சக்தி சக்திதாசன்

 

europe2 eurpe1

 

அன்பினியவர்களே !

கனிவான வணக்கங்கள்

இங்கிலாந்திலே நடக்கவிருக்கும் ஜரோப்பிய தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஓ , சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்றதும் ஏதோ பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்று எண்ணி விடாதீர்கள்.

சூடு அரசியல்வாதிகள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் தான் படுவேகமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் தேர்தல்கள் அனைவற்றிலும் மக்களின் ஆர்வம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. காரணம் அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே காரணம்.

அரசியல் என்பது மக்களின் நலத்திற்காக மக்கள் நலன் விரும்பிகளினால் தன்னல நோக்கமின்றி இடம்பெறும் ஒரு நடைமுறை என்பது மாறி அரசியல்வாதிகள் இதன்மூலம் தாங்கள் தமக்கு அனுகூலங்களை பெருக்கிக் கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆயுதமாக்கிக் கொண்டார்கள் என்பது மக்களின் பொதுவான அபிப்பிராயமாகி விட்டது போலவே தென்படுகிறது..

ஆமாம் சில வருடங்களுக்கு முன்னால் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்ட பராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்றச் செலவீனத்தை அரசாங்கத்திடமிருந்து கோரும் வழிமுறைகளில் இருந்த தில்லுமுல்லுகளே மக்களின் இத்தகைய ஒரு அபிப்பிராய வளர்ச்சிக்கு காரணமானது.

இனி இந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுக்கு வருவோம். இந்த ஜாரோப்பிய யூனியனும் அதனுடனான ஜக்கிய இராச்சியத்தின் உறவும் தற்போது இங்கிலாந்தில் மிகவும் அதிக அளவில் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகும்.

இதற்குக் காரணங்கள் பலவுண்டு அவற்றில் முக்கியமானவை,

ஜரோப்பிய நாடுகள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடு ஒன்றில் வதிவுரிமை பெற்றவர்கள் எதுவிதக் கட்டுப்பாடுமின்றி மற்றைய ஜரோப்பிய நாடுகளில் வசிக்கலாம் எனும் விதியும் அவ்விதியின் துணையோடு இங்கிலாந்துக்குள் நுழைந்து வேலயற்றோர் பட்டியலில் தம்மை இணைத்துக் கொண்டு அரசாங்க உதவிப்பணத்தைப் பெற்று வாழும் ஜரோப்பிய மக்களின் அதுவும் குறிப்பாக கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் எண்னிக்கைப் பெருக்கமும்.

இங்கிலாந்து நாட்டுச் சட்ட திட்டங்களின் மீது ஜரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டு விதிகள் இங்கிலாந்தின் இறைமைக்கு விடுக்கப்படும் சவால் என பல மக்களின் மனதில் ஒரு பொது அபிப்பிராயம் ஏற்பட்டிருப்பது.வும்

இவற்றில் நான் முதலாவதாக குறிப்பிட்டிருந்த பிரச்சனையின் அழுத்தமே தற்போது மக்கள் மனங்களில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜரோப்பிய ஒன்றியத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட ரொமேனியா, பல்கேரியா போன்ற முந்தைய ரஷ்ய ஆதிக்கத்திலிருந்த நாடுகள் ஜரோப்பிய யூனியனில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இணைந்ததன் பலனாக இவ்வாண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வந்த ஜரோப்பிய சட்டத்தின் பிரகாரம் அந்நாட்டுப் பிரஜைகள் எதுவித கட்டுப்பாடுகள் இன்றி இங்கிலாந்துக்குள் நுழையும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் விக்டோரியா பேரூந்து நிறுத்தத்தில் பல பேரூந்துகளில் இவ்விரண்டு நாட்டைச் சேர்ந்த பலர் இங்கிலாந்துக்கு வந்த வண்ணம் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்பதுவும், பொருளாதாரச் சீர்படுத்தலுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் கடுமையான பொருளாதாரக் கொள்கைக் கட்டுப்பாட்டின் விளைவாக மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகளும் இம்மேலதிக மக்களின் வருகையால் மேலும் அதிகரிப்பதான எண்ணம் அனைத்து மக்கள் மனங்களையும் ஆட்டிப் படைக்கின்றது.

இதுவே தற்போதைய இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? அன்றி வெளியேறுவதா? எனும் ஒரு விவாதத்தைப் பல அரசியல் கட்சிகள் மத்தியில் ஆரம்பித்து வைத்துள்ளது.

இங்கிலாந்திலேயே முதல் தடவையாக் இரு கட்சித் தலைவர்களிடையே பகிரங்க விவாதம் இவ்விவகாரத்தில் சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது,

இதுவரை நடந்த கருத்துக் கணிப்புகளின்படி ஜரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான வாதத்திற்கே மக்களின் ஆதரவு அதிக அளவில் இருப்பதாகத் தென்படுகிறது.

ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து அங்கம் வகிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவோர் இவ்வொன்றியத்திலிருந்து வெளியேறுவது பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை மிகப்பெரிய அள்வில் பாதிக்கும் எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் ஜக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதி வியாபாரத்தில் நேரடியாகவும், மறைமுகவும் எத்தனையோ ஆயிரம் ஜக்கிய இராச்சிய மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது என்கிறார்கள்.

தற்போதைய பிரதமர் தமது கட்சி பெரும்பான்மை பலத்துடன் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்குமானல் 2017ம் ஆண்டு ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்தின் உள் இருக்க வேண்டுமா இல்லையா என்று பொது மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவேன் என்று உறுதியளித்திருக்கிறார்.

இருப்பினும் தனது கருத்தாக தான் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை விரும்பவில்லை என்றும் தற்போது இருக்கும் உடன்படிக்கைய மாற்றியமைத்து ஜரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பையும் விதிகளையும் மீள்பரிசோதனை செய்வதே தனது நோக்கம் என்றும் டேவிட் கமரன் அவர்கள் கூறுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஏறக்குறைய இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளார். அவரது கொள்கையின் படி தமது கட்சி ஜரோப்பிய ஒன்றியத்தில் சில நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதோடு இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் சட்டங்கள் ஏதாவது ஜரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனும் பட்சத்தில் அதை ஒரு பொது கருத்து வாகெடுப்பின் முடிவின்படியே அமுல் படுத்தாலாம் எனும் சட்டத்தைக் கொண்டு வருவது என்கிறார்.

கூட்டரசாங்கத்தின் மற்றைய பங்காளிக் கட்சியான லிபரல் கட்சியோ முழுவதுமாக தன்னை ஜரோப்பிய ஒன்றியத்துள் புதைத்துக் கொண்டுள்ளது. எனலாம்.

ஆனால் இன்றைய மக்களின் மனவோட்டத்தைப் பிரதிபலிப்பவராக கோலோச்சும் தலைவர் ” ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி” இன் தலைவர் நைஜல் வெராக் என்பரே !

இவரோ இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே வருவது ஒன்றுதான் இங்கிலாந்தின் மீட்சிக்கு வழி என்கிறார்.

புதிதாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்துக்குள் நுழையும் உரிமை அவர்களுக்கு இருக்கும் வரை இங்கிலாந்தின் வெளிநாட்டுக்காரரின் குடியேற்றக் கட்டுப்பாட்டை அமுலாக்க முடியாது என்கிறார்.

அதுமட்டுமல்ல அவரது மற்றுமொரு வாதம் சிந்திக்க வைக்கிறது.

ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருவோர் எத்துறையிலும் திறமை மிக்கவர்களாக இருக்க வேண்டியதில்லை ஆனால் ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி வெளிநாட்டவரின் வருகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள அதாவது கிழக்காசிய நாடுகளில் உள்ள திறமை மிக்கவர்கள் இந்நாட்டிற்கு வருவதன் மூலம் இந்நாடு வளமிக்கதாக முடியும் என்கிறார்.

இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள படித்த , திறமை மிக்கவர்களை உள்ளே அனுமதிக்காமல், ஜரோப்பாவில் உள்ள கல்வியறிவில்லாதவர்களை வரவிடுவதில் என்ன இலாபம் என்கிறார்.

ஆனால் இவரது கட்சி ஏனைய விடயங்களில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது பலருக்கு புரியாமல் இருப்பதே இவருக்கும் இவரது கட்சிக்கும் உள்ள ஒரு பின்னடைவு.

அத்தோடு வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு வருவோரைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் இவரது ஆக்ரோஷமான் வாதம் இவரது கட்சிக்குள் பல இனத்துவேஷிகளை உள்ளடங்கியுள்ளார்கள் போலவும் தெரிகிறது.

எது எப்படி இருப்பினும் இன்றைய இங்கிலாந்து ஒரு புதுச் சந்திப்பில் நிற்கிறது இதன் பயணம் எந்தத் திசையை எடுக்கப் போகிறது என்பதே எம்முன்னே தொங்கும் கேள்விக்குறி !

இதற்கான விடை காலதேவனின் கரங்களிலோ ?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *