பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32

0

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

 

திரு தமிழன்பன் அவர்கள் எழுப்பிய கேள்வி :

செம்மொழியின்  இன்றைய பயன் அதிலமைந்த  செவ்விலக்கியம் இன்றைய இலக்கியத்திற்கு  ஆதர்சமாக இருக்கலாம் என்பது மட்டும்தானா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் செயல்களில் செம்மொழியின் ஆதர்சம் முக்கிய  பங்கு வகிக்கிறது. ஆதர்சம்  வெளிப்பட இலக்கியம் ஒரு  இடம். தமிழின் செவ்விலக்கியத்தின் சிறப்பால் அதன் படைப்புத் திறன்களிலிருந்து இன்றைய தமிழ் இலக்கியம் எடுத்துச் சோதனை செய்ய அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது.

செம்மொழியின்  ஆதர்சத் தாக்கம் அறிவுப்  படைப்பிலும் இருக்கலாம். ஐரோப்பிய அறிவுத் துறை வளர்ச்சியில், கிரேக்கம், லத்தீன் ஆகிய செம்மொழிகளில் உள்ள சிந்தனைகளின் தாக்கத்தையும் தொடர்ச்சியையும் காணலாம். ஒரு துறையின் உதாரணத்தை மட்டும் தருகிறேன். தற்கால மொழியியலில் சாம்ஸ்கியின் இல்க்கணக் கொள்கை புதியது; செல்வாக்கு மிகுந்தது. அதன் அடிப்படைக் கருத்து, ஒரு மொழியைப் பேசும் எல்லோருடைய மனதிலும் அதன் அடிப்படை இலக்கண அறிவு உள்ளார்ந்து இருக்கிறது; சூழலிருந்து புலன்களின் மூலம் கற்றுப் பெறுவது மேல் மட்ட அறிவு மட்டுமே என்பது. இது கி.மு, நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளேட்டோ என்ற கிரேக்கத் தத்துவ அறிஞன் எழுப்பிய ‘நமக்குத் தெரிந்தது நமக்கு எப்படித் தெரிகிறது?’ (‘How do we know what we know?’) என்ற கேள்விக்கு மொழியறிவைப் பொறுத்தவரை சாம்ஸ்கி தரும் விடை. இந்த்க் கேள்விக்குப் பதிலளித்த பதினேழாம் நூற்றாணடைச் சேர்ந்த, நவீன அறிவியலின் தந்தை என்னும் புகழ்பெற்ற, பிரெஞ்சு தத்துவ அறிஞன் டாஸ்கர்ர்ட் (Descartes) உள்ள்ளார்ந்த அறிவு (innate knowledge) என்ற ஒன்று இருக்கிற்து என்றார். இந்தக் கருத்தைச் சாம்ஸ்கி இலக்கண அறிவை விளக்கப் பயன்படுத்துகிறார். இப்படி ஐரோப்பிய செம்மொழிக் காலத்தில் எழுப்பிய ஒரு கேள்வி பல நூற்றண்டுகளாகத் தொடர்ந்து பல விதங்களில் பதிலளிக்கப்ப்பட்டுப் புதிய அறிவியல் கொள்கைகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் இத்தகைய  அறிவுத் தொடர்ச்சிக்கு  வாய்ப்பு குறைவு. சமயம் சாராத, அறிவு சார்ந்த தத்துவச் சிந்தனை தமிழில் தனியாக இல்லை. இலக்கியத்தில் ஆங்காங்கே அறிவுச் சிந்தனைச் சிதறல்களை ஒரு வேளை காணக் கூடும். இவற்றையும் அறிவுத் துறைகளில் ஈடுபட்டுளள தமிழ் அறிந்தவர்கள் கண்டு கொண்டு புதிய கொள்கைச் சிந்தனைகளை முன் வைப்பதில்லை. இவர்களுக்குச் செம்மொழித் தானத்தில் இருப்பது ஆங்கிலமே. மரபுத் தமிழ் இலக்கணத்தில் இலக்கணம் பற்றிய சில பொது உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழ் அறிந்த மொழியியலாளர்கள் அவற்றில் துவங்கிப் புதிய இலக்கணக் கொள்கைகளை முன் வைப்பதில்லை. இவர்கள் சாம்ஸ்கியின் இலக்கணக் கருத்துகள் தொல்காப்பியத்தில் இருக்கின்றன என்று சொல்வதிலேயே விருப்பம் காட்டுவார்கள். அதாவது, பழையதிலிருந்து புதியதை உருவாக்காமல் புதியதைப் பழையதில் பார்ப்பதில் தான் இவர்களுக்கு ஆர்வம். ‘எனக்கு இன்று தெரிந்தது தொல்காப்பியருக்கு அன்றே தெரிந்திருந்தது’ என்று சொல்வது அவரைச் சிறுமைப் படுத்துவது ஆகும். மரபு வழி இலக்கண அறிஞர்கள் ‘தொல்காப்பியர் எல்லாம் சொல்லி விட்டார்; இனி புதிதாகச் சொலவதற்கு ஒன்றும் இல்லை’ என்று நின்று விடுவார்கள். இது தமிழரின் அறிவு வளர்ச்சித் திறனைச் சிறுமைப் படுத்துவது ஆகும்.

செந்தமிழில் ஒழுக்கம் சார்ந்த அறக் கருத்துகள் இருக்குமளவு அறிவு சார்ந்த தத்துவக் கருத்துகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதாலும், இருக்கும் அறிவையும் முற்றும் முடிந்த முடிபாகப் பார்க்கும் கலாச்சார நோக்கு இருப்பதாலும் தமிழ்ச் செம்மொழி தமிழில் புதிய அறிவு உருவாவதற்கு ஆதர்சமாக் இல்லை

மொழியின்  உள்ளடக்கம் மட்டுமல்ல, மொழியின் மீதும் செம்மொழியின் வீச்சு இருக்க வாய்ப்பு உண்டு. இது வழக்கிழந்து போன இலக்கண வடிவங்களை உயிர்ப்பிப்பது அல்ல. லத்தீன் இலக்கணம் இன்றைய ஆங்கிலத்திற்குப் பொருந்தாது. ஆனால், அறிவியல் துறையின் சொல்லாக்கத்தில் செம்மொழிகளான லத்தீனுக்கும் கிரேக்கத்துக்கும் இன்று பங்கு இருக்கிறது. தமிழிலும் கலைச்சொல் ஆக்கத்தில் செம்மொழிக் கால இலக்கியங்களும் ஆவணங்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை செம்மொழி தரும் கலைச் சொற்கள் அன்றாட மொழி வழக்கிற்காக அல்ல; சிறப்புப் பயிற்சி தேவைப்படும் துறைகளில் வல்லுநர்கள் பயன்படுத்தும் நிலையிலேயே அவை இருக்கின்றன். மேலும், தமிழ்ச் சொற்கள் தமிழ்ச் சமூகத்தில் அறிவுத் துறை வல்லுநர்களால் அவர்கள் ஆய்வுக் கருத்துகளை வெளியிட உருவாவதில்லை. அவர்களாலோ, த்மிழ்ப் பயிற்சி பெற்றவர்களாலோ ஆங்கிலக் கலைச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே உருவாகின்றன. இந்த அளவில் கலைச் சொறக்ளில் தமிழ்ச் செம்மொழியின் ஆக்கம் சுயம்பாக வரும் ஒன்றல்ல; பரந்த பயன்பாட்டில் உள்ள ஒன்றும் அல்ல.

தமிழ்ச் செம்மொழியின் சிறப்பு அதைப் போற்றிப் புகழவதில் இல்லை; அந்த மொழி இன்றைய தமிழ் மொழிக்கும் தமிழரின் சிந்தனைக்கும் பயன் படும் விதத்திலும் தரத்திலுமே இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *