நிலவொளியில் ஒரு குளியல் – 30

5

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija venkateshபள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்த நிலையில் புத்தகப் பைகள், சாப்பாடு டப்பாக்கள் முதலிய பொருட்கள் வாங்குவதில் முனைந்திருப்பீர்கள். இந்தக் கல்வியாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி இல்லை  என்ற செய்தியோடு தொடங்குகிறது. கல்வி முறை எதுவாக இருந்தாலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அடி வாங்காமல், பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமே என்பது தான் என் கவலையெல்லாம்.

கல்வியாண்டு தொடங்கி சில மாதங்களுக்கெல்லாம் செய்தித் தாள்களில் வரும் சில செய்திகள், என்னை நடுநடுங்க வைத்திருக்கின்றன. உதாரணமாக ஆசிரியை மூர்க்கமாக அடித்ததால் பள்ளி மாணவி சாவு, கடுமையான வெயிலில் தண்ணீர் கூட இல்லாமல் தண்டனைக்காக நிற்க வைத்த மாணவன் உடல் நிலை கவலைக்கிடம் போன்ற செய்திகள் வெளியாவது ஒரு பக்கம் என்றால், பள்ளி மாணவிகள் ஆசிரியர்களாலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது இன்னொரு புறம்.

குழந்தைகளை நாம் ஆசிரியர்களை நம்பியே பள்ளிக்கு அனுப்புகிறோம். அப்படி இருக்கும் போது வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒரு சில ஆசிரியர்களின் இந்தப் போக்கால் நமக்கு ஆசிரியர்கள் மேலேயே ஒரு அவநம்பிக்கை தோன்றுகிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் கடமை உணர்வு உடையவர்களாக இருந்தும் வெகு சிலர் தவறு செய்வதால் நேரும் அவல நிலை இது.

தெய்வத்திற்கும் முந்தைய ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படும் ஆசிரியர்கள் ஏன் இப்படி கடுமையான தண்டனை கொடுக்கத் துணிகிறார்கள்? தங்கள் குழந்தைகளாக மதிக்க வேண்டிய மாணவர்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க எது தூண்டுதலாக அமைகிறது? என்பது போன்ற கேள்வியெல்லாம் பதிலில்லாமல் இருக்கின்றன. தனி மனித மன வக்கிரத்தின் வெளிப்பாடு இது என்று வேண்டுமானால் சொல்லலாம். இது குறித்து ஆராயப் புகுந்தோமானால் சமூகவியலில் ஒரு முனைவர் பட்டமே வாங்கி விடலாம் என்று சொல்லும் அளவுக்குக் கலாசார, குடும்ப, சமூகக் காரணங்கள் உள்ளன. அதில் இறங்க எனக்கு விருப்பமில்லாததால் மேலே தொடர்கிறேன்.

Right to Educationஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் பெரும்பாலும் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குகிறார்கள். அப்படியென்றால் தனியார் பளளிகளில் தண்டனைகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. அங்கே பெற்றோர்களின் குரல் சற்று ஓங்கியிருக்கிறது. தனியார் பள்ளிகளைப் போறுத்தவரை அவற்றைப் பள்ளிகள் என்று சொல்வதை விட கல்விக் கடைகள் என்று சொல்வது ஆகப் பொருத்தம். கடைகளின் நோக்கம், நுகர்வோர் திருப்தி. பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் நன்றாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்ற திருப்தி ஏற்படுத்துவது ஒன்றே அவர்கள் நோக்கம். மற்றொரு நோக்கம், வியாபார வளர்ச்சி. அதற்குத் தேவை, பள்ளியின் தேர்ச்சி விகிதாச்சாரம் (pass percentage).

பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி வேண்டும் என்பதற்காகப் படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு மாற்றல் சான்றிதழ் (TC) கொடுத்து வெளியேற்றும் அவலங்களும் தனியார் பள்ளிகளில் நேராமல் இல்லை. ஆனால் நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஊக்குவிப்பும் கவனிப்பும் மிக அதிகமாகக் கிடைக்கிறது. நுகர்வோர் பயத்தால் தண்டனைகளும் குறைகின்றன. ஏனென்றால் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்தால் தானே அடுத்த ஆண்டு வியாபாரம் மேலும் பெருகும்?

அரசுப் பள்ளிகளின் நிலை வேறு. பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளோரும் தான் தன் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். அவர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கை, பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாம் ஆசிரியர்களை நம்பியே ஒப்படைக்கப்படுகின்றன. எந்த அளவுக்கு அவர்கள் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிறார்கள்? கடந்த பத்தாண்டுகளில் எத்தனை குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்துச் சாதனை படைத்திருக்கின்றனர்? அரசு உதவி பெறும் பள்ளிகளை இதில் சேர்க்க முடியாது. ஏனென்றால் அவையும் கிட்டத்தட்ட தனியார் பள்ளி போலவே தான் இயங்கி வருகின்றன.

equal educationஆசிரியர்கள் சம்பளம் குறைவு என்ற காரணத்தைக் காட்டி, அவர்களின் அக்கறையின்மையை நியாயப்படுத்த முடியாது. மற்ற எல்லத் துறையினருக்கும் நிகரான சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆசிரியப் பணியில் சேர்வதற்கான ஆர்வம் அதிகரித்திருக்கிறது என்பதற்குப் பெருகி வரும் கல்வியியல் கல்லூரிகளே சான்று. அப்படியிருக்க ஆசிரியர்களின் மன நிலையில் ஏன் இந்த மாற்றம்? ஏன் இத்தனை வன்முறை?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் போது என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் நினைவில் வந்து போகிறார்கள். அப்போது சம்பளம் குறைவாக இருந்தாலும் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தனர். எங்கள் கிராமத்தில் ஆசிரியர்களுக்கு என்று ஒரு மரியாதையான இடம் இருந்தது. அவர்களிடம் படிப்பு சம்பந்தமாக மட்டுமல்லாமல் வேறு சில விஷயங்களிலும் அறிவுரை கேட்க மக்கள் வந்தனர்.

கல்வியின் மதிப்புத் தெரிந்த படிக்காத பெற்றோர், தன் குழந்தைகளைப் பற்றி ஆசிரியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்கள். ஆசிரியர்களும் தங்களால் இயன்ற அளவு அறிவுரை கூறி, மாணவர்களைப் படிப்பில் ஈடுபடுத்த முயல்வார்கள். அப்போதும் அடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் அந்த அடிகள் அவர்களைத் திருத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்தனவே அன்றி, இது போன்ற மன வக்கிரங்களால் அல்ல.

ஒரு வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் இருபது பேர் இருந்தால், படிப்பில் கீழ் நிலையில் உள்ளவர்கள் சுமார் நாற்பது பேர் இருந்தார்கள். ஆசிரியர்களின் கவனமெல்லாம் இந்தச் சரியாகப் படிக்காத நாற்பது பேர் மேல் இருந்ததே அன்றி, நன்றாகப் படிப்பவர்கள் மேல் மட்டும் இருந்தது இல்லை. எங்கள் கிராமத்து ஏழைக் குடியானவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பெற்றோர், ஆசிரியர்களை நேரில் பார்த்து, அவர்கள் மகன் / மகள்  சரியாகப் படிக்கவில்லை என்றால் நன்றாக அடிக்கும்படி கேட்டுக்கொண்ட நிகழ்வுகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஆசிரியர்களால் மாணவிகளே பாலியல் கொடுமைக்கு ஆளாவது என்பதெல்லாம் யாருக்கும் கனவில் கூடத் தெரியாத தோன்றாத சமாச்சாரம்.

இப்போது உள்ளது போல் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சந்திப்பதற்கென்று நாளெல்லாம் அப்போது குறிக்கப்பட்டது இல்லை. என்று வேண்டுமானாலும் ஆசிரியரைச் சந்திக்கலாம் என்ற முறை இருந்தது. ஆசிரியர்களும் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லி, உற்சாகப்படுத்தி அனுப்புவார்கள். ஆசிரியர்களின் வார்த்தைகள் மேல் மற்றவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

சமச்சீர் கல்விஅரசுப் பள்ளிகளில் பெற்றோர்களை மதிப்பதே கிடையாது. அப்படியிருக்க அவர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுமை யாருக்கு இருக்கிறது? தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை அதிகம் கேள்வி கேட்கும் பெற்றோரின் மகன் / மகள் தனியாக நடத்தப்படுவான் / ள். அதற்குப் பயந்து குழந்தைகள் பிரச்சனைகளைத் தங்கள் பெற்றோர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயங்குகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மாற்றாகத்தான் சமச்சீர்க் கல்வித் திட்டம் என்று சொல்லப்பட்டது.

மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் கொண்டு வந்தது மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கை தான். ஆனால் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியும் ஊக்குவிப்பும் இல்லாமல் அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியாது. சமச்சீர்க் கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரை எல்லாமே ஏதோ அவசரத்தில் நடந்தது போல் தோன்றுகிறது. எந்த ஒரு புதிய திட்டமும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமே தவிர, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒரு வருடம், மறு வருடமே இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்வது அவசரத்தைத்தான் காட்டுகிறது.

சமச்சீர்ப் பாடத் திட்டத்தில் உயர் வகுப்புகளுக்கு செய்முறைப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விஷயம். ஆனால் ஆழ்ந்து பார்க்கும் போது எத்தனை பள்ளிகளில் அதற்கான அடிப்படை வசதிகளும் வேதிப் பொருட்களும் இருக்கின்றன? இவை இல்லாமல் வெறுமே செய்முறைப் பயிற்சியை மனப்பாடம் செய்து எழுதுவதால் என்ன பயன்? இவற்றையெல்லாம் ஆராய ஒரு குழுவை ஏற்படுத்தாமல், சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல், ஏற்கனவே இருந்து வரும் குறைகளை நீக்காமல், சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் அர்த்தம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

பல்வேறு காரணங்களால் சமச்சீர்க் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று இன்றைய அரசு முடிவெடுத்துள்ளது. நல்ல வேளை இந்த ஆண்டு மட்டும் நடைமுறைப்படுத்திவிட்டு பிறகு யோசிக்காலாம் என்ற முடிவெடுத்து இந்த ஆண்டு மாணவர்களைப் பரிசோதனை எலிகளாக ஆக்கவில்லை. அந்த மட்டில் இது நல்ல முடிவுதான். ஆனால் அடுத்த ஆண்டு அரசின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த ஒரு வருட கால அவகாசத்தை முறையான கண்டறிதலிலும் ஆராய்ச்சியிலும் செலவிட்டு, ஒரு நல்ல பாடத் திட்டத்தை இந்த அரசு தரும் என்று எதிர்பார்க்கிறேன்.

classroomஆனால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டு இல்லாததால், ஏற்கெனவே அதற்கென அச்சிடப்பட்ட புத்தகங்கள் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவை இலவசமாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது அவை பயனின்றிக் கிடக்கின்றன. அவற்றின் மதிப்பாகச் சொல்லப்படும் தொகை, கோடிகளை எட்டுகிறது. இந்த நஷ்டம் எப்படி சமாளிக்கப்படும்? சரி அது போகட்டும். இப்போது பழைய பாடத்திட்டத்திலேயே புத்தகங்கள் அச்சிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அரசின் அவசரத்தை மனத்தில் கொண்டு அச்சகங்கள் விலையை இரு மடங்காக உயர்த்த உத்தேசிப்பதாகச் சொல்லுகிறார்கள். அது மற்றொரு நஷ்டம். இதற்கெல்லாம் செலவிடப்படும் பணம் வரி ரூபத்தில் நாம் கொடுக்கும் பணம்தானே? பண நஷ்டம் தவிர, எத்தனை மரங்கள் அந்தப் புத்தகங்களைத் தயாரிப்பதற்காக வெட்டப்பட்டிருக்கும்? அதை யார் சரி செய்வார்கள்?

இதற்கெல்லாம் காரணம், நம்மை ஆள்பவர்களின் சுயதம்பட்ட ஆசை, சுய கௌரவம், பேராசை ஆகியவைதான். எந்தத் திட்டத்தை முந்தைய அரசு கொண்டு வந்ததோ அதை இல்லையென்றாக்குவது அடுத்த ஆளும் கட்சியின் வழக்கம் என்றாகிவிட்டது. இதற்கு யாரும் விதி விலக்கல்ல. இவர்களுடைய நீயா? நானா? போட்டியில் நஷ்டமாவது நம் பணமும் நம் சுற்றுச் சூழலும்தான். நம்மை ஆளும் எந்தக் கட்சிக்கும் பரந்த மனப்பான்மை இல்லை. அதை வளர்த்துக்கொள்ளாதவரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்.

சாதாரண பாடத் திட்டத்திலேயே நம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களைத் தனிப் பாடம் படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்பது பரவலான குற்றச்சாற்று. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனிப் பாடம் எடுக்கக் கூடாது என்று அரசாணை சொல்கிறது. ஆனால் தனிப் பாடம் எடுக்காத ஆசிரியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி தன்னிடம் தனிப் பாடம் படிக்க வராத பிள்ளைகள் மேல் அவர்கள் தங்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள். இவற்றையெல்லாம் சரிப்படுத்தாமல் சமச்சீர்க் கல்வி முறையைக் கொண்டு வந்து பயனில்லை. தனிப் பாடம் எடுப்பதில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் சளைத்தவர்கள் இல்லை. அவர்கள் வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் கையெழுத்துப் போடுவது ஒரு தொகை, கையில் சம்பளமாக வாங்குவது ஒரு தொகை. அங்காவது பரவாயில்லை. ஓரளவு வசதியானவர்கள் தான் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்குத் தனிப் பாடம், பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப் பெரிய சிரமம் இருப்பதில்லை.

classroomஅரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கையில்லாத, வசதி குறைந்த பெற்றோர், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். ஏற்கெனவே கல்விக் கட்டணம், உடை, புத்தகம், நோட்டு என்று மிக அதிகமாகச் செலவு செய்ய நேர்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நம் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு படிக்க வைக்கின்றனர். அத்தகைய பெற்றோர்களை அரசுப் பள்ளிகளின் பக்கம் ஈர்க்கும் விதமாக அமைந்த திட்டமே சமச்சீர்க் கல்வித் திட்டம் என்று கொண்டால், அதன் நோக்கத்தில் எவ்வளவு தூரம் வெற்றி கிடைக்கும்?

ஏற்கெனவே தனிப் பாடம் எடுப்பதைக் கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டால், என்ன நடக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு விடை அளித்து விட்டுத்தான் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்பு சொன்னது போல் இந்தக் கால அவகாசத்தை முறையான ஒரு குழு அமைத்து இன்றைய நிலை மற்றும் நாளைய எதிர்பார்ப்பு ஆகியவற்றைக் கண்டறிவதில் செலவிடலாம்.

வெளி மாநிலங்களில் தமிழகத்தின் கல்வித் தரத்தின் மேல் ஒரு உயர்ந்த மரியாதை இருக்கிறது. இது கடந்த முப்பதாண்டுகளாகச் சம்பாதித்த நல்ல பெயர். இனிமேலும் இந்தப் பெயர் நீடிக்க வேண்டுமானால் ஆசிரியர்களின் மனநிலையையும்  மாணவர்களின் மனநிலையையும் மற்றும் பெற்றோர்களின் மனநிலையும் கண்டறியப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை அரசு உடனே எடுக்க வேண்டும்.

அர்ப்பணிப்பு உணர்வும் மாணவர்களைத் தன் குழந்தைகள் போல் கருதும் ஆசிரியர்களும் இன்னும் நிறையத் தோன்ற வேண்டும் அதே சமயம் ஆசிரியர்களைத் தெய்வமாக மதிக்கும் மாணவர்களும் நிறையத் தோன்ற வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இந்தப் பத்தியை முடிக்கிறேன்.

கடந்த 30 வாரங்களாக உங்களோடு என் கருத்துகளையும் என் பள்ளி நாள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டேன். உங்களில் பலர் , என்னை ஊக்குவிக்கும் முகமாக பின்னூட்டங்கள் அனுப்பி என்னைக் கௌரவித்தீர்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு அளித்த ஆசிரியர் அண்ணா கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நிலவொளியில் ஒரு குளியல் என்ற இந்தப் பத்தியை இந்த வாரத்தோடு நிறைவு செய்கிறேன். ஆனால் வல்லமையில் வேறு தலைப்புளில் என் படைப்புகள் கண்டிப்பாகத் தொடர்ந்து இடம் பெறும்.

என் மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு இரு கை கூப்பி, நன்றி சொல்லி, நிலவொளியில் ஒரு குளியல்.

(நிறைந்தது)

==========================================

படங்களுக்கு நன்றி: http://portal.unesco.org, http://www.tamilveli.com, http://challenge-global.wikispaces.com, http://satyawan005.blogspot.com, http://www.iimtpune.com

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 30

  1. Very nice article . Teachers are like a role model for students. If Teachers torture their students, the students who may become teachers in the future will do the same. Thank you for sharing your point of view with us for 30 weeks. I will definitely miss this column. Please continue writing in Vallamai. ALL THE BEST.

  2. பயனுள்ள கட்டுரை இது. இன்றைய குழந்தைகள், நாளைய தேசத் தலைவர்கள். இதற்கு ஆசிரியப் பணி, மிகவும் முக்கியம். தற்போது கல்வி என்பது வியாபாரமாக ஆகிவிட்டது. இதற்குக் காரணம், அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கையில்லாத மற்றும் வசதி குறைந்த பெற்றோர், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அரசுக்கு இதைப் பற்றி அக்கறை இல்லை. குறை நம்மிடம் தான் உள்ளது. அதை நீக்க வேண்டும்.

    தங்களின் படைப்புகள் மேலும் தொடர என் வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன்
    திருச்சி ஸ்ரீதரன்

  3. Very good article. Teachers are not only a role model for the students they are like friend, philosopher and guide. Teachers are like CANDLE. They shine the student to become good professional like a doctor,engineer even as scientist.

    Thank you

    Srirangam Saradha Sridharan

  4. Whenever there is change of guard in the govt. the first causulty is education.That has happened again. Samacheer kalvi is a better solution to bring all under one board and administer in a better way. In all other states there is only one board under state govt.

    More articles on school education are welcome.Timely article worth thinking and discussing among stakeholders of school education.

    o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *