இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (69)

 

-சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்களோடு இணைகிறேன்.

அரசியல் எனும் அஸ்திரம் பொதுநலத்திற்காகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானத்தின் அடிப்படையாகும். ஆனால் அதே அரசியல் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கைப் பலப்படுத்தும் ஆயுதமாகப் பாவிக்கப்படும் போது ஏற்படும் தாக்கங்கள் மிகவும் சிந்திக்கப்பட வேண்டியவை.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை யார் விரும்பினாலோ , விரும்பாமல் விட்டாலோ இங்கு பல்கலாசார அடிப்படையே சமூகங்களில் நிலவுகிறது.

அதிகமான எண்ணிக்கை வெளிநாட்டவர்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து கிளம்பினாலும் இந்நாடு பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் இணைந்து வாழும் நாடு என்பது அனைவராலும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

இங்கிலாந்தின் கூட்டரசாங்கம் இந்நாட்டின் பொருளாதார நடவடிக்கையைச் சீராக்க எடுக்கும் நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் பலமாக செல்வாக்கை இழந்து கொண்டு வந்தது.

பொருளாதாரக் கொள்கையின் வெற்றியின் அடிப்படையில் தமது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள முடியாது தவித்தன இக்கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கன்சர்ட்வேடிவ் கட்சியும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும்.

இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு ஒரேவழியாக வெளிநாட்டுக்காரரின் குடியேற்றம் அதாவது immigration ஒரு பெரிய பிரச்சனையாக்கப்பட்டது.

இதற்கு தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. ஜரோப்பிய யூனியன் நாடுகளின் எண்ணிக்கை விஸ்தரிக்கப்பட்டு முன்னைய கம்யூனிசக் கூட்டமைப்பில் இருந்த கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் பல இவ்வொன்றியத்தில் இணைந்ததால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இலகுவாக இங்கிலாந்துக்குள் நுழைந்து இந்நாட்டின் சமூக நலனின் அடைப்படையில் இவ்வரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது.

இதனால் இக்கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்தார்கள். இவர்கள் தமது வேலைகளைப் பறித்துக் கொள்வதான உணர்ச்சி இங்கிலாந்து நாட்டின் மக்கள் மனதில் எண்ணம் மேலோங்கியது இதனால் இவ்வெளிநாட்டுக் காரரின் வருகையையும், ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்தின் அங்கத்துவமும் சர்ச்சைக்குரியதாக்கப்பட்டது.

இக்கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கடையத் தொடங்கியது.

இக்கட்சிகளின் செல்வாக்கின் முன்னேற்றத்தைக் கண்ணுற்ற கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்ச்சியான கன்சர்வேடிவ் கட்சியில் தாம் எங்கே அடுத்த தேர்தலில் தோற்று விடுவோமோ எனும் பயம் ஏற்பட்டது.

விளைவு,

மக்கள் மத்தியில் தாம் வெளிநாட்டுமக்களின் குடியேற்றக் கொள்கையில் மிகவும் கடினமானவர்கள் எனும் தோற்றத்தைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

அதன் நிமித்தம் சமீபத்தில் அவர்கள் எடுத்த ஓர் நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அது என்ன என்கிறீர்களா?

எந்தெந்த நகர்களில் வெளிநாட்டு மக்களின் குடியேற்றம் அதிகளவில் காணப்படுகிறதோ அந்த இடத்தில் ஓர் வாகனத்தில் கட்ட வலம் வரச் செய்யப்பட்ட ஒரு விளம்பரப் பலகையே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஆமாம் அவ்விளம்பரத்தில், “நீங்கள் இந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறீர்களா? நீங்களாகவே எம்மைத் தொடர்பு கொண்டால் நாம் உங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல ஆவன செய்வோம், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள். ஏற்கனவே உங்கள் இடத்தில் பலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டவிரோதமாக வசிப்பவர்கள் இந்த நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்” எனும் விளம்பரப் பலகையத் தாங்கிய வாகனம் வலம் வருவதே சர்ச்சைக்குரியதாக்கப்பட்டுள்ளது.

இதற்கான எதிர்ப்பலைகளின் விரிவாக்கத்தை அடுத்த வார மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.

அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க