சிறுகை அளாவிய கூழ் – 11

இவள் பாரதி

ஓங்கியடித்துவிடுகிறாள்

அம்மாகுட்டி

அடிப்பதா அழுவதா

என சுதாரிப்பதற்குள்

சிரித்துவிடுகிறாள்

நொடிக்கு நொடி

காலத்தை நிகழ்த்த முடிகிறது

குழந்தைகளால் மட்டும்

 

——————

ஏதேனுமொரு அற்புதம்

நிகழ்ந்து கொண்டேயிருக்கும்

குழந்தைகள் இருக்கும் வீட்டில்

 

———————

ஆரஞ்சினைப் பிழிந்தெறிகிறாய்

ஆப்பிளைக் கடித்துத் துப்புகிறாய்

வாழைப்பழத்தை நசுக்குகிறாய்

பப்பாளியை சுவைபார்க்கிறாய்

திராட்சையை விட்டெறிகிறாய்

பழங்களைப் பந்தாடுகிறாய்

உன் வாய், முகம் என

அப்பியிருக்கும் பழத்துண்டுகளையும்

உன் கைகளிலிலிருந்து

வழியும் சாற்றையும்

வாயகப்படுத்துகிறேன்

அடடா.. சிறுகை அளாவிய கூழ்

 

—————

நாலைந்து சொற்களைக் கொண்டே

நிகழ்த்துகிறாய் நூறு சிறு சொற்களை

எப்படி எழுதுவேன்

என் கண்ணே

இந்தக் கவிதைகளை

 

விதவித ஒலிகளை

டெசிபல்கள் மாற்றி அனுப்புகிறாய்

எங்கே சேமிப்பேன்

என் செல்லமே

இந்த சிம்பொனியை

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *