நெல்வி ளையும் தென்னாட்டில் பூத்தவனை,

வில்வ இலை வடிநீரால் பூசித்து,

செல்வ நிலை கல்விபுகழ் பெற்று,

வல்ல மையும் நல்வாழ்வும் பெறுவோம்!                                                                      25

 

நாட்டிய வேதத்தில் தோன்றிய நாயகனே,

நீட்டிய பாதத்தால் தேவியை வென்றவனே,

ஆட்டிய அரவத்தின் நஞ்சினை உண்டவனே,

வாட்டிடும் துன்பத்தைப் போக்கிடும் ஆண்டவனே!                                                        26

 

நீருக்குள் ஊடுருவும் சூரிய ஒளியாய்,

உயிருக்குள் ஊடுருவும் வீரிய ஒளியே,

பாருக்குள் நீயுலவிக் காப்பதை உணர்ந்தால்,

யாருக்கும் துன்பங்கள் தோன்றுதல் அரிது!                                                                     27

 

செவ்வேளின் வடிவத்தில் சிகரத்தில் நின்றாய்,

வெவ்வேறு வடிவத்தில் அகிலத்தில் வந்தாய்,

ஒவ்வாத மனதிலும் ஒளியாக மலர்ந்தாய்,

இவ்வேழை உள்ளத்தில் இசையாக நிறைந்தாய்!                                                          28

 

குற்றாலக் குறவஞ்சி வழியாக வந்தாய்,

கற்றாடக் கவின்மிகு தமிழாக வந்தாய்,

பொற்பாதம் தனைத்தூக்கிப் புயலாக வந்தாய்,

உற்றாடும் அடியவருள் தென்றலாய் நின்றாய்!                                                              29

 

இல்லாமல் இருக்கும் நாதனின் பேரருள்,

இல்லாமல் இல்லை ஈரேழு உலகம்,

புல்லாகப் பிறக்கும் பிறவி என்றாலும்,

தில்லையின் நாதனே நீர்தந்து காப்பான்!                                                             30

 

 

நிலைத்து நிற்கும் நாதனை வணங்கி,

மலைத்து நிற்கும் மனதின் மாயையைத்,

தொலைத்து நிற்கும் தூயவர் அடிகளை,

நினைத்து வாழ்ந்தால் வீடுபேறடைய லாம்!                                                                   31

 

மானைக் கையில் ஏந்திய நாதனே,

கூனை நிமிர்த்திய பாண்டியன் தேவனே,

தூணைப் பிளந்த சிம்மந் தன்னிலும்,

வானைப் போல விரிந்த ராசனே!                                           32

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *