இளம் பிராயம் தேடி…….

3

கேப்டன் கணேஷ்

Captain Ganesh“என்ன தம்பி……….  ஆரைப் பாக்கோணும்……..?” கொங்கு மணம் கமழ, தமிழ் வழிந்தது அந்தப் பாட்டியிடம்.  சுமார் எழுபது வயது இருக்கும் அவருக்கு.

“பாட்டி நாங்க இங்க தான்……..   அடுத்த ரெண்டு தெரு தள்ளி குடியிருந்தோம்! எங்க வாத்தியார் என்னோட சில பிரண்ட்ஸ் எல்லாம் இந்தத் தெருவில் தான் வீடு. அதான் பார்த்துட்டு போகலாம்னு…………….!” என இழுத்தேன் நான்.

“ஆருன்னு தெரியலியே……….!”  நெற்றியில் கை வைத்து, கண்கள் சுருக்கிச் சற்றே சிரமத்துடன் பார்த்தார் அந்த மூதாட்டி.

“பாட்டி, என்னை உங்களுக்குத் தெரியாது. நாங்க காலி பண்ணி போய் இருவது வருசமாச்சி!” என்றேன்.

ஆம்!  நான் இருபது வருடம் கழித்து மீண்டும் என் சிறு பிராயத்து வசிப்பிடம் சென்றிருந்தேன் என் பழைய இளம் பள்ளிப் பிராய நண்பர்களைத் தேடி. இடம்:  இராமநாதபுரம், கோவை. எனக்கு இன்றைக்கும் பசுமையாய் நினைவில் நிற்கிறது அந்த இடமும் அருகே இருந்த நான் படித்த தொடக்கப் பள்ளியும்.

“பாட்டி இங்கே செல்வம்னு ஒருத்தர் இருந்தார். அவரு இங்கே தான் பக்கத்து ஸ்கூல்லே வாத்தியாரா இருந்தாரு……….!” இது நான்.

“கருத்தவரா………..?” இது பாட்டி.

“ஆமா பாட்டி.  இங்கே தான் அவர் வீடு இருந்துச்சு. ஆனா இப்போ அடையாளம் தெரியல” என்றேன்.

பாட்டி என்னவோ வயதானவர் தான். ஆனால் மிகத் தெளிவாய் இருந்தார். ஒரு மளிகை கடையை அதே தெருவில் வைத்திருந்தார். நீண்ட நாட்கள் அதே இடத்தில் வாழ்ந்ததால் தெருவாசிகளைப் பற்றிய விவரங்கள் அவரின் விரல் நுனிகளில்.

அந்த ஆசிரியர் வீடு காலி செய்து விட்டு, வேறிடம் சென்று விட்டதாயும், அவரின் தம்பி ஒருவர் அதே தெருவில் இருப்பதாயும், ஆனால் அவர் சற்றே மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவரிடம் விசாரிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அந்த மூதாட்டி சொன்னார்.

என் நண்பர்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தேன்.

“பாட்டி சதீசு, கந்தவேல், மோகன்ராஜ், சசி குமார்னு ஒரு நாலு, ஐஞ்சு பேர் இருந்தாங்க………. பசங்க! இப்போ என் வயசு இருக்கும்.”

“மோகன்ராசு………..  அட நம்ம பொட்டுக்கார நாய்க்கர் பேரன்………! அவிக அப்பன் ஊட்ட வித்துட்டு மெட்ராசு போய்ட்டாங்கோ!”
மதராசு என்ற பெயர் சென்னை ஆகி, பல வருடங்கள் கடந்த போதும் பாட்டி இப்போதும் “மெட்ராசு” என்றார்.

school

“பாட்டி சசிகுமாருன்னு ஒரு பையன், அவங்க சித்தப்பா கூட சைக்கிள் கட வெச்சிருந்தாரு!…….  மணியந் தேட்டர் பக்கம்” எனக்கு நினைவில் இருந்ததைக் கேட்டேன்.  இருபது வருடங்கள் முன்பு, காலை ஆறு மணி சுமாருக்கு, ஓட்டத் தெரியாத வயதில் சைக்கிளை விடக் குள்ளமான சசிகுமார், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடி, கடையில் விட்டு, மீண்டும் மற்றொரு சைக்கிளை எடுக்க, வீடு நோக்கி ஒடுவான். இவன் இப்படி தன் சித்தப்பாவிற்கு உதவுவதைப் பல நாட்கள் பார்த்து இருக்கிறேன்.

“அவிகளும் இப்போ இங்கே இல்லியே!” என்றார் பாட்டி. அணைவருமே வேலையாக வேற்றூர் சென்று விட்டதாயும் சசி குமாரின் அத்தை குடும்பம் மட்டும் அதே தெருவில் வசிப்பதாயும் எனக்குச் சொன்னார் பாட்டி.

அந்த அத்தையைப் பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை. என்னை யார் என்று தெரியாமல் சில வினாடி தடுமாறினார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் என்னை வீட்டின் முன் அறையில், இருக்கையில் அமர்த்தி, தேநீர் கொடுத்தார்.

பின்னர் மெல்ல ஆரம்பித்தார் “தம்பி, சசி (என் நண்பன்) வேலை கெடச்சு இப்போ பம்பாய்லே இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு மிந்தி கலியாணம் முறிச்சான்!”.

கல்யாணம் முடித்தான் என்பதைக் கலியாணம் முறித்தான் என்பது கொங்கு வழக்கு. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

“கோயல் தேருக்கு வருவாங்க! அப்போ கண்டிஷனா சொல்றேன்” அதாவது கோவில் விழாவிற்கு வத்தால் சசி குமாரிடம் என்னைப் பற்றிக் கட்டாயம் சொல்வதாய் அவர் மொழியில் சொன்னார். அமைதியாய் விடை பெற்றேன், அவரிடம் இருந்து.

மீண்டும் அதே பாட்டியைச் சந்தித்தேன்.

“பாட்டி ரொம்ப நன்றி! நான் போய்ட்டு வாரனுங்க!” என்றவாறு கை கூப்பினேன்.

“தம்பி உங்க ஸ்கூலிலே போய்க் கேட்டுப் பாரு, வாத்தியாரு பத்தி ஏதாவுது வெவரம் தெரியும்!” என்றார்.

நல்ல யோசனையாய்ப் பட்டது எனக்கு. பக்கத்திலே அரை கிலோ மீட்டர் துரத்தில் இருந்த பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தேன்.

நாங்கள் செல்லும் வழியில் பள்ளி வளாகத்திற்கு வெளியே ஒரு ஐம்பது அடி சாலை. அதைத் தாண்டி மாநகராட்சியின் ஒரு குப்பை மண்டி.  லாரிகள் காலையும் மாலையும் வந்து குப்பைகளை அங்கே கொட்டிவிட்டுப் போகும். குப்பை இன்றும் அப்படியே இருந்தது. பதினைந்து அடி உயரக் குன்றுகளாய் ஒரு நூறு குன்றுகள் இருக்கும். பள்ளி செல்லும் வயதில் ஒன்றும் தெரியவில்லை.

ஆனால் இன்று கேள்வி வந்தது, ‘இவ்வளவு குப்பையைப் பள்ளியின் அருகில் கொட்டினால் குழந்தைகளுக்கு எவ்வளவு சுகாதாரக் கேடு!’.

குப்பைக் கிடங்கைப் பார்த்துக்கொண்டே, பலதையும் யோசித்துக்கொண்டே கடந்து சென்றேன்.

குப்பை மேடு மாறாமல் இருக்கிறதே!  என் பள்ளியும் அப்படியேதான் இருக்கும் என்று நினைத்துப் பள்ளி நோக்கிச் சென்றேன்.

tamilnadu school

அது ஒரு மாநகராட்சிப் பள்ளி. பள்ளி இருந்தது. பள்ளி அமைதியாய் இருந்தது. மாணவர்களின் சத்தம் கூட இல்லை. ஓடுகள், காங்க்ரீட் கூரையாய் மாறியிருந்தன. பள்ளி வளாகத்தின் மையத்தில் இருந்த அடர்ந்த புளிய மரம், அதைக் காணவில்லை. ஒற்றைப் புளியம் பழத்திற்காய் யாரோ மரத்தின் மீது கல் எறிந்து, அது கீழே விளையாடிய என் நண்பன் தலையில் பட்டு இரத்தம் வழிந்தது, ஞாபகம் வந்தது.

வகுப்பில் கூடப் படித்த தோழன், தோழியர் நினைவுக்கு வந்தனர். சிவக்குமார், இளவழகன், பிரபு, வெள்ளியங்கிரி, பாபு, கிருஷ்ண குமார், ராஜாராம், ஸ்ரீதர் என்று சில நண்பர்களும், சுமதி, காயத்திரி, மாலதி, சுகுணா, சிந்து, ஷகிலா பானு என்று சில தோழியரும் நினைவுக்கு வந்தனர்.  இப்போது எங்கு இருக்கிறார்களோ? என்ன செய்கிறார்களோ?

பள்ளிக்கு வெளியே சாலையோரம் குச்சி மிட்டாய், கம்மர்கட், கடலை உருண்டை, வேக வைத்த மரவள்ளி மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஜவ்வு மிட்டாய், சீனிப் புளியங்காய் முதலியன விற்கும் கடைகளும் அவற்றின் வியாபாரிகளும் என் கண்களில் நிழலாடினார்கள். சில ஐஸ் வண்டிக்காரர்களும் அவர்களின் குச்சி ஐஸ் நிறைந்த மரப் பெட்டிகளும் நினைவுக்கு வந்தன. ஒருவர் மட்டும் தான் சைக்கிளில் வருவார். மற்ற இருவரும் தள்ளுவண்டி தான்!  இன்றைப் போல் மூன்று சக்கர வண்டிகள் அன்று இல்லை. குச்சி ஐஸ் பல நிறங்களில் இருக்கும். நீலம், சிவப்பு, ஆரஞ்சு, கரும் பழுப்பு (திராட்சை) எனச் சில பல வண்ணங்களில். சிலது வெண்மையாய். அது பால் ஐஸ்! சிலது தலையில் சேமியா கிரீடத்துடன். அது சேமியா ஐஸ்! பல நேரங்களில் குச்சி ஐஸ் உருகும் வேகம், நாங்கள் அதைச் சாப்பிடும் வேகத்தை விட அதிகமாய் இருக்கும். உருகிய ஐஸ் வண்ண நீராய் கை விரல்களில் வழிந்து முழங்கை வரை பயணிக்கும். சில துளிகள் வெள்ளை சீருடைச் சட்டையில் பட்டு மாலையில் அம்மாவிடம் திட்டு வாங்கியதும் நினைவுக்கு வந்தது.

வாட்ச் மிட்டாய்சில நாட்களில் பொம்மை ஜவ்வு மிட்டாய்க்காரர், தனது பொம்மையுடன் நிற்பார். ஒரு வாழைத் தண்டை விடச் சற்றே தடிமனான மூங்கில் கழி.  அதன் தலையில் ஒரு பொம்மை. பொம்மை இடுப்பு வரை மட்டுமே இருக்கும். பொம்மையின் காலாக மூங்கில் கழி. பொம்மையின் தலையில் சில சமயம் குழந்தைகள் அணியும் வண்ண, வட்டத் தொப்பி இருக்கும். சில சமயங்களில் பொம்மையின் முடி பொன் நிறத்தில் அலை அலையாய் காற்றில் ஆடிக்கொண்டும் இருக்கும். பொம்மையின் கைகளில் சில சிலம்புகள், சலங்கைகள். இடுப்பு இருக்க வேண்டிய இடத்தில் சிறு சிறு மணிகள் கோர்த்த கயிறு இருக்கும். பொம்மையின் இடுப்பும் மூங்கில் கழியும் இணையும் இடத்தில் ஒரு தடிமனான ஜவ்வு மிட்டாய் பட்டை, அதில் இரண்டு அல்லது மூன்று நிறங்கள். மிட்டாயை ஒரு பிளாஸ்டிக் காகிதத்தால் மூடியிருப்பார்.

வாட்ச் மிட்டாய்மிட்டாய்க்காரர் மறைந்து இருக்கும் கயிற்றை இழுத்து, பொம்மையைக் கை தட்ட வைப்பதை நாங்கள் சுற்றி நின்று ஆச்சரியமாய்ப் பார்ப்போம்! அடுத்த ஆச்சரியம், அந்த ஜவ்வு மிட்டாயைக் கொண்டு அவர் கையால் செய்யும் வடிவங்கள். கடிகாரம்,  இரயில் எஞ்சின், மயில் என அவரின் கற்பனைக்கு ஏற்றவாறும் நாங்கள் கொடுக்கும் காசுகளுக்கு ஏற்பவும் இருக்கும். ஒரு சாதாரண கடிகாரம், விலை பத்து பைசா. இவ்வாறு அவர் செய்த மிட்டாய் பொம்மைகள் எங்கள் மணிக்கட்டை அலங்கரிக்கும். வெயிலில் மிட்டாய் உருகும் வரை அந்தப் பொம்மையை நண்பர்கள் அனைவருக்கும் பெருமையாய்க் காட்டுவோம். அதன் பிறகு மிட்டாயின் இனிப்பும் எங்களின் வியர்வை உவர்ப்பும் கலந்த அந்தச் சுவையை அனுபவித்தவாறே மிட்டாயை மெல்லச் சுவைப்போம்!

நடு விளையாட்டுத் திடலில் நின்று, திரும்பி, பள்ளியின் நுழைவு வாயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மனத்தில் என்னென்னவோ பழைய நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன.

“ஆரைப் பாக்கோணும் சார்…….?”  பின்னால் குரல் கேட்டுத் திரும்பினேன். காக்கி உடை அணிந்த பள்ளி ஊழியர் ஒருவர் நின்று இருந்தார்.

“நானுங்க……..  இந்த ஸ்கூல் ஓல்டு ஸ்டூடண்டு…………..  சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு……….” என்று இழுத்தேன்.

“அப்பிடியா………? முழுப் பரிச்சை நடக்குது. போய் எட்மாஸ்டரை பாருங்க” என்றார். பள்ளி அமைதியாய் இருந்த காரணம் விளங்கியது.

தலைமை ஆசிரியர், அவரின் அறையில் இருந்தார். வெளிச் சுவரில் இருந்த பலகை, அவரின் பெயரையும் அது தலைமை ஆசிரியர் அறை என்றும் அறிவித்தது. அறையின் உள்ளே நுழைந்தேன். “க்றீச் க்றீச்” என்ற மெல்லிய ஓசையுடன் தலைக்கு மேல் மின் விசிறி. மேசை நிறைய மற்ற ஆசிரியர்கள் ஒப்படைத்த பாடத் திட்டம் என்று எழுதப்பட்ட நோட்டுப் புத்தகங்கள். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். அவருக்கு மிக்க மகிழ்ச்சி.

“இத்தனை வருஷம் கழிச்சு வந்த்து இருக்கீங்க. சந்தோஷமாய் இருக்கு. இப்போல்லாம் இந்த மாறி ஆரும் இல்ல சார்” என்றார்.

வயதில் மூத்த ஆசிரியார் ஒருவர், அதுவும் நான் பயத்துடனும் மரியாதையுடனும் பார்த்த ஒரு இருக்கையில் இருப்பவர் என்னை, “சார்” என்று அழைத்ததில், நான் கூச்சத்தில் நெளிந்தேன். ஆசிரியர் அனைவரும் மாறியிருந்தனர். பலர் மாற்றலில் சென்றதாயும், சிலர் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் எனக்குச் சொன்னார் அந்தத் தலைமை ஆசிரியர்.

அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது விளையாட்டுத் திடலின் மண் மட்டுமே! மணல், மண், சிறு சிறு கற்கள், சில பல கூழாங்கற்கள் கலந்த ஒரு கலவை அது. நடு விளையாட்டுத் திடலில், மெல்ல கீழே குனிந்து மண்ணில் விரல்களை நுழைத்து ஆசையுடன் அளைந்தேன். மதிய உச்சி வெயிலில் சூடாய்த் தகித்த மண் எனக்கு இதமாய் இருந்தது. கை விரல்களில் புழுதியுடனும் மனத்தில் கனத்துடனும் விழிகளில் ஈரத்துடனும் அமைதியாய்த் திரும்பி நடந்தேன்.

“மீண்டும் எப்போது வருவாய்?” என, தன் மௌன மொழியில் கேட்டபடி, என் பின்னால் நின்றது என் பள்ளிக்கூடம்.

=============================================

படங்களுக்கு நன்றி – http://www.flickr.com/photos/engelus,

http://indiasudar.wordpress.com, http://nandhu-yazh.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இளம் பிராயம் தேடி…….

  1. மனதை நெகிழ வைத்த நினைவலைகள். சிறு வயது பள்ளி நினைவுகள் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு பசுமையான நினைவுகள். அதை அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  2. really cool !!!! one can one again feel their school days !!! especially about the kongu tamil is excellent proud coimbatore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *