Featuredஇலக்கியம்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…100

சக்தி சக்திதாசன்

 

Sakthy

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் உங்களோடு உறவாட வந்திருக்கும் எனது இந்த மடல் உங்களுக்கு வரையும் நூறாவது மடல் எனும் நினைப்பே தித்திக்கிறது.

இனிய அன்பான வாசக உள்ளங்களுடன் நூறு வாரங்களாக வாரம் ஒருமுறை என் மனக்கருத்தினைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் அமைத்துக் கொடுத்த “வல்லமை” இதழின் வல்லமையாளர்களுக்கும், எனது மடலினை அன்பு கூர்ந்து ஆதரிக்கும் அன்பு வாசக நெஞ்சங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு காலத்தின் எழுத்துக்கள், பதிவுகள் அக்காலத்தின் கண்ணாடியாக அக்காலத்தின் நடப்புகளை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு கருவியாகச் செயற்படுகிறது..

காலம் எனும் காற்றில் அடிபட்டுச் செல்லும் சருகாக புலம் பெயர்ந்து வாழும் என் போன்ற சாதாரணமானவர்களின் மனதில் நாம் வாழும் எம்மை அண்டியுள்ள சமுதாயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் அந்நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பன எத்தகையதோர் பார்வையைக் கொடுக்கிறதோ அதையே உங்களுடன் இம்மடல் வழியாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

இது ஒரு கோணப் பார்வையே ! இதே நிகழ்வினை மற்றொரு கோணத்தில் பார்க்கும் பலர் இருப்பார்கள். எது சரி, எது பிழை என்று வாதிடுவதல்ல எனது நோக்கம். நடக்கும் நிகழ்வு என் பார்வையில் எத்தகையதோர் நிலையை எடுத்தது என்பதை எடுத்துக் காட்டுவதே நோக்கமாகும்.

sakஉலகத்தில் என்னை என் அன்னை விழுத்திய 57 வருட காலத்திலே கடந்த சுமார் 40ன் வருடங்களை இங்கிலாந்திலே புலம்பெயர் வாழ்க்கையிலே கழித்து விட்ட எனக்கு வாழ்க்கையின் பல நிகழ்வுகள் கொடுக்கும் அர்த்தங்கள் எனது தாய்நாட்டு குறுகிய கால வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது.

அது மட்டுமின்றி கடந்த பத்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் சென்னை வந்து செல்லுவதோடு 35 வருடங்களின் பின்னர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் என் தாய் மண்ணாம் யாழ்நகரின் மண்ணை மிதித்தது என்பது பல நினைவு அசைவுகளுக்கு ஒரு பின்னோட்டத்தைக் கொடுத்தது.

ஒரு சிறு ஊற்றாக யாழ்நகரில் முகிழ்த்த என் வாழ்க்கைப் பாதையை வகுத்துத் தந்த அந்த யாருக்கும் புரியாத மாபெரும் சக்தி இன்னும் அவிழ்க்காத முடிச்சுக்களாய் என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறதோ யானறியேன்.

இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்துத் தமிழ் சமூகத்திலே எனது முகவரியைத் தொலைத்துத் திரிந்த காலம் சில முகவரியைத் தேடி ஓடிய காலங்கள் சில இன்று கண்டெடுத்த முகவரியோடு மோதி நிற்கும் காலம்.

கலாச்சாரம் எமக்குக் கொடுத்த அடையாளங்கள் எம்மைப் பாதுகாக்கும் கவசங்களா இல்லை எமது முன்னேற்றத்திற்குத் தடைபோடும் கால் விலங்குகளா? என்பது இன்றைய எமது புலம்பெயர் சமூகத்தினிடையே நிலவி வரும் மாபெரும் கேள்வியாகி நிற்கிறது..

சந்ததி இடைவெளி அன்றி generation gap எனும் பதத்தின் அர்த்தம் இன்று பலமாக பலரின் காதுகளிலும் ஒலிக்கிறது. எனது சமகால புலம்பெயர்ந்தோர் தமது கலாச்சார அடையாளங்களை வெள்ளத்தோடு அடிபட்டுச்செல்லும் ஒருவன் தனது ஆடைகளைக் காப்பாற்ற போராடுவது போல பலமான போராட்டத்தின் வாயிலாக சிறிது தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் எமது அடுத்த சந்ததி தமது பெற்றோரின் வற்புறுத்தலுக்கிணங்கி கலாச்சாரத்தைப் பேணுவதற்கு முயற்சிப்பது போலக் காட்டினாலும் பெரும்பான்மையோர் தாம் தமது சொந்தக்காலில் நிற்கும் நிலை வந்ததும் அதனை அப்படியே காற்றில் பறக்க விட்டு விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் இவற்றில் எவை சரி அல்லது எவை பிழை என்று எவரால் வரையறுத்துக் கூறமுடிகிறது ?

அடுத்த சந்ததியினரின் நிலை கையொன்றைப் பின்னால் இழுத்துக் கட்டி விட்டு போருக்கு அனுப்புவதைப் போலவே தென்படுகிறது.

இன்றைய இங்கிலாந்தில் வாழ்க்கைப் போராட்டத்தின் முனைப்பு படுபயங்கரமான தீவிர நிலையை அடைந்து இருக்கிறது. நிறவேற்றுமை எனும் எல்லைகளைக் கடந்து எமது அடுத்த சந்ததி வெள்ளை இனத்தவருடன் சமதளத்தில் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டிய தேவையுள்ளது.

இங்கேதான் கலாச்சாரம், பண்பு எனும் இரண்டுக்கிடையிலே உள்ள மெல்லிய எல்லைக்கோடு காணாமல் போவதன் சங்கடம் தெரிகிறது.

நாம் புலம்பெயர் தேசத்தில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக வாழ்ப்போகிறோம் எனும் போர்வையில் மது, மாது, போதைப்பொருட்கள் பாவனை எனும் சீரழிவிற்குள் தம்மை உட்படுத்திக் கொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டு விடுமோ எனும் அச்சமும் மேலோங்கத்தான் செய்கிறது.

இருப்பினும் மேற்கூறிய இத்தீவினைப் பழக்கங்களுக்கு கலாச்சார அடையாளங்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவது உசிதமாகாது.

பண்பான வாழ்க்கையில் தம்மை உட்படுத்திக் கொள்வோர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவர்களாயிருந்தாலும் எவ்வகையான கலாச்சார அடையாளங்களால் தம்மை அடையாளப்படுத்தினாலும் மேற்கூறிய தீயபழக்கங்களுக்கு தம்மை அடிமையாக்க மாட்டார்கள் என்பதை நன் பல இடங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. நாடுகளுக்கு இடையில் உள்ள தூரம் நவீன போக்குவரத்து முறைகளினால் மிகவும் சிறிதாகியுள்ளது.

உலமயமாக்கல் அதாவது globalization எனும் அதிவேக சர்வதேச முன்னெடுப்புகளால் மக்கள் நாடு விட்டு நாடு பெயர்ந்து வாழ்வது மிகவும் சுலபமாகி விட்டது.

மேலைநாடுகளின் முற்போக்கான வாழ்க்கை முறைகளைத் தவறாக நாகரீகம் எனும் பார்க்கும் மனோபாவம் எமது பின்புல நாடுகளில் நிலவி வந்த காரணத்தினால் எதைக் கலாச்சார சீரழிவு அல்லது பண்பற்ற வாழ்க்கை என்று விபரிக்கின்றோமோ அது எமது பின்புலநாடுகளில் அதாவது கலாச்சாரங்களை வலிமையாக கடைப்பிடித்து வரும் சமுதாயத்தில் வெகுவேகமாக உள்வாங்கப்பட்டு வருவதைப் பார்க்கும் போதுதான் உண்மையிலே கலாச்சாரத்திற்கும், பண்பிற்குமுள்ள வித்தியாசம் விளங்குகிறது..

ஒரு மனிதனுடைய அடையாளம், அவனின் கலாச்சாரச் செறிவு அவன் மற்றவர்களுடன் பழகும் பண்பிலும், அடுத்தவரிடத்தில் காட்டும் அன்பிலும் அவனிடம் குடிகொண்டிருக்கும் மனிதாபிமானத்திலுமே தங்கியுள்ளது.

கலாச்சாரத்தை பாதுகாப்பதில் முன்னனியில் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு அடையாள ஆடைகளை அணிந்து கொண்டு இனவிரோதத்தையும் இனக் குரோதத்தையும் வளர்த்து குழுநிலை மனப்பான்மையில் வாழ்வதென்பது ஒரு பண்பான சமூகத்தின் நாகரீகமாகாது.

அதேபோல அரைகுறை ஆடையணிந்து மனம்போன போக்கிலே வாழ்வதுதான் நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கு எடுத்துக்காட்டு என்று எண்ணிக் கொள்வதும் தவறாகும்.

நாம் வாழும் இடங்களில், பணிபுரியும் தளங்களில் மற்றவர்களோடு பழகும் வகையிலும், நாம் பண்பாக நடந்து கொள்ளும் முறையிலும் “: அடடா , இவர்தான் ஒரு தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்” என மற்றவர்கள் கெளரவத்துடன் பார்ப்பது ஒன்றே நாம் பிறந்த மண்ணுக்கும் எமது தொப்புள்கொடி உறவுகளுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்..

என் இனிய அன்பு உள்ளங்களே ! இன்னும் ஒரு நூறுவாரம் உங்களுடன் இம்மடல் வழியாகத் தொடர்பு கொள்ளும் அளவிற்கு என் விரல்களில் வலிமையையும், இச்சிறிய சாதாரணமான ஒரு புலம்பெயர் தமிழனின் மடலைப் பிரசுரிக்கும் அன்பு மனதை வல்லமையினருக்கும் கொடுக்க அந்த எல்லாம் வல்ல என் மனம் வாழும் அண்ணாமலையான் துணை வேண்டி இம்மடலில் விடைபெறுகிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்பான வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க