-சு.கோபாலன்

 
மனித வாழ்வின் அல்லல்களை, தொல்லைகளைக் கண்டு மனம் நொந்து
இனிய இயற்கையின் ஒரு அங்கமாகவே மாறி வாழ்ந்தால் எப்படியிருக்குமென
கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விட்டேன் எண்ணிப் பார்த்திட
உற்பத்தி ஆனது ஒரு பெரிய வேண்டுகோள் பட்டியல் ஆண்டவனுக்கு அளித்திட!

 

மேகம் ஆகி மலை உச்சியில் துஞ்ச வேண்டும்
தாகம் தீர்க்கும் மழையாய் பூமியில் பெய்ய வேண்டும்
பாய்ந்து செல்லும் ஆறாக விரைந்து ஓட வேண்டும்
காய்ந்து கிடக்கும் நிலங்களுக்கு உயிர் ஊட்ட வேண்டும்

மீனாகி பரந்த கடலில் நீந்தி மகிழ்ந்திட வேண்டும்
மானாகி அடர்ந்த காட்டில் துள்ளி ஓடிட வேண்டும்
வண்டு ஆகி மலர்கள் மேல் அமர்ந்து மகிழ வேண்டும்
உண்டு தேனை மனதாற ரீங்காரம் செய்ய வேண்டும்

மயிலாகி வண்ணத் தோகைகளை விரித்திட வேண்டும்
ஒயிலாக நடனமாடி காண்போரை மகிழ்விக்க வேண்டும்
குயில் ஆகி இனிய குரலிசையில் கூவிட வேண்டும்
துயில் எழுப்பும் சுப்ரபாதமாய் அது ஒலித்திட வேண்டும்

கெட்டியான விழுதுகள் தாங்கும் பெரிய ஆலமரமாக வேண்டும்
வெட்டிச் சாய்ப்பார்களோ எனும் பயமின்றி நிழல் தர வேண்டும்
சுகம் தரும் தென்றலாய் இதமாய் வீசிட வேண்டும்
அகம் குளிர்ந்து அதை உணர்வோர் மகிழ்ந்திட வேண்டும்

பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் மலராக வேண்டும்
காய்த்துத் தொங்கும் தோப்பினில் கனியாக வேண்டும்
தொடுத்த மாலையாக ஆண்டவனை அலங்கரிக்க வேண்டும்
பறித்த பழமாக அவனுக்கு நிவேதனம் ஆகிட வேண்டும்

மூங்கிலாய்த் தோன்றி கண்ணன் திருக்கரத்தில் வேய்ங்குழலாகி
நீங்கிலா இனிமை பொங்கும் இசையாய் வெளிப்பட வேண்டும்
அலையாக செந்தூர் கடலில் பிறந்து கந்தன் கழல் தழுவ வேண்டும்
மலையாக ஓங்கி நின்று குமரனின் தாளினைத் தாங்கிட வேண்டும்

பச்சைக் கம்பளம் போர்த்திய வயலில் ஒரு நெல் பயிராக வேண்டும்
இச்சைப்படி காற்றுடன் இசைந்து தலை அசைக்க வேண்டும்
விண்வெளியில் கண் சிமிட்டும் தாரகையாய் ஜொலிக்க வேண்டும்
கண்குளிர வண்ண ஓவியமாய் காட்சி தரும் வானவில்லாக வேண்டும்

இயற்கையோடு ஒன்றி வாழ்வதை கற்பனை செய்தாலே கரும்பாய் இனிக்கிறதே!

 

4 thoughts on “வேண்டும்! வேண்டும்!

  1. இயற்கை மீது தாங்கள் கொண்டுள்ள அதீத ஈடுபாடு தங்களது கவிதை வரிகளில் பளிச்சிடுகின்றது. அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்.

  2. ஒரு நல்ல கருத்துடன் கூடிய கவிதை. தொடரட்டும் உங்கள் பங்களிப்பு.
    நரசய்யா

  3. ஒவ்வொரு வரியும் அருமையாக இருக்கிறது. கவிதையைப் படிக்கும் போதே காட்சிகள் மிக அழகாகக் கண்முன் விரிகின்றன. படித்து முடித்ததும், மனதில் தோன்றும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. மிக நல்ல ரிலாக்ஸேஷன் டெக்னிக் இது என்று தோன்றுகிறது. அற்புதமான பகிர்வுக்கு மிக்க நன்றி!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க