திருச்சிராப்பள்ளி

19/03/2014

அன்புக்குரிய மணிமொழிக்கு,

உன்னுடைய  அம்மான்* எழுதிக்கொண்டது. நலம்.

நேற்று தொலைபேசியில், உனக்கு உங்கள் நகரத்தின் சிறந்த பள்ளியில் அனுமதி கிடைத்திருப்பதை, உன் அம்மா மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டாள்.

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

இதனை அடைவதற்காக உந்தன் பெற்றோரும் நீயும் செய்த முயற்சியையும், அயர்ச்சியையும் நன்கு அறிந்துகொண்டேன்.

விண்ணப்பம் பெறுவதற்கு அதிகாலையிலிருந்தே கால்கடுக்க வரிசையில் நின்றதில் ஆரம்பித்து, நீ நுழைவுத்தேர்வில் சிறப்பான முறையில் தேறியது வரை உன் அம்மா விவரித்தாள்.

கல்விக்கட்டணம் அதிகம் என்று கருதினாலும், அது உன்னுடைய புத்தகப்பையின் சுமையைவிட தங்களுக்கு அதிக சுமையில்லை எனவும், தங்களின் வாழ்வே உனக்காகத்தான் என்ற கருத்தில் உறுதியாகவும் உவகையாகவும் இருக்கிறாள்.

ஆனால், அவளுக்கு ஒரு முக்கியமான கவலை; நியாயமான கவலை; கவனத்தில் கொள்ளவேண்டிய கவலை. அது என்னவென்றால், உன் பள்ளியின் தூரம்.

விபத்துகள் மலிந்த இந்த காலக்கட்டத்தில், நாளிதழ்களில் நாளும் தென்படும் செய்தி,  பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகள் பற்றித்தான். அதனைப்பற்றி கலந்துரையாடும்பொழுது, அதிகாரபூர்வமாகவும், என் சொந்த அனுபவத்திலும் சாலை  விபத்துகளுக்கான முக்கிய காரணமாக அமைவது 77% தனிமனித தவறுகளால்தான் என்பதனை தெரிவித்தேன்.

அவள் என்னிடம், அந்தத் தவறுகளை களைவதற்கான வழிமுறைகளையும், வருமுன் காக்கும் நடைமுறைகளையும் உனக்கு அறிவுறுத்துமாறு வேண்டிகொண்டதன் விளைவுதான் இந்த கடிதம்.

நீ மிகுந்த பொறுப்பானவள், பணிவானவள் என்பதில் எங்களுக்கு எந்தவித ஐயமும் இல்லை. அதே வேளையில், நீ செவிமடுத்து மேன்மைப்படுத்திக்கொள்ளும் இயல்பினள் என்ற காரணத்தினால் சில ஆலோசனைகளை பகிர்ந்துகொள்கிறேன்

உன் பள்ளிப்போக்குவரத்திற்கு மூன்றுவித வாகன வசதிகள் இருப்பதாகவும் – ஆட்டோ, தனியார் வேன் மற்றும் பள்ளிப்பேருந்து- அதனதன் சாதகபாதகங்களையும் தெரிவித்தாள்.

எந்தவித வாகனங்களாக இருந்தாலும், சாலைவிதிகள் பொதுவானவை தானே. அடிப்படை சாலைவிதிகள் பற்றி நீ முற்றிலும் அறிந்திருப்பாய் என்று நம்புகிறேன்.

*அம்மான் – தாய்மாமன்

விதிகள் மீறும்பொழுதும் மீறப்படும்பொழுதும் நாம் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிவிட்டு கலைந்துவிடுகிறோம். செயல் மாற்றம் என்பது நம் ஒவ்வொரிடம் இருந்து தொடங்கவேண்டும். அதன் நல் விளைவுகளையும் நோக்கங்களையும், நம் சக மனிதர்கள் கண்டுணர்ந்து செயல்படுத்த தொடங்கிவிட்டால், சமூக நல் மாற்றம் விளைந்துவிடும். அடுத்த சக மனிதருடைய பாதுகாப்பு என்பது நம் கடமை என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணமிட்டாலே போதும், நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுவிடும். அன்றாட மன சஞ்சலங்களும், பாதுகாப்பற்ற உணர்வுகளுக்கும் தீர்வு ஏற்படும்.

இந்த தீர்வு என்பது ஒரே நாளிலோ ஒரு நபராலோ ஏற்பட்டுவிடமுடியாது; நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இன்றியமையாதன. வந்தபின் பார்த்துக்கொள்வதைவிட, வருமுன் காப்பதே சாலச் சிறந்தது.

பள்ளி வாகனங்களின் அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டிற்கு, பள்ளி வாகன ஓட்டுநரின் தவறைவிட அதில் ஏறும் நம் மனப்பான்மை தவறுக்குதான் அதிக இடம் இருக்கிறது. முக்கியமாக பெற்றோர்களையே குறிப்பிடுவேன். இதனைப் பற்றி உன் அம்மாவிடம் விரிவாக எடுத்துரைத்தாலும், உன்னிடமும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் எங்களைப்போன்ற பெற்றோர்கள்  என்பதனை முதலில் உணரவேண்டும். வாகன ஒட்டுநர்க்கோ பல குழந்தைகளில் நீங்கள் ஒரு  குழந்தை. பெற்றோருக்கோ அந்த  ஒரு குழந்தைதான் எல்லாம். அதிகமான எண்ணிக்கையில் பயணப்படும் வாகனங்களில் நம் குழந்தைகளை அனுப்புவதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். அனுமதித்த அளவு குழந்தைகளை ஏற்றும் வாகன அமைப்பாளர்களுக்கு, அவர்களுக்கும் கட்டுபடியாகும் அளவிற்கு சற்று கூடுதல் கட்டணத்தை, நம் குழந்தைகளின் பாதுகாப்பு பொருட்டு செலுத்துவதில் நாம் குறைந்துபோய்விடமட்டோம்.

மற்றபடி உன் தந்தையாரிடம் இரண்டு குறிப்பான பாதுகாப்பு சரிபார்த்தலை வலியுறுத்தி இருக்கிறேன். ஒன்று, வாகன ஓட்டுநரின் கண் பார்வை உள்ளிட்ட மருத்துவ சான்றிதழ். இரண்டு, வாகனத்தின் சக்கரத்தின் (டயர்) அமைப்புத்தன்மையை உறுதிப்படுத்துதல். (என் அனுபவத்தில், மேற்கூறிய இரண்டு அம்சங்களின் பழுதினால் நிறைய விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனை  யாரும் குறிப்பாக கவனிப்பதில்லை; வலியுறுத்துவது இல்லை.)

பல வாகனங்களில் டயர்களை பார்த்தால், வழவழப்பாக (சாலைகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்க வைக்கும் அளவுக்கு) இருப்பதை அறியமுடியும். இவை மிகுந்த ஆபத்தானது என்பதை ஓட்டுனரும், பயணிகளும் கவனத்தில் கொள்வதே இல்லை. டயர்களின் சீரான பயன்பாட்டிற்கு குறிப்பாக மூன்று அளவுகோல்களை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – டயர் பிரஷர் (அழுத்தம்), ட்ரட் (Tread), சமசீர்த்தன்மை (alignment).

என்னைபோன்ற ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர், தான் அறுவை சிகிச்சை செய்யும் ஒரு குறிப்பிட்ட நோயாளிகளின் உயிர்நலனுக்கு பொறுப்பாகிறார். ஆனால் ஒரு ஒட்டுநரோ, அது எந்தவித வாகனமாக இருந்தாலும் ஒரு நடைக்கு குறைந்தப்பட்சம் 4 முதல் 60 பயணிக்கும் குழந்தைகளின் உயிர்நலனுக்கு பொறுப்பேற்கிறார்.

அவருடைய பொறுப்புணர்ச்சியை உணரச்செய்தால், முறையாக அங்கீகரித்தால் கண்டிப்பாக அவருடைய மனப்பான்மையில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். ஒரு பயணம் முடிந்தவுடன், நாம் ஒவ்வொருவரும் அவரை அணுகி, பாதுகாப்பான பயணத்திற்கு  தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்லலாம் என்பது திண்ணம்.

 இந்த பழக்கத்தை நீ உடனடியாக கடைபிடிக்கவேண்டும். உன் சக மாணாக்கர்களுக்கும் இதனை நயம்பட எடுத்துரைக்கவேண்டும்.

மற்றபடி, வரிசையில் ஏறுவது இறங்குவது, நின்றவுடன் இறங்குவது போன்ற அடிப்படை பாதுகாப்பு கோட்பாடுகளை நீ நன்றாக அறிவாய். அதனை செயல் படுத்துவதில்தான் பாதுகாப்பு உறுதியாகும்.

எப்படியாகினும், சொல்லுதல் யார்க்கும் எளியஅரியவாம்,

     சொல்லிய வண்ணம் செயல்.” (திருக்குறள் –664 – வினைத்திட்பம்)

என்ற குறளை மனதில் நிறுத்தவும்.

மேற்கூறிய அனைத்தும் தற்காலிக நடைமுறைக்கான வழிகாடுதல்கள்தான்.

இதற்குரிய  நிரந்தர எளிய தீர்வுகளை பற்றி சிந்தித்தபொழுது எழுந்த என் எண்ணவோட்டங்களை  உன்னிடம் பகிர்ந்துக்கொள்ள விளைகிறேன்.

நான் என்னதான் எவ்வளவுதான் எடுத்துரைத்து பட்டியலிட்டாலும், என் தலைமுறையினரின் சார்பாக ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக தற்கால வளரும் தலைமுறையினர் ஆகிய உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

எதற்காகவென்றால், எங்களுக்கு முன் தலைமுறையினர், எங்களிடம் தாங்கள் கல்வி கற்ற சிரமங்களை விவரிப்பதுண்டு. குறிப்பாக அந்த காலத்தில் பள்ளிகள் அவர்களின் இருப்பிடத்தை விட்டு தூரமாக இருந்ததையும், அதற்காக அவர்களின் தினந்தோற பயண சிரமப்பாடுகள் பற்றியும்தான் இருக்கும். அவற்றில் அவர்கள் ஒருமுறையேனும் பாதுகாப்பு குறைபாடு அல்லது அச்சம் பற்றியும் தெரிவித்ததே இல்லை.

அந்த நடைமுறை சிரமங்களை குறைப்பதற்காகத்தான் கிட்டத்தட்ட ஊர்தோரும் பள்ளிகள் அமையவும், பள்ளிகள் மேனிலைப்படுத்தவும் அந்தக்கால கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் சீரிய முயற்சிகள் மேற்கொண்டு ஓரளவு வெற்றியும் கண்டனர்.

அதனை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் தவறிவிட்ட தலைமுறையாய் நாங்கள் தலைகுனிகிறோம்.

உலகளாவிய போக்கிலும், வளர்ந்த நாடுகளும் ஒருமித்து செயல்படுத்தும் “அருகமை பள்ளிகள்” என்ற உயர்ந்த கல்விக்கோட்பாட்டை நிலைநிறுத்தத் தவறிவிட்டோம். எங்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு தூரம்தான் தடையாக இருந்தது. ஆனால் உங்களுக்கு, தூரம் போக பாதுகாப்பின்மையையும், விளையாட்டின்மையையும், நேரமின்மையையும், சோர்வையும், மனவழுத்ததையும் கூடுதலாக திணித்துவிட்டோம். ஊருக்கு வெளியே இருந்த மதுக்கடைகளை ஊருக்குள் வைத்துவிட்டு, ஊருக்குள் இருந்த பள்ளிகளை வெளியற்றிவிட்டோம். முன்பு சமூகச்சூழலால் கிட்டாத கல்வியை, இன்று புறச்சூழலால் கிட்டாமலே வைத்துள்ளோம்.

பாதுகாப்பான உன்னதமான கல்விச்சூழல் அருகமை பள்ளிகளில்தான் அமையக்கூடும். அதுதான் நிரந்தர தீர்வாக அமையும். அன்றாட பாதுகாப்புகள் பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் கல்வியிலும், விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களாகிய நாங்களும் நிம்மதியாக எங்கள் அலுவல்களை மேற்கொள்ளமுடியும்.

நாங்கள் தெரிந்தே செய்த தவறு. மன்னித்துக்கொள்ளுங்கள்.

தவறிழைத்தவர்தான் தவறைக் களைய முனையவேண்டும். ஒரு பக்கம் குறைகள் மிகுந்து காணப்பட்டாலும், ஒவ்வொரு தனிமனிதனின் மனப்பான்மை, தவறுகளைத்  திருத்திக்கொள்ளும் பக்குவம், சரியான புரிதல்கள் மூலம், நம் அன்றாட நல்வாழ்வையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் அமைத்துகொள்ளலாம் . அதற்கான முயற்சிகளை வல்லமை படைத்த அனைவரும் மேற்கொள்வோம்.

இதற்கிடையில் உன்னைப் போன்றோர் நன்கு தூய கல்வி கற்று, எங்களின் முனைதலையும், முயற்சிகளையும் முன்னெடுத்து செல்வீர்கள், உங்களுக்கு  பின்வரும் தலைமுறையினருக்கு பாதுகாப்பான ஒரு உலகத்தை அமைத்துகொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதில்தான் அறிவுசார் மனிதகுல வளர்ச்சியின் வெற்றி இருக்கிறது.

என்றும் அன்புடன்

உன் அம்மான்

Dr. சுப. திருப்பதி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மணிமொழிக்கு ஒரு மடல்!

  1. Present day issue and worries of parents discussed with Professionalism and practical approach. There is message not only for the parents but also for the Management teams of the Schools. Such articles share the concern of many well wishers for the society.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *