— சக்தி சக்திதாசன்.

U.S. Journalist James Foley Beheaded by Islamic State Militants in Iraq
U.S. Journalist James Foley Beheaded by Islamic State Militants in Iraq

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

நாடுகளுக்கிடையேயுள்ள தூரம் குறைந்து, ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மற்றைய நாட்டினர் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒருநாட்டின் பொருளாதாரம் மற்றொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன் எப்போதுமில்லாதவாறு இப்போது தங்கியுள்ள ஒரு காலமிது.

இனங்களுக்கிடையேயான கலாச்சார மேம்பாட்டை நன்கு புரிந்து கொண்டு மனிதநேயத்தோடு மற்றவர்களை அனுசரித்து நடக்கும் வகைக்கு ஏற்ற ஒருசூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையில் இத்தகைய ஒரு பொன்னான காலத்தில் இன்றைய உலகம் எந்த ஓர் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது ?

எமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதமான இயற்கைப் பரிணாமத்தை ரசிக்காமல் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். ?

ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக இலட்சிய நோக்கை நோக்கி முழு பிரயத்தனத்துடன் முன்னேற முயற்சிப்பது தவறாகாது.

தமது தலைமுறையை விடத் தமது சந்ததியினர் வாழ்வில் மிகவும் பல செளகரியங்களுடன் வாழ வேண்டுமென்பதற்காக அயராது உழைப்பதும்தவறாகாது.

ஆனால் இன்றைய உலகிலோ மதத்தின் பெயரால், இனங்களின் பெயரால், மொழியின் பெயரால் அனாவசியமான போர்கள் தொடுக்கப்பட்டு இலட்சக்கணக்கான மனித உயிர்கள் வீண் வீம்புக்காக பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மதமோ அன்றி, புரிந்துணர்வு கொண்ட பெரியோர்களோ என்றுமே தம்முடைய நம்பிக்கைக்காக மற்றைய உயிர்களைப் பறிப்பதைப் போதிக்கவுமில்லைஅன்றி ஏற்றுக் கொள்ளவுமில்லை.

ஆனால் மதத்தின் பால் அன்பு கொண்டவர்கள் என்று கூறுவோர்களின் வெறித்தனமான நடவடிக்கைகள் இன்றைய நூற்றாண்டு மனித நாகரீகத்தையே எள்ளி நகையாடுகிறது.

நான் சமீபத்தில் எனது காரில் வேலைத்தளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில் வானொலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைச்செவிமடுத்தேன். சமீபத்தில் ஈராக்கில் கோரமாகக் கழுத்து வெட்டப்பட்டு மரணமெய்திய அமெரிக்க  ஊடகவியலாளரின் மரணத்தைப் பற்றிய கருத்தாடல் நடந்து கொண்டிருந்தது.

அப்போது வானொலியில் அக்கருத்தாடலில் பங்கு பற்றிய நேயர் ஒருவர் , இப்படியான போர்ச்சூழலுக்குள் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியளாளருக்குத் தாம் ஈடுபடும் செயலின் பயங்கரம் புரிந்திருக்க வேண்டும். பின் எதற்காக நாம் அவருக்காகப் பரிதாபப் பட வேண்டும் எனும்வகையில் கருத்துத் தெரிவித்தார்.

அவர் கூற்றில் இருக்கும் ஓரளவு உண்மையையும், தனது கருத்தைச் சொல்லும் உரிமை அவருக்கு இருப்பதையும் ஏற்றுக் கொண்டாலும் எனக்குஅக்கருத்து மனதில் ஒருவித சலனத்தை ஏற்படுத்தியது.

இன்றைய நவீன தொலைக்காட்சி மயமான வாழ்க்கைச் சூழலில் நாம் எமது இல்லங்களில் இருந்து கொண்டே 24 மணிநேர செய்தியறிக்கைகளின் மூலம் பல மைல் தொலைவிலுள்ள நாடுகளில் நடக்கும் பயங்கரமான யுத்தங்களைப் பார்த்துப் பரிதாப்படுகிறோம், அன்றி விமர்சனம் செய்கிறோம்.

இத்தகைய காட்சிகளை எம் கண்முன்னால் கொண்டு வந்து கொடுப்பவர்கள் யார்? அத்தகைய பயங்கரப் போர்முனைகளில் தமது உயிரைப் பணயம் வைத்துப் படம் பிடிக்கும் படப்பிடிப்பாளர்களும் அதற்கு  முறையான விமர்சனங்கள் கொடுத்து அவற்றை உயிர்ப்பிக்கும் ஊடவியலாளர்களும் தானே !

தமது உயிர்களுக்குப் பயந்து நாம் வாழும் நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அங்கு செல்லாதிருந்தால் யார் எமக்கு நாம் வாழும் நாட்டின் கோணத்தில் அங்கு நடப்பவைகளை உண்மையுடன் எடுத்துச் சொல்லுவது ?

ஒரு நாட்டின் போர்முனையில் அப்போர் தாம் வேண்டாத மக்கள் தம்மீது திணிக்கபடுவதையும், அம் மக்கள் படும் அவஸ்தையை உலகின் கவனத்திற்கு, சர்வதேச நாடுகளின் மட்டத்தில் கொண்டுவரும் அளப்பரிய பணிகளைச் செய்து வருகிறார்கள் இவ்வூடகவியலாளர்கள்.

வெளிநாடுகளில் நடக்கும் செய்திகள் உண்மை வடிவத்தில் எமக்குக் கொண்டு வரப்பட வேண்டும் !

அதை நாம் இருந்த இடத்தை விட்டு அசையாமல் ரசிக்க வேண்டும் !

ஆனால் அவ்வூடவியலாளர்கள் அகோரமான முறையில் அக்கிரமக்காரர்களின் கையால் கொலைசெய்யப்படும் போது மட்டும் அது அவ்வூடகவியளாளரின் பொறுப்பு என்று இலகுவாகக் கூறி விட வேண்டும் !

இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

படம் உதவிக்கு நன்றி: http://www.people.com/article/james-foley-american-journalist-beheaded

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *