மாதவன் இளங்கோ

அந்த உயர்ரக நாயை சமீபத்தில் ஒரு நாய் கண்காட்சியில் வாங்கினேன். நாக்கைத் தொங்கவைத்துக்கொண்டும், வாலை ஆட்டிக்கொண்டும், பாசத்துடன் என் அருகில் வந்து நின்ற அதன் கருப்புநிற கண் அழகிலும் அதன் சுறுசுறுப்பிலும் மயங்கி அதை வாங்கிவிட்டேன். இருப்பினும் அந்த வாலை ஒழுங்காக கவனிக்கத் தவறிவிட்டேன்.

நல்ல நாய்தான். ஆனால், அந்த வால்?

அந்த நாய்க்கு ‘ரேகோ’ என்ற பெயர் வைத்தேன். ரேகோ அதிபுத்திசாலித்தனமான நாய் என்றும், அதற்கு பிஸ்கட் மற்றும் மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நாயை விற்றவன் கூறினான். பிஸ்கட் தருகிறேன் என்றால் போதும் எதையும் செய்துவிடும். பந்தைத் தூக்கிப் போடுவேன், ஓடிச்சென்று கவ்விக்கொண்டு வரும். பிஸ்கட் தருவேன். அமைதியாய் உட்கார் என்பேன், உட்காரும். பிஸ்கட் தருவேன். நான் தேடிக்கொண்டிருந்த செருப்பை கூட ஒருமுறை கண்டுபிடித்துக் கொண்டு வந்தது. பிஸ்கட் தந்தேன். அதன் அறிவைப் பற்றி நண்பர்களிடம் பெருமையோடு பேசினேன்.

ஆனால், அந்த வால்?

அது ஏன் எப்போது பார்த்தாலும் சுருண்டுகொள்கிறது? ‘வாலை சுருட்டிக்கொள்ளாதே’ என்றேன். கேட்கவில்லை. ‘பிஸ்கட் stressதருகிறேன்’ என்றேன். கேட்கவில்லை. என் மீதான மரியாதையும், அன்பும் பிஸ்கட் தரும் வரையில் மட்டும் இல்லை, நான் இடும் கட்டளைகள் அதற்குப் பிடித்ததாகவும் இருக்கும் வரையில் தான் என்று புரிந்து கொண்டேன்.

அன்பாக எடுத்துச் சொன்னேன். கேட்கவில்லை. கெஞ்சினேன். சாட்டை செய்யவில்லை. வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். அதன் நான்கு கால்களிலும் விழுந்து கதறினேன். ம்ஹும்! பயனில்லை. கோபம் கொண்டு அடித்தும் நிமிரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

வகைவகையான பிஸ்கட்டுகள் வாங்கித் தந்தேன். அத்தனையும் தின்றுவிட்டு வாலை சுருட்டிக்கொண்டு, வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்பொட்டுக்கொண்டு எப்போதும் போல் கர்வத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தது.

நான் ஒரு சைவி. இருப்பினும் சமரசம் செய்துகொண்டு அதற்கு மாமிசத்துண்டுகளை நானே சென்று வாங்கி வந்து கொடுத்தேன். மசியவில்லை. அந்த பாழாய்ப்போன வாலை நிமிர்த்த நேர்மையுடன் நான் எடுத்த அத்தனை பகீரத பிரயத்தனங்களும், என் தியாகங்களும் வீணாய்ப் போயின.

ஒருநாள் வாலோடு ஒரு குச்சியை சேர்த்துக் கட்டி வைத்துவிட்டேன். வால் சுருண்டுகொள்ளவில்லை. அழகாக நீண்டிருந்தது. அது எனக்குப் பிடித்திருந்தது. ரசித்தேன். ‘பார், எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்று அதற்கும் கண்ணாடியில் காண்பித்தேன். அது ஆமோதிப்பது போலும் இல்லாமல் மறுப்பது போலும் இல்லாமல் வித்தியாசமான பார்வை வீசியது. ஆனால், அந்தப் பார்வையில் கர்வம் மட்டும் மாறவில்லை.

நிறைய மாமிசம் வாங்கித்தந்தேன். உயர்தர ‘சோப்பு’ போட்டு என்னுடைய பிரத்யேக குளியல் தொட்டியில் எல்லாம் வைத்து க் குளிப்பாட்டினேன். கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியதையெல்லாம் வாங்கித் தந்தேன். உண்மையில் ஒரு நாயை அப்படி இதுவரை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். அந்த ஒரு வாரம் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டேன். செய்ய வேண்டியதை எல்லாம் நேர்மையோடும் அன்போடும் செய்தேன்.
இதற்கு மேல் ரேகோ வாலை சுருட்டிக்கொள்ளாது, வால் இனி நீண்டுதான் இருக்கும் என்று நம்பினேன். அது நன்றியுள்ள பிராணி ஆயிற்றே என்று எண்ணி, அன்போடு தடவிக்கொண்டே, அந்தக் குச்சியை மெதுவாகப் பிரித்து எடுத்தேன். அடுத்த நொடி சுருண்டுவிட்டது அந்த ‘திமிர்பிடித்த நாயின் திமிர்பிடித்த வால்’!

வெறுத்துப்போய் அந்தக் குச்சியை அதன் மேலே வீசியெறிந்தேன்.dogtail2

நண்பனிடம் என் கவலையைப் பகிர்ந்துகொண்டேன். “எல்லா நாய்களும் அப்படித்தான். ‘ நாய் வாலை நிமிர்த்த முடியாது’. அது சுருட்டிக்கொள்ளத்தான் செய்யும். அதை மாற்ற முயன்று நேரத்தை விரயம் செய்யாதே.” என்று அறிவுரை வழங்கினான். இது முன்னரே தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணி வருந்தினேன்.

உயர் ரக நாய் என்று கூறி என்னிடம் விற்றவன் மேல் எனக்கு அத்தனை கோபம் வந்தது. மற்றவர்களை மதிக்காமல், தனக்குத் தான் மட்டும்தான் என்றும், தன்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன் என்று கர்வம் பிடித்து சுருண்டு கிடக்கும் இந்த வாலைக் கொண்ட நாய் என்ன பெரிய உயர் ரகம்?

இறுதியில் அந்த நாயைத் துரத்தி அடித்துவிடுவது என்று முடிவு கட்டினேன்.

இதற்கு மேல் இந்த நன்றிகெட்ட நாய்களை வாங்கக்கூடாது, வாங்கினால் ஒரு பூனையைத் தான் வாங்க வேண்டும். ஆனால், பூனை வால் சுருட்டிக்கொள்ளும் இயல்புடையதா? நண்பனிடம் கேட்க வேண்டும்.

இல்லை. இதோ, இது தான் என் இறுதியான முடிவு – வாலை சுருட்டிக்கொள்ளாத எந்த பிராணியானாலும் பரவாயில்லை, நான் வாங்கத் தயாராயிருக்கிறேன். அது, புலியாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் மீது எனக்குத் துளி பயமில்லை.

எந்தப் பிராணி என்பது முக்கியமில்லை. ‘சுருட்டிக்கொள்ளாத வால்’ எனக்கு மிக முக்கியம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *