பந்தக் காப்புரிமை (ரக்ஷாபந்தன்)

 

சத்திய மணி

 

மதுரைநாயகி மீனாட்சி காப்பிட்டுக் கொண்டே கண்ணனிடம் இயம்புகிறாள்

 

ஒவ்வொரு அணுவிலும் இருப்பவனே

ஒவ்வொரு நிகழ்விலும் தெரிபவனே

காரணக் காரணம் ஆனவனே

கருணை கடலில் துயில்பவனே

மலையைக் குடையாய் பிடித்தவனே

மதுவை  விழியில் விடுப்பவனே

அன்பைச் சிரிப்பாய் அளிப்பவனே

அழகிய! அழகா! என் அண்ணா!

பாஞ்சாலிகளின் கதைதினமும்

பாரதமண்ணில் நடக்குதடா

பாரதிருப்பது முறையோ-உன்

பாஞ்ச சைன்யம் முடங்கியதோ

நீதிநியாயம் தர்மமெலாம்

மீதியின்றி வறள்வதன்முன்

அவதாரம் உடன் எடுப்பாயே

அருளால்  இப்புவிக் காப்பாயே!

 

காப்பிட்டத் தங்கைக்கு கண்ணன் கூற்று

 

ஒவ்வொரு உயிரையும்  பெற்றவளே

உண்டிடப்   பால்தரும்      உற்றவளே

சூலமும்      வாள்படைத் தாங்கிடவே

காலமும்    சுழற்சியும்     ஏற்பவளே

என்னிடம் அன்பைப் பொழிபவளே

எங்களின் சக்தியின்    இமையவளே

தாய்மையின் வடிவே! உமையவளே!

சேய்குலம் காப்பது   நீயல்லவோ?

செல்வமும் வளமும் காத்திடுவாய்

சிறப்புகள்   சேமங்கள் கூட்டிடுவாய்

அழைத்ததும் சிங்கத்தில் விரைபவளே

அருள்வதில் உன்னினும் உயர்வுளதோ?

 

சரணம்

அன்னையும் அண்ணனும் காப்பதனால்

அகிலமும்     அன்பால்  சுழலுதடா

துன்பமும் துயரமும் போகுமடா

உண்மையும் உறவும் நிலைக்குமடா

அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்

 

2 thoughts on “பந்தக் காப்புரிமை (ரக்ஷாபந்தன்)

  1. அழகான அருமையான கவிதை. மஹாமாயையான தங்கையும் மாயப் பிறப்பறுக்கும் ஆயர் குலக் க(அ)ண்ணனும் ஓயாமல் நடத்தும் ஒளி விளையாடலே இப்பிரபஞ்சம் முழுவதும்.இதை உரையாடல் போல் சொன்ன சகோதரர் சத்தியமணியின் அற்புதக் கவிதை படிக்கப் படிக்க திகட்டாத தேனூற்று. சகோதரருக்கு, என் மனமார்ந்த ரக்ஷாபந்தன் தின நல்வாழ்த்துக்கள்.

  2. பந்தக் காப்புரிமைக் கவிதை மிக்க நன்று. வாழ்த்துக்கள் ஐயா!

Leave a Reply

Your email address will not be published.