மணிமொழிக் கொரு மடல்
நடராஜன் கல்பட்டு
சென்னை – 64
19-03-2013
எனது அன்பு மணிமொழி,
உன்னிடம் இருந்து கடைசியாய் வந்த கடிதத்தில் நீ கேள்வி ஒன்று கேட்டிருந்தாய், “உனது கையெழுத்து ஏன் இப்படி ஆகி விட்டது? வகுப்பிலேயே அழகான கையெழுத்து கொண்டவள் நீ தானே. உன் கை விரல்களிலே நடுக்கம் இருக்கிறதா? உடனே நீ வைத்தியரைப் பார்” என்று.
உண்மைதான். அப்போதெல்லாம் எட்டாம் வகுப்புக்கு வரும் வரை நமக்கு காப்பீ ரைடிங் என ஒரு வேலை இருக்கும். பள்ளிப் புத்தகங்கள் வாங்கும்போதே அவற்றில் காப்பீ ரைடிங் என்ற ஒரு நோட்டுப் புத்தகமும் இருக்கும். அதில் எல்லாப் பக்கங்களிலும் நான்கு நான்கு வரிகளாக அச்சடிக்கப் பட்டு இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் முதல் வரியில் அழகாக ஆங்கிலத்திலோ தமிழிலோ வார்த்தைகளோ அல்லது ஒரு வாசகமோ அச்சடிக்கப்பட்டு இருக்கும். அந்த முதல் வரியில் உள்ளது போலவே நாம் கீழ் வரிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
உனக்கு நினைவு இருக்கும். எனது காப்பீ நோட்டில் டீச்சர் போடும் “குட்”டைப் பார்த்து, “டீ நீ பெரிய ஆளா வருவேடீ” ன்னு சொல்லுவே. ஆனா கையெழுத்துக்கும் தலெ எழுத்துக்கும் இருக்கற பொருத்தம் ‘அஷ்டாஷ்டக’ பொருத்தம்னு சொல்லணுமோன்னு தோணுறது எனக்கு.
கையெழுத்து நன்னா இருக்கறவாளுக்கு தலெ எழுத்து நன்னா இருக்காதோ?
கல்யாணம் ஆன புதுசுலெ என் மாமியார், “என்ன சீரு செஞ்சிருக்கார் ஒங்க அப்பா? இது சரியா இல்லே. அது சரியா இல்லே” ன்னு சொல்லி என்னையும் என்னோட அப்பாவையும் திட்டுவா.. மாமியார் போய்ச் சேந்தா புண்ணியவதி. மழெ நின்னாலும் தூரல் உடலேன்னு சொல்லுவாளே அது போல மாமியார் செஞ்சிண்டு இருந்த வேலெயெ நாத்தனார் எடுத்துண்டா.
வீட்டோடு நாத்தனாரான்னு கேக்கறயா? இல்லே. அப்பொப்ப வருவா பெரிய லிஸ்ட்டெ எடுத்துண்டு. அண்ணாதான் இருக்காரே ஆபத் பாந்தவன், கையிலெ அக்ஷய பாத்திரத்தோட.
நான் எதாவது வேணும்னு கேட்டா, “அதுக்கென்ன இப்பொ அவசரம். நமக்கு வேணுங்கெறதெ எப்பொ வாணா வாங்கிக்கலாம்” னு சொல்லி என் வாயெ அடெச்சுடுவார். என்னோட ஆசெயெல்லாம் அடக்கி வெச்சு அடக்கி வெச்சே அழிஞ்சு போச்சு.
இப்போ பையனும் பொண்ணும் வளந்தூட்டா. நான் எதாவது சொன்னா, “அம்மா நீ சும்ம இரு. ஒனக்கு ஒண்ணும் தெரியாது” ன்னு சொல்லி என்னெ அடக்கறா.
மணிமொழீ எனக்கு சில சமயம் தோணறதுடீ ரெஃப்ரீஜிரேட்டர்லெ ஃப்ரீஸர்னு ஒண்ணு இருக்கே அது போல நம்மெ சின்னவாளாவே ஃப்ரீஸ் பண்ணி வைக்க ஒண்ண விஞ்ஞானிங்க கண்டு புடிச்சிருக்க மாட்டாங்களான்னு தோணறதுடீ.
இத்தோடு நிறுத்திக்கறேன் என் கதெயெ. நீ எப்படி இருக்கெ? அதெ சொல்லு.
இப்படிக்கு,
கழிந்த இன்ப நாட்களை எண்ணி துன்ப நாட்களைக் கழித்திடும்
உன் அன்புத் தோழி,
அனுசுயா