மண்ணுமே பொறுக்குமா!

எம்.ஜெயராமசர்மாb-index

காந்திய தேசத்தில் கணக்கிலா அரக்கர்கள்
கண்ணியம் எல்லாமே காற்றிலே பறக்குது
நீதியை வேண்டியே போவது யாரிடம்
நிம்மதி இன்றியே நிற்குது தாய்க்குலம்

பாரத பூமியை அன்னையாய் பார்த்தவர்
ஊரெலாம் பெண்ணினை தெய்வமாய் கண்டவர்
தோலினை உரித்துமே பெண்மையை குலைப்பதா
யாருளார் பெண்ணினை தாங்கியே காத்திட

கட்டிடம் பெருகுது கல்வியும் வளருது
துட்டரும் வருகிறார் துயரமும் பெருகுது
சட்டமோ இருட்டினில் தானுமே நிற்குது
நட்டமே நாளுமே பெண்களின் வாழ்விலே

வாய்மையின் வடிவமாய் வள்ளுவன் வந்தனன்
தாய்மையின் உருவமாய் சாரதா வாழ்ந்தனள்
ஏழ்மையில் இறைவனை கண்டநம் இந்தியா
எப்படி தொலைத்தது இரக்கத்தைப் பெண்ணிடம்

காணுகின்ற இடமெங்கும் காமுகரின் கூட்டம்
கற்பு பறிபோயிடுமோ பெண்கள் பெருஏக்கம்
ஏனிந்த நிலையென்று ஏக்கமொரு பக்கம்
இவை தடுக்க யாருள்ளார் என்பதேயேக்கம்

பெண்ணினை வதைப்பது பேதமை அல்லவா
கண்ணென பெண்ணினை காத்திடல் வேண்டுமே
எண்ணியே பார்க்காது இருந்துமே விட்டிடில்
மண்ணிலே வாழ்வதில் என்னதான் இருக்குது!

http://www.gender-focus.com/2010/05/22/women-behind-bars/

Leave a Reply

Your email address will not be published.