-மேகலா இராமமூர்த்தி

 

அண்ணலார் காந்தி அறவழிக் கொள்கை
அகிம்சையைப் போற்றி நட.

ஆய்ந்தறி யாமல் பழகும்தீ நட்பதனால்
ஓயாத தொல்லை வரும்.

இளமையில் கற்றிடும் நற்பண் பதுவே
வளமான வாழ்வைத் தரும்.

ஈட்டும் பொருளில் ஒருசிறி தாவது
நாட்டின் நலத்திற்கே நல்கு.

உழைப்பினை மூல தனமெனக் கொண்டால்
தழைக்கும் தமிழர் குடி.

ஊனம் ஒருவர் குறையன்றே அஃதறிந்(து)
ஊக்கம் அளித்தல் கடன்.

எண்ணம் உயர்வாக என்றும் இருந்திட்டால்
திண்ணமாய் வெற்றி வரும்.

ஏற்றத்தை எந்நாளும் வாழ்வினிலே பெற்றிடவே
போற்றிடுக கல்வி தனை.

ஐயம் அகற்றிடு ஆற்றல் பெருக்கிடு
வையகம் வாழ்த்தும் உனை.

ஒற்றுமை என்றும் பலமாம் அதனையே
கற்கநல் கொள்கையா இன்று.

ஓயா துரைக்கின்ற பொய்ம்மையைப் போக்கியே
வாய்மையால் வென்றிடு வோம்.

ஔவியம் பேசாமல் அன்போடு வாழ்ந்திடுநீ
ஔவைதான் சொன்ன படி.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “புதிய குறட்பாக்கள்

  1. அகரவ ரிசையில் அறிவுரை சொல்லும்,

    அழகுபு தியகுறள் நன்று!

  2. மிகவும் அருமையான குறட்பாக்களைத் தந்துள்ளீர்கள் மேகலா.
    காந்தி முதல் ஒளவை வரை, அவர்கள் வழியில் நடக்க அறிவுறுத்த வள்ளுவரின் வழியில் வடித்த குறள்கள் 12ம் அருமை. பள்ளி சிறார்களின் பாடத்திட்டத்தில் மனனம் செய்யும் பகுதியில் இதனைப் பார்க்க விரும்புகிறேன்.
    பாராட்டுக்கள் .

    அன்புடன்
    ….. தேமொழி

  3. புதிய குறட்பாக்கள்,
    புதுமைதான்- நன்று…!

  4. தீந்தமிழில், ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான உயிரெழுத்துக்களைத் துவக்கமாக வைத்துத் தந்த குறட்பாக்கள் அற்புதம்!!!.  ஒவ்வொன்றும் மிகச் சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கி மிளிர்கிறது. மிக அற்புதமான பகிர்வு. என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  5. அருமையான முயற்சி, மேகலா. இஃது தொடரட்டும், வாழ்த்துக்கள்.

    மேற்கண்ட குறட்பாக்களில்

    //ஊனம் ஒருவர் குறையன்றே அஃதறிந்(து)
    ஊக்கம் அளித்தல் கடன்.//

    தனித்து ஒளிர்கிறது. குறளின் கருத்தும், சந்தமும், கவித்வமும் இக்குறளில் விசேஷமாக சோபிக்கின்றன.

    அடுத்த படைப்புக்கு காத்திருக்கிறோம்!

    வாழ்த்துக்களுடன்
    புவனேஷ்வர்

  6. புதிய குறட்பாக்களை வரவேற்றும், பாராட்டியும் கருத்துரை வழங்கியுள்ள அன்பு நண்பர்கள் சச்சிதானந்தம், தேமொழி, செண்பக ஜெகதீசன், பார்வதி இராமச்சந்திரன், புவனேஷ்வர் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *