பேரிழப்பு
ஐம்பூதங்களில் ஒன்றின்
நெடு நீள நாக்குகள்
அவனை சுவைத்துத் தின்கிறது
இலக்கியத்தின் இடுக்கு வழி நுழைந்து
புதுத் தெரு புகுந்தவன்..
அவனைப் பற்றிய விளக்கத்தை தவிர..
எதனைக் கேட்டாலும்
பதில் வரும்
எத்தனையோ சிந்தனைகள்,
கலைகள் குறித்த தொலைநோக்கு
புத்திக்குள் இத்தனையும்
குத்தியேற்ற முடியுமாவென்ற
பெருவியப்பு சகலருக்கும்
அத்தனையும், அத்தனையும்
வெண் புகையுடன் எரிகிறது
அவன் கபாலத்தை பொசுக்கும் வலு
தீ நாவிற்கு இருந்தாலும்,
அவன் உடலின் மற்ற பாகங்களை
நக்கித் தின்றது போல்
அத்தனை எளிதாக
இயலாது அவன் மூளையை..
அவன் மூளையுள் நிறைந்தவை
புகையோடு காற்றில்
கலந்துயர்ந்து எழுகிறது
அவன் இறப்பு அவனைத்
தெரிந்த சகலருக்கும் பேரிழப்பு
அவனுக்கான இறுதி சொட்டுக் கண்ணீர்
மயானத் தரையில் விழுந்து மறைகிறது..