பாலை பட பாடல் வெளியீட்டு விழா – நடிகை ஷம்மு பேச்சு
செம்மை வெளியீட்டகம் தயாரிப்பில் உருவாகி வரும் பாலை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. டெலிபோன் பவன் சாலையில் உள்ள யாளி ரெசிடென்சியில் நடந்த விழாவில் கலந்து கொள்ள ஈரோடு, மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். அனைவரையும் தயாரிப்பாளர் நாகை ரவி, இயக்குனர் ம.செந்தமிழன் ஆகியோர் வரவேற்றார்கள்.
படத்தின் நாயகி ஷம்மு இந்த விழாவில் பேசியதாவது:
“பொதுவா ஒரு கதையை கேட்டவுடனே இந்த படத்தை ஏன் பண்ணக் கூடாது, ஏன் பண்ணணும் என்று இரண்டு கேள்விகள் எனக்குள் கேட்டுக் கொள்வேன். இந்த கதையை கேட்டதும் எனக்கு தோன்றியது உடனே நடிக்கணும் என்றுதான்.
களறி சண்டை போட வேண்டும், மரத்தில் ஏற வேண்டும் என்று சில இக்கட்டான விஷயங்களை டைரக்டர் செந்தமிழன் சொன்னாலும், எனக்கு அதெல்லாம் ரொம்ப ஜாலியாக பட்டது. அமெரிக்காவில் சாலையோரத்தில் மரங்களைப் பார்த்தால் அதில் ஏற வேண்டும் என்று பலமுறை நினைப்பேன். ஆனால் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. இந்த படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. நான் ஆணாகப் பிறந்து, நடிக்க வந்திருந்தால் ஆக்ஷன் ஹீரோ ஆகியிருப்பேன். அந்தளவுக்கு எனக்கு ஆக்ஷன் மேல் ஆசை உண்டு. இந்த படம் எனக்குள் இருக்கும் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கிறது.
வில் அம்புடன் ஒரு பைட் பண்ணியிருக்கேன், கையில் தீப்பந்தம் பிடிச்சு ஓடியிருக்கேன். ஆக்ஷன் சைட்ல இப்படின்னா, அழகான காதலும் இருக்கு எனக்கு. யாரை பார்த்தாலும் இலை தழை ஆடை விஷயத்தைதான் கேட்கிறார்கள் என்னிடம். நீங்கள் ஸ்டில்களில் பார்த்தது போல இலையும் தழையும் அணிய முடியுமா என்ன? அது அந்த வடிவத்தில் செய்யப்பட்ட துணியால் ஆன ஆடைதான். இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், படக்குழுவினர் செய்து கொடுத்த ஆபரணங்கள்தான். இந்த கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் நடப்பது. அதனால் ஆபரணங்களுக்கு பதிலாக அவர்கள் மலர்களைதான் அணிந்தார்கள். அதிலேயே எனக்கு தோடு, மூக்குத்தி எல்லாம் செய்து கொடுத்திருந்தார்கள்.
அது வாடாமல் இருந்திருந்தால் அமெரிக்காவுக்கே கூட எடுத்துக் கொண்டு போயிருப்பேன் தெரியுமா!” என்றார் ஒரு குழந்தையின் துள்ளலுடன்.
ஒளிப்பதிவு – அபிநந்தன் இசை -வேத் சங்கர் சுகவனம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ம.செந்தமிழன் தயாரிப்பு -செம்மை வெளியீட்டகம்