குறவன் பாட்டு – 5
சச்சிதானந்தம்
காட்டுப் பன்றிகளும் முரட்டுக் குறவனும்
கால்கள் சிறுத்து முகமது நீண்ட,
காட்டுப் பன்றிக் கூட்டம் ஓன்று,
சுத்தியில் தலையின் வடிவுடை மூக்கால்,
குத்திப் பெயர்த்தன நிலத்தடிக் கிழங்கை! 39
பூண்டும் புழுவும் வேரும் கிழங்கும்,
கூம்பிய முகம்கொண்ட பன்றியின் உணவுகள்!
தோண்டும் நிலத்தைக் கூம்பிய மூக்கால்,
வேண்டும் உணவை நுகரும் வரை! 40
கறுநொச்சி இலைபோல உடல் எங்கும்,
வரிகொண்ட புலி ஓன்று பதுங்கி,
கறுத்தி ருக்கும் உடல் கொண்ட,
காட்டுப் பன்றிக் கூட்டத்தில் பாய்ந்தது! 41
காத்துத் தன்னுயிர் ஓம்பிக் கொள்ள
காக்கும் கடவுளை மனதில் வேண்டி,
காற்றில் வாலைக் கொடிபோல் உயர்த்தி
காட்டுப் பன்றிகள் ஓட்டம் பிடித்தன! 42
புலியைத் தொடர்ந்து பூனை போல,
ஒலி செய்யாமல் நடந்த குறவனின்,
வலிமை மிகுந்த கைகளில் சிக்கி,
உயிரை இழந்தது பன்றி யொன்று! 43
கட்டுச் சேவலின் கணுக்கால் போன்ற,
முரட்டு விரல்களில் இறுக்கிப் பிடித்து,
முட்டப் பாய்ந்த காட்டுப் பன்றியின்,
மூர்க்கக் கொம்பை முறித்து எடுத்தான்! 44
கானகக் காட்சியும், குறவனின் வீரமும் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் கவிதைகளைப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வரும் திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.