காகிதக் கப்பல்
இசைக்கவி ரமணன்
பள்ளிக் கூடம்; பிற்பகல் பொழுது
வெள்ளி போலப் பளபளத்த
தகரக் குழாய்கள் சற்றே கறுத்தன
கூரைக் கதவைத் தட்டித் தட்டிப்
பொத்தல்கள் வழியே எத்தர்கள் போலப்
பொத்துக் கொண்டு வந்தது பெருமழை
வானம் கொடுத்த ஆரவாரத்தை
வாங்கிக் கொண்டது மழலைக் கூட்டம்
மொழிகளை மிஞ்சும் மொழியைக் கேட்டு
விழுந்த மழையெலாம் வியந்து கொண்டது
வகுப்புக்கும் ஒரு வகுப்புக்கும் இடையே
வகுத்துக் கிடந்த வறண்ட வாய்க்கால்
ஆடிக் காவிரி போலப் பெருகவும்
அவள் பாவாடை நனைந்து நாணியது
விடைதெரியாத கணக்கைக் கண்டு
விழித்துக் கிறுக்கி வியர்த்துக் கிடந்த
பக்கத்திற்கெலாம் அப்பால், ஒரு
புத்தம் புதிய பக்கம், அந்தப்
புத்தகத்திடம் விடைபெற்றது
கடவுளுக்கு மட்டுமே கண்ணில் தென்படும்
எழுதப் படாத கவிதை ஒன்றினை
ஏந்திக் கொண்டே இறங்கிய படியால்
காகிதம் ஒன்று கப்பலானது
கணக்குகளாலெ களங்கப்பட்டு
கண்ணீர் கழுவ முயன்று காய்ந்து
காற்றில் பறக்கும் காகிதம் இல்லை!
ஒரு மைத்துளியும் உறுத்தவில்லை
தாங்கி மட்டுமே பழக்கப்பட்ட
தன்னைத் தாங்குவதார் தெரியவில்லை
சபையறியாத என் சவலைக் கவிதையால்
சாகா வரம்பெற்றது காகிதம்
நீரில் நைந்து நலிந்து விடாது
யார்கையிலும் சிக்கிவிடாது
சீறும் புயலால் சிறிதும் அஞ்சாது
திரும்ப வராது
எனக்கே எனக்காய் விண்ணிலிருந்து
இறங்கி வந்த மழைத்துளியில்
கவிதை ஏந்திக் கனிந்த காகிதம்
கனவைப் போலக் கரைந்து கொள்ளும்
மழையை அனுப்பிய மன்னவன் காலில்
குழையும்; சிறுவிரல் குறுகுறுக்கும்
தனக்கே தனக்காய் இருந்தவன் பாடு
இதற்குப் பிறகு என்னவாகுமோ?
எனக்கெதற்கடி இந்தக் கவலை?
கொடுத்தவனுக்கு நன்றி என்பதும்
கொண்டதை முறையாய்க் கொண்டாடுவதும்
கொடுத்ததைத் திருப்பிக் கொடுப்பதுதானே !
02.11.2014 / ஞாயிறு / 07.37