நிலவொளியில் ஒரு குளியல் – 26

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija venkateshகோடைக் காலம் தொடங்கிவிட்டது. பள்ளிகளில் விடுமுறையும் தொடங்கிவிட்டது. பெற்றோர்களும் சிறார்களும் என்ன செய்வதென்று ஒரு சேர யோசிக்கும் நேரமாக இருக்கிறது. வேலைக்குப் போகும் தாய்மார்கள் சோதனையைச் சந்திக்கும் காலமும் இதுதான். பள்ளி இருந்தாலாவது இன்ன நேரம் போவார்கள், இன்ன நேரம் வருவார்கள் என்று திட்டமிட்டுச் செயலாற்ற முடியும்.

விடுமுறை நாட்களில் மிகவும் சிறிய குழந்தைகள் என்றால், அவர்களை நம்பித் தனியாக விட்டுவிட்டும் போக முடியாது. அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லவும் முடியாது. ஒரு வகையில் இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கவே தான் கோடைக் கால வகுப்புகள் ஆரம்பித்திருக்கின்றனவோ என்னவோ? அவற்றையும் முழுமையாக நம்ப முடியவில்லை. காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மதியம் இரண்டு அல்லது மூன்று மணி வாக்கில் விட்டு விடுகிறார்கள்.

கொஞ்சம் விவரம் தெரிந்த குழந்தைகள் தானே வீடு வந்து விடும். மற்றவர்களைக் கொண்டு விட்டு, கூட்டி வர வேண்டும். வேலை பார்க்கும் தாய் ஒருவர், “ஏந்தான் சும்மர் வெகேஷன் விடுறாங்களோன்னு இருக்கு, குழந்தைங்கள தனியாவும் விட முடியாமே, கூடவும் இருக்க முடியாமே ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஒவ்வொரு வருஷமும் இதுக்கு ஏதாவது நிரந்தரத் தீர்வு காண வேணும்னு நெனக்கறது தான். ஆனா நாட்கள் எப்படியோ ஓடிடுது. வீட்டுல தனிய இருப்பாளே (னே), என்ன செய்றாளோ(னோ)? காலம் வேற கெட்டுக் கெடக்கு. என் குழந்தையை நல்லபடியாக் காப்பாத்துப்பாங்கற பிரார்த்தனையிலயே மனசு ஈடுபட்டிருக்குமே தவிர, வேலையே ஓடாது. எப்படா வீடு வந்து சேருவோம்னு இருக்கும். வருஷம் 365 நாளும் ஸ்கூல் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?” என்று அங்கலாய்த்து என் நினைவுக்கு வருகிறது.

இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில் பெண்கள் வேலைக்குப் போவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? என்று யோசித்தேன். தாத்தா, பாட்டி என்று கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்களைப் பற்றிக் கவலை இல்லை. அப்படி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அதற்குத்தான் இந்த யோசனை.

எத்தனையோ வயதான முதியவர்கள் தங்கள் வாரிசுகள் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருப்பதால் இங்கே தனியாக இருக்கிறார்கள். இவர்களுக்குப் பொருளாதாரம் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் நேரம் போவது பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாகத்தான். அவர்கள் ஏன் இந்த விடுமுறைக் காலம் மட்டும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் ஒரு துணை வீடாகச் செயல்படக் கூடாது? அக்கம் பக்கத்தவருடைய குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு அவர்களோடு விளையாடுவது, வெளி இடங்களுக்குச் செல்வது என்று ஏன் செய்யக் கூடாது?

summer camp 2011இந்தச் சேவையினால் இரு தரப்பினருமே பயனடைவார்களே! தேவையெனில் இதற்காகச் சிறு கட்டணம் வசூல் செய்துகொள்ளலாமே? தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாய், பொறுப்பானவர்கள் கையில் இருக்கிறார்கள் என்ற நிம்மதிக்காக பெற்றோர்கள் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அவை ஒன்றும் தீர்க்க முடியாதவை அல்ல. நல்ல மனமும் கொஞ்சம் பொறுமையும் இருந்தால் போதும். அந்தப் பெரியவர்கள் சமூகத்தின் மிகப் பெரிய தூணாக மதிக்கப்படுவார்கள். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும். தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஏற்ற ஒரு களமாகவும் இதயத்தை இளமையாக வைத்திருக்கும் காயகல்பமாகவும் இந்த முயற்சி இருக்கும் என்பது என் கணிப்பு.

என்னுடைய இந்தக் கருத்துக்கு நிச்சயம் எதிர்ப்புகள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் எந்தப் புது முயற்சியையுமே எதிர்ப்பின்றி நம் மக்கள் ஒப்புக்கொண்டதாகச் சரித்திரமே இல்லையே. மற்றவர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, நாங்கள் என்ன வேலைக்காரர்களா? என்ற கேள்வி, முதலில் எழும். எல்லாத் தாய்மார்களும் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள் அப்படியென்றால் அவர்கள் என்ன வேலைக்காரிகளா? குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என்பது பெருமைமிக்க, தாய்மை நிரம்பிய ஒரு பொறுப்பு.

அதனால் தான் முன்பே சொன்னேன், நல்ல பரந்த மனம் வேண்டும் என்று. அதே போல் குழந்தைகளை விடும் பெற்றோர்களுக்கும் ஒரு வார்த்தை, அந்தப் பெரியவர்கள் உங்களிடம் பணம் வாங்குகிறார்கள் என்ற காரணத்தால் அவர்களைக் கேவலமாக நினைக்கக் கூடாது. அவர்கள் இல்லாவிட்டால் உங்கள் குழந்தையின் நிலை, உங்கள் மன நிம்மதி முதலியவை என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். மொத்தத்தில் சகிப்புத்தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் இருந்தால் குழந்தைகளின் விடுமுறைக் காலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு விடலாம்.

இவற்றை எல்லாம் எழுதும் போது நான் ஆழ்வார்குறிச்சியில் கழித்த இனிமையான அந்தக் கோடைக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் முன்பே ஒரு பத்தியில் நாங்கள் யாரும் (நாங்கள் என்பது என் தோழியர் மற்றும் நான்) ஊருக்கு எங்கும் செல்ல மாட்டோம், ஆழ்வார்குறிச்சியிலேயே தான் இருப்போம் என்று கூறியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் காலை ஆகாரம் முடிந்த பிறகு வெளிக் கிளம்பினால் சரியாக மதியச் சாப்பாட்டு நேரத்திற்குத் தான் வீட்டுக்கு வருவோம். அது வரையில் என்ன செய்துகொண்டிருப்போம் என்று கேட்கிறீர்களா?

தெருவில் வீடுகளின் பின்னால் இருக்கும் ஒரு மரம் விடாமல் ஏறி இறங்கி விளையாடுவோம். புளிய மரங்களாயிருந்தால் இன்னும் விசேஷம். நன்கு பழுத்த புளியம் பழங்கள் எங்களுக்கு விருந்தாகும். மரத்தின் சொந்தக்காரர் வந்து துரத்தும் வரை கபளீகரம் செய்வோம். என் தோழியர் சிலர், முன்யோசனையோடு சில பழங்களைப் பாவாடையில் முடிந்துகொள்வார்கள். அவற்றைக் கொண்டு நொக்கட்டான் புளி அரைப்போம். அதன் சுவையை இப்போது நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது. அதன் செய்முறையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

தேவையான மற்ற பொருட்களான மிளகாய் (காய்ந்தது அல்லது பச்சை எது கிடைக்கிறதோ அது), உப்பு, வெல்லம் அல்லது கருப்பட்டி ஆகியவற்றை ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் கொண்டு வருவோம். உப்பு மட்டும் தாராளமாகச் சேர்ந்து விடும். மற்ற பொருட்கள் எங்கள் அம்மாமார்களின் உறக்கத்தைப் பொறுத்து அமையும். ஏற்கனவே மரத்திலிருந்து  எடுத்த புளிகளை தோல் நீக்கி சுத்தப்படுத்துவோம். பிறகு மற்ற பொருட்களோடு சேர்த்து ஏதாவது ஒரு கல்லில் வைத்து நன்றாக அரைப்போம். நன்கு அரைபட்ட உடன் அவற்றைச் சிறு சிறு உருண்டைகளாகச் செய்து தொடப்பக் குச்சியில், ஆம்! தொடப்பக்குச்சியில் தான் செருகி வைத்து லாலி பாப் போல சாப்பிடுவோம். அது தான் எங்களுக்குத் தெரிந்த ஒரே லாலி பாப்.

நொக்கட்டான் புளி செய்து சாப்பிட்ட விவரம் எப்படியும் வீட்டில் தெரிந்து விடும். ஏனென்றால் மறுநாள் ஏன் அன்றே கூட நாக்கு பூராவும் புண் வந்து சாப்பிட முடியாமல் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும். அம்மா கொடுக்கும் மாலை மரியாதைகளை வாயே திறக்காமல் வாங்கிக் கொள்ளுவோம். மணத்தக்காளிக் கீரை செய்து, மறு நாள் சாப்பிடச் சொல்லுவார்கள். மணத்தக்காளிக் கீரை சாப்பிட்டதால் சரியானதா? இல்லை இயல்பாகவே குணமானதா என்று தெரியாது ஆனால் உடனே குணமாகி விடும். மீண்டும் பத்து அல்லது பதினைந்து நாட்கள் கழித்து இதே கதை.

summer camp 2011மதியம் சாப்பிட்ட பிறகு வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். குறைந்தது நான்கு மணி வரை வீடு தான் சிறை எங்களுக்கு. அந்த நேரத்தில் தான் எங்கள் கை வண்ணத்தில் ஓவியங்கள் உருவாகும். சுவர்களில் காவியங்கள் பிறக்கும். ஒரு முறை நான் ஆசிய விளையாட்டுச் சின்னமாக அப்போது இருந்த அப்பு யானையை வரைந்தேன். அதைப் பார்த்துவிட்டு என் அண்ணன் “ஏன் இப்பிடி பலாப் பழமா வரையிறே?” என்று கேட்டான்.

ஒரு வழியாகச் சாயங்காலம் வரும். அது தெருவில் விளையாடும் சமயம். பாண்டி, தொட்டுப் பிடிச்சு, கண்ணாமூச்சி, தூண் பிடிச்சு என்று பலப்பல விளையாட்டுகளை நாங்களாகக் கற்பனை செய்து விளையாடுவோம். பள்ளி விடுமுறை ஆதலால் யாரும் “படிக்க வா” என்று கூப்பிட மாட்டார்கள். இப்படி ஏழு மணி வரை நீளும் எங்கள் விளையாட்டு, அவரவர் வீட்டில் உணவுக்கான அழைப்பு வரும் போது முடிந்து போகும்.

கிராமமென்பதால் இரவு உணவு (என்ன பெரிய உணவு, தண்ணீர் விட்ட சோறுதான்) முடிந்து, பெரியவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டுத் திண்ணையில் காற்றாட உட்கார்ந்துகொள்வார்கள். வயதான தாத்தாக்கள் சிலர், கட்டில் போட்டு வாசலிலேயே தூங்குவதும் உண்டு. அப்போது மீண்டும் தொடரும் எங்கள் விளையாட்டு. கல்லா? மண்ணா? அல்லது கள்ளன் போலீஸ் விளையாட்டு தான் அனேகமாக விளையாடுவோம். அப்படி ஒரு முறை கள்ளன் போலீஸ் விளையாடும் போது ஒரு சுவையான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சொல்கிறேன்.

இரவில் நாங்கள் அப்படித்தான் ஒரு முறை எங்கள் அண்ணன்மார்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அதில் நான், என் அண்ணன், ரமா, அவள் அண்ணன் இன்னும் சிலர் கள்ளர்களாக இருந்தோம். போலீஸாக இருந்த சிலர் எங்களைத் தீவிரமாகத் தேடி வந்துகொண்டிருந்தனர். எங்களுக்கு ஒளிவதற்கு இடமில்லை. யார் வீட்டுக்குள்ளும் சென்று ஒளியக் கூடாது என்பது சட்டம். நானும் என் அண்ணனும் நைசாக ஒரு வீட்டுத் திண்ணையின் கீழ் இருந்த இருண்ட நிழலில் ஒளிந்துகொண்டுவிட்டோம். மற்றவர்கள் எல்லோரும் எங்கே ஒளிந்துகொண்டனர் என்பது தெரியவில்லை. அப்போது ரமா என்று தான் நினைக்கிறேன் அவள் மாத்திரம் அல்லாடிக்கொண்டிருந்தாள்.

போலீஸ் நெருங்கி வரும் சத்தம் கேட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் ரமா பக்கத்தில் ஒரு வீட்டு வாசலில் படுத்திருந்த ஒரு தாத்தாவின் கட்டிலில் சென்று ஓசைப் படாமல் படுத்து போர்வையையும் மூடிக்கொண்டாள். அப்போது தாத்தா இயற்கை அழைப்பிற்காக வெளியில் எங்கோ சென்றிருக்க வேண்டும். எங்களுக்கானால் சிரிப்புத் தாங்கவில்லை. போலீஸார் எங்களைக் கண்டு பிடித்துவிட்டனர். நாங்கள் ரமாவின் ஒளிவு இடம் பற்றி வாயே திறக்கவில்லை.

போலீஸ் குழுவினர் ஒரு புறம் தேட, அந்தத் தாத்தா மறு புறம் திரும்பி வர, எங்களுக்குத் திகிலானது. வந்தவருக்கு கண் சரியாகத் தெரியவில்லை போலும். ஆள் படுத்திருப்பது தெரியாமல் அவர் படுக்க முற்பட, போலீஸார் தான் தேடுகிறார்கள் என்று ரமா போர்வயை இறுகப் பிடிக்க, எங்களுக்குச் சிரிப்புச் சிரித்து வயிறு புண்ணானது. தாத்தாவுக்கு யாரோ போர்வையைப் பற்றி இழுப்பது தெரிந்து அவர் கூப்பாடு போட, நாங்கள் போய்த் தாத்தாவிடம் சமாதானம் சொல்லி, ரமாவை மீட்டு வந்தோம். அதன் பிறகு அந்தத் தாத்தா எங்களுக்குச் செய்த ஆசீர்வாதங்கள், ஏழு தலைமுறைக்குப் போதும். அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பு அடக்கமாட்டாமல் வருகிறது.

இன்றைய காலச் சூழ்நிலையில் கிராமங்களில் கூட இப்படிப்பட்ட சந்தோஷங்கள் சாத்தியமில்லை. ஏனெனில் கிராமங்கள் நகரங்களின் ஒரு நீட்சியாகவே இருக்கின்றன. கோமாளித்தனங்களும் குறும்புத்தனங்களும் நிறைந்த என்னுடைய குழந்தைப் பருவம் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தோடு நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்……….

=====================================

படங்களுக்கு நன்றி: http://www.tamilspider.com, http://helpinghandsyouthctr.com

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 26

 1. The article is thought provoking; I think elderly persons can seriously think about this social service activity;

  Very different and nice article.

 2. Very nice article madam. Thanks for telling us the procedure of making nokkattanpuli. The incident was also very funny. Keep it up madam.

 3. வெகு அருமை. நாங்கள் விளையாடின நாட்கள் நினைவுக்கு வருகின்றன. புளிச் சட்னி எல்லா ஊரிலும் இருந்திருக்கிறது:)

  தெருவிளையாட்டு இப்போ ஏது? அபார்ட்மென்ட் விளையாட்டு உண்டு. இங்கே பேத்தி ஈஸ்டர் விடுமுறையில், எங்கேயும் போக முடியாமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறாள். நாங்கள்தான் அவளுக்குத் தோழர்கள்.

 4. Summer Camp is only an extension of school rot. daycare of children by elders is available in countries like US. A good suggestion to take up. If I have a time machine………

 5. Very nice. Now-a-days spending time with children during summer vacation is rare especially for working women. I like this article very much.

  Thank you

  Srirangam Saradhasridharan

 6. கட்டுரை மிகவும் அருமை. தற்போது லீவு கிடைப்பது மிகவும் அரிது. அப்படி கிடைத்தாலும் குடும்பத்துடன் செலவு செய்யப் போதுமானதாக இல்லை. போலீஸ் – திருடன் விளையாட்டு மிகவும் அருமை. நல்ல நகைச்சுவை.

  நன்றி

  திருச்சி ஸ்ரீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.