை மஹிந்திரா & மஹிந்திரா குழு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநரின் உதவியாளராக (Executive Secretary.) பணியாற்றியுள்ளார். டிசம்பர் 2000 முதல் சென்னை ஆன்லைன் ஆங்கிலப் பதிப்பின் உதவி ஆசிரியராக, இருக்கிறார். ஆங்கிலத்தில் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார்..

சென்னை ஆன்லைன் www.chennaionline.com <http://www.chennaionline.com> Daily Religion பகுதியில் ஐந்தாண்டு காலம் அன்றாடம் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்..  

    இராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பாத்திரத்தையும் விரிவாக எழுதி அதன் மூலம் பெரும் வாசக வட்டத்தைக் கொண்டிருக்கிறார். பாரதியில் பெரும் ஈடுபாடு கொண்டவர். பாஞ்சாலி சபதத்தை மனப்பாடமாக மக்கள் முன்னிலையில் இரண்டு முறை தனி நடிப்பாகச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  வியாச பாரதத்துக்கும் பாஞ்சாலி சபதத்துக்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து தொகுத்து வைத்திருக்கிறார்.  பாரதி பாஞ்சாலி சபதத்தின் மூலம் சொல்ல வருவதென்ன என்பதன் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.  ”கம்பன் என் வேதம் என்றால், பாரதி என் நண்பன்.  வழிகாட்டி.  துன்பம் வந்துற்ற வேளையில் துணைவன்.” என்கிறார்.

    ”ஆங்கில இலக்கியப் பயிற்சியும் உண்டு.  பெரும்பாலும் கவிதைகள் படிப்பதுதான் வழக்கம். உளவியல், சரித்திரம், Brief History of Time போன்ற விஞ்ஞான அடிப்படையிலான நூல்கள், Zen and the art of Motorcycle Maintenance போன்ற நூல்கள் என்று கலந்து கட்டியாகப் படித்திருக்கிறேன்.  இன்ன துறை என்றில்லாமல், கிடைத்ததெல்லாம் படிக்கும் வழக்கம் உண்டு” என்கிறார் நகைச்சுவையாக.

    அகத்தியர், மன்ற மையம், சந்தவசந்தம், மின்தமிழ், வல்லமை தமிழ்மன்றம் CTamil உள்ளிட்ட 28 மடற்குழுக்களில் உறுப்பினராக உள்ளவர்.   கடந்த 14 ஆண்டுகளாக இணையத்தில் பங்களித்து வருபவர். இராமாயண, மகாபாரதத் தலைப்புகளில் உரையாற்றுவதிலும் வல்லவர்.

    மதுரைத் திட்டத்திற்குப் பாஞ்சாலி சபதத்தைத் தட்டச்சி வழங்கியுள்ளார்.  விருத்தப் பாவியல் என்ற அரிய நூலை மதுரைத் திட்டத்திற்காக கணினியில் தட்டச்சிக் கொண்டிருக்கிறார்.

    கல்லூரி நாட்களில் நல்லூர் இலக்கிய வட்டம் என்று நங்கநல்லூரில் நடத்திய நால்வரில் ஒருவர்.  மடிப்பாக்கத்தில் பாரதி இயக்கம் என்று கவிஞர் மதுரபாரதியின் தலைமையில் நடந்த சமூக, இலக்கிய அமைப்பில் செயலாளராக இருந்திருக்கிறார்.. மாதமோர் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் என்று நடத்தியிருக்கிறார்கள்.

  கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக மற்றவற்றையெல்லாம் நிறுத்திக் கொண்டு, ராமாயண பாரதங்களிலும் பாரதி கம்பன் வள்ளுவனிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகக் கூறுகிறார்.  எஞ்சியிருக்கும் வாழ்நாளில் அடுத்த தலைமுறைக்கு இந்தச் செல்வங்களை எடுத்துச் செல்லும் கடமை தனக்கும் இருப்பதாக முழுமையாக நம்புபவர்..

    அண்மைக் காலமாக பொதிகை போன்ற தொலைக்காட்சியிலும் பங்கேற்று வருகிறார். ஆனந்தவிகடன் வெளியிட்ட என்சைக்ளோபீடியா பிரிடானிக்காவின் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.  மூன்று தொகுதிகளில் இரண்டாம் தொகுதியில் பெரும்பகுதியும் மற்றவற்றில் சிறு பகுதியும் இவருடைய தனிப்பட்ட பங்களிப்புகள்
    
    தன்னுடைய ராமாயண, பாரதக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் முழுமையாகவும் விரிவுபடுத்தியும் வெளியிட எண்ணம் உள்ளதாகக் கூறும் இவருடைய எண்ணம் செயல்வடிவம் கொள்ளும் இறைச் சித்தம் நிறைவேறும் காலமும் அண்மித்திருக்கிறது என்கிறார், மகிழ்ச்சியுடன்.

பல்வேறு தனித்திற்மைகளும், ஆழ்ந்த தமிழ் ஞானமும், ஆர்வமும் கொண்ட திரு.ஹரிகிருஷ்ணன் அவர்கள் நம் வல்லமையில் இணைந்து, தம் பங்களிப்புகளை வழங்க சம்மதம் தெரிவித்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியுறுகிறோம்.

ஹரிகிருஷ்ணனின் பாஞ்சாலி சபத உரை

அன்புடன்
பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “செம்மொழியாம் நம் தமிழ்மொழி!

  1. அருமையான அறிமுகம் ஹரிமுகத்திற்கு! இளைய தலைமுறையினர் பலரை தமிழ்ச்செல்வக்களஞ்சியத்திற்கு இட்டுச்செல்லும் உன்னதப்பணியாற்றும் அன்(ண்)னா(ணா)ரை சிறப்பிக்கும் விதமாக நீங்கள் எழுதி உள்ள கட்டுரை பாராட்டத்தக்கது.

  2. ஹரியண்ணா, ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு சேர ஆற்றல் படைத்த அறிஞர். கூர்மையும் நுண்மையும் கொண்ட அவரின் ஆக்கங்கள், தமிழ் அன்பர்களுக்குப் பெரிதும் துணை புரிபவை. இயன்ற வரை அவற்றைச்  சேகரித்து, நம் தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்ப்போம். தொடர்ந்து அவரின் ஆக்கங்களை வரவேற்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *